சென்னை, ஜூலை 29- மணிக்கு 110 கி.மீ வேகத்திற்கு மேல் செல்லும் வகையில் 78 சதவீதத்திற்கும் மேல் தண்டவாளங்கள் மேம்படுத்தப் பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் கூறியிருப்பதாவது:
இந்திய ரயில்வே கடந்த 10 ஆண்டுகளில் தண்டவாளங்களை மேம்படுத்துவதற்காக 60 கிலோ ரயில் பட்டைகள், அகலமான அடித்தள கான்கிரீட் ஸ்லீப்பர்கள், தடிமனான வெப் ஸ்விட்சுகள், நீளமான ரயில் பேனல்கள், எச்-பீம் ஸ்லீப்பர்கள் மற்றும் நவீன தண்டவாள பராமரிப்பு இயந்திரங்கள் போன்றவற்றை பயன்படுத்தியுள்ளது.
‘வந்தே பாரத்’ ரயில்கள்
இதன் விளைவாக, தண்ட வாளங்களின் வேகத் திறன் கணிசமாக அதிகரித்துள்ளது. அதாவது 78 சதவீதத்திற்கும் மேற்பட்ட தண்டவாளங்கள் 110 கி.மீ /மணி வேகத்திற்கு மேல் மேம்படுத்தப்பட்டுள்ளன.
இந்திய ரயில்வேயில் இயக்கப் படும் வந்தே பாரத் ரயில்கள் உயர் வேக ரயில்களாகும். இவை 180 கி.மீ/மணி வடிவமைப்பு வேகமும், அதிகபட்ச இயக்க வேகமாக 160 கி.மீ/மணியும் கொண்டவை.
ரயிலின் சராசரி வேகம் தண்டவாளத்தின் வடிவமைப்பு, வழியிலுள்ள நிறுத்தங்கள், பராமரிப்புப் பணிகள் ஆகியவற்றைப் பொறுத்து அமைகிறது.
முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் முன்மாதிரி ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது. விரிவான சோதனைகள் மற்றும் அனுபவங்களின் அடிப்படையில், முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் தற்போது இயக்கத்திற்கு தயாராகி வருகிறது. இவ்வாறு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.