தந்தை பெரியார் வாழ்நாள் முழுவதும் எதிர்ப்புகளையும் அவமானங்களையும் சந்தித்த போதிலும், தனது கொள்கைகளில் சிறிதும் தளராமல் உறுதியாக நின்றார் என்பதற்கு, கடலூரில் நடந்த நிகழ்வு தலைசிறந்த எடுத்துக்காட்டாகும்.
“செருப்பொன்று போட்டால் சிலையொன்று முளைக்கும்” என்று கவிஞர் கருணானந்தம் எழுதியது இதைப் பற்றிதான்!
1944 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் தேதி நள்ளிரவு. கடலூர் மஞ்சக்குப்பத்தில் கூட்டத்தை முடித்துவிட்டு, திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தை நோக்கி தோழர்கள் உடன் வர, கை வண்டியில் சென்று கொண்டிருந்தார் பெரியார்.
கெடிலம் ஆற்றுப்பாலத்திற்கு அருகே வந்தபோது, திடீரென்று ஒரு பாம்பு அவர் மேல் விழுந்தது தோழர்கள் பாம்பு, பாம்பு எனக் குரல்கொடுக்க, பின்னர் அது ‘தண்ணீர் பாம்பு’ என்பதால் தொடர்ந்து பாலத்தைக் கடந்துவிட்டனர். சிறிது தூரம் சென்றபின், பெரியார் வண்டியைத் திருப்பச் சொல்லியிருக்கிறார். வந்த திசையிலேயே திருப்பி, மீண்டும் வண்டி பாலத்தருகே வந்தது. பிறகு மீண்டும் திரும்பி, வண்டி தொடர்வண்டி நிலையம் சென்றது.
அய்யா ஏன் இப்படி முன்னும் பின்னுமாக வண்டியைத் திருப்பச் செய்தார்?’ என்று தொண்டர்களுக்கு ஒரே சந்தேகம். அய்யாவிடம் கேட்கின்றனர். பெரியார் விளக்கம் சொன்னார்: “நாம் பாலத்தைக்கடக்கும் போது என் மீது செருப்பு ஒன்று வீசப்பட்டது. அது நல்ல புதுச் செருப்பு. ஆனால் ஒன்று தான் வீசப்பட்டிருந்தது. அதை வைத்துக் கொண்டு நானும் ஒன்றும் செய்ய முடியாது. இன்னொரு செருப்பை மட்டும் வைத்துக் கொண்டு வீசியவரும் ஒன்றும் செய்ய முடியாது. அதனால் தான் வண்டியைத் திருப்பச் சொன்னேன். மீண்டும் போனபோது, அந்த இன்னொரு செருப்பையும் வீசிவிட்டார். இதோ இப்போது ஒரு ஜோடி செருப்புக் கிடைத்துவிட்டது” என்றார் .
.தனக்கு ஏற்பட்ட அவமானத்தையும், எதிரியின் அறியாமையையும் தந்தை பெரியார் எவ்வளவு இயல்பாக எதிர்கொண்டார் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகிறது.
எந்த இடத்தில் பெரியாரை அவமானப்படுத்த நினைத்தார்களோ, அதே இடத்தில், அவர் முன்னிலை யிலேயே ஒரு சிலைத் திறப்பு விழாவைக் கண்டார் பெரியார். 1944 ஜூலை 29 அன்று பெரியார்மீது செருப்பு வீசப்பட்ட அதே இடத்தில், அவர்தம் கொள்கையின் வெற்றியையும், பகுத்தறிவுப் புரட்சியின் வீச்சையும் உலகுக்குப் பறைசாற்ற சிலை அமைத்தார் ஆசிரியர்
கி. வீரமணி.
கடலூர் கெடிலம் ஆறு – அண்ணா பாலத்தின் அருகே, தந்தை பெரியார் வாழும் போதே அவர் முன்னிலையிலேயே அன்றைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட தந்தை பெரியாரின் இந்தச் சிலை, இன்றும் கம்பீரமாக நின்று, எதிர்ப்புக்களுக்கு அஞ்சாமல் சமூக மாற்றத்திற்காக போராடிய தந்தை பெரியாரின் அயராத பங்களிப்பையும் பார்ப்போர்க்கு எடுத்துரைக்கிறது.