சென்னையில் மாணவ-மாணவிகள், மகளிருக்கு சிறப்புப் பேருந்து சேவைகள் மாநகர போக்குவரத்துக் கழகம் பரிசீலனை

சென்னை, ஜூலை 29- மாணவ – மாணவிகள், மகளிருக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்குவது குறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 27 பணிமனைகளில் இருந்து நாள்தோறும் 3,233 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகளில் அன்றாடம் சுமார் 40 லட்சம் பேர் பயணிக்கிறார்கள்.

பெரும்பாலும் மாநகர பேருந்துகளில் கூட்டம் அலைமோதும். அதிலும் குறிப்பாக பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலக நேரங்களில் மாநகர பேருந்துகளில் கால் ஊன்ற இடம் இல்லாத அளவுக்கு கடுமையான நெரிசல் காணப்படும். இத்தகைய நெரிசல் மிகுந்த பயணத்தின்போது மாணவ-மாணவிகள் மற்றும் பெண்கள் படும் துயரங்கள் மற்றும் வேதனைகள் சொல்லி மாளாது.

இவற்றை கருத்தில் கொண்டு சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பெண் பயணிகள் அதிகமாக பயணிக்கும் வழித்தடங்களில் மகளிர் மட்டும் பயணிக்கும் வகையில் 50 மகளிர் சிறப்பு பேருந்துகளை இயக்கலாம் என்று ஆலோசித்து உள்ளது.

இதே போன்று, மாணவ-மாணவிகள் பேருந்துகளில் இருக்கையில் அமர்ந்தபடி பயணிப்பதை உறுதி செய்வதற்காக அவர்களுக்கு என தனியாக 50 (நடைகள்) சிறப்பு பேருந்து சேவை இயக்கவும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் உத்தேசித்துள்ளது.

அதாவது, பள்ளி, கல்லூரி நேரங்களில் குறிப்பாக காலை மற்றும் மாலையில் கல்வி நிறுவன வளாகங்களுக்குள் நேரடியாக சென்று பேருந்து சேவைகள் அளிக்கும் வகையில் திட்டமிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக மாலையில் கல்வி நிறுவன வளாகங்களில் இருந்து பேருந்து சேவைகளை தொடங்குவதற்கும் உத்தேசித்துள்ளது.

இதற்காக சுமார் 25 கல்வி நிறுவனங்களை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது. இதில் சுமார் 4 கல்லூரிகள் அடங்குவதோடு பெரும்பாலான பள்ளிகள் பெண்கள் மட்டும் பயிலும் மேல்நிலைப்பள்ளிகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மகளிர் சிறப்புப் பேருந்துகள் இயக்குவது குறித்தும், பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சிறப்புப் பேருந்து சேவை குறித்தும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகமானது தமிழ்நாடு அரசுக்கு பரிசீலனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *