மனைவியின் விருப்பை மீறிய, சம்மதத்தை பெறாத பாலியல் புணர்வு – திருமண வன்கலவி (Marital Rape) என ஆங்கிலத்தில் சொல்லப்படுகிறது. இதனை கிட்டத்தட்ட 150 நாடுகள் கிரிமினல் குற்றமாக அறிவித்துள்ளன. அய்ரோப்பாவிலும் அமெரிக்க கண்டங்களிலும் உள்ள நாடுகள் பலவும் இவற்றுள் அடங்கும்.
ஆசியாவைப் பொறுத்தவரை சிங்கப்பூர், இந்தோனேசியாவைத் தவிர இந்தியா, இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு போன்ற ஏனைய நாடுகள், இவ்விடயத்தில் இன்றும் பின் தங்கியே உள்ளனர். திருமணமாகி விட்டால் பெண்களின் உடல், பொருள், ஆவி அனைத்தும் கணவனுக்கே சொந்தம் என்பது, நவீன காலங்களில் பாலியல் ரீதியான அடிமைத்தனம் ஆகும். இந்த கோட்பாடு இன்றும் முற்றாக ஒழியவில்லை.
ரிதன்யா வழக்கையடுத்து இந்திய, இலங்கை ஊடகங்களில் திருமண உறவுகளில் பாலியல் வன்கொடுமை மறுபடியும் பெரும் பேசுபொருளாகி உள்ளது. ரிதன்யா விவகாரம் வெறும் வரதட்சணை பிரச்னையல்ல. வீட்டு வன்முறையும் பாலியல் வன்கொடுமையும் நிகழ்ந்துள்ளதற்கான சான்றுகள் அப் பெண்ணின் மரண வாக்குமூல ஒலிப்பதிவுகளிலும் பெற்றோரின் சாட்சியங்களிலும் வெளிவந்துள்ளன.
பெண்ணியலாளர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள், அதீத உரிமைகள் கேட்பவர்கள் என்றெல்லாம் பரிகசிக்கப்பட்டும் விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டும் வருவது நாம் அன்றாடம் காணக்கூடியதொன்று. ‘நான் பெண்ணியவாதி இல்லை’ என தோளைக் குலுக்கிக் கொள்ளும் பெண்களும் நம்மில் உண்டு.
பெண்ணிய செயல்வாதம் புரிவோரோடு நெருங்கிப் பழகினாலே, கரியின் கருமை ஒட்டிவிடும் என்பது போல தமக்கு இழுக்கு என ஒதுங்குவோரும் உண்டு. இதுவரை பெண்களுக்குக் கிடைத்த சட்டரீதியான உரிமைகளும் வாய்ப்புகளும் பெண்ணியலாளர்களால் போராடிப் பெறப்பட்டவை, தாமாக கிடைத்தவையல்ல. போராடிப் பெற்ற உரிமைகளைத்தான் தாம் பெண்ணியவாதி இல்லை என சொல்லும் பெண்கள் உள்பட அனைத்து பெண்களும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். உலகம் பூராவும் சம அந்தஸ்தும், உரிமைகளும், வாய்ப்புகளும் பெண்களுக்கு இன்னும் பூரணமாக கிடைக்கப் பெற வில்லை. பெண் விடுதலை முதலில் வீடுகளிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.
மிகவும் முன்னேற்றமடைந்த நாடுகளில் ஒன்றான அய்க்கிய இராச்சியம் மிக நெடிய பெண்ணிய போராட்ட வரலாற்றைக் கொண்டது. 1980களில், திருமணத்தில் பாலியல் வன்கொடுமை புரிவதை குற்றச் செயல் என பிரகடனம் செய்ய வேண்டுமெனப் பிரச்சாரம் செய்ய இங்கிலாந்து முழுவதும் உள்ள பெண்ணியவாதிகள் இணைந்து கொண்டமை, வரலாறு. மனைவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்யும் கணவர்களுக்கான சட்டப் பூர்வமான குற்ற விலக்கை (immunity) முறியடிப்பது ஒரு இலக்காக இருந்தது. எனினும் எந்தச் சூழ்நிலையிலும் எந்தக் காரணத்திற்காகவும் எந்த ஆணுடனும் உடலுறவை மறுக்கும் பெண்களின் உரிமைகளை வலியுறுத்துவதும் இதன் முக்கிய நோக்கமாகும். இது பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஒரு போராட்டமாக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
1970கள் இங்கிலாந்தில் பெண்களுக்கு மிகவும் பயங்கரமான காலப்பகுதியாக இருந்தது. யோக்ஷயர் ரிப்பர் (Yorkshire Ripper) என்று அழைக்கப்படும் தொடர் கொலையாளி 13 பெண்களை இக்காலப்பகுதியில் படுகொலை செய்திருந்தான். பாதுகாப்பாக இருக்க ‘பெண்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கவேண்டும்’ என காவல்துறை அறிவுறுத்தியது, ஆனால் வீடு என்பதும் பல சமயங்களில் ஆபத்து நிறைந்ததுதான் என்பதை பெண்ணியவாதிகள் நன்கு அறிந்திருந்தனர்.
இந்த தசாப்தத்தில்தான், Morgan vs The Director of Public Prosecutions என்ற முக்கியமான வழக்கில், ஒரு பெண் தன்னுடன் உடலுறவுக்கு சம்மதிக்கிறாரா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது, ஆணின் உரிமையாக பதியப்பட்டது. 1973-ம் ஆண்டில், ராயல் விமானப்படை அதிகாரியான லெப்டினன்ட் மோர்கன், தனது மூன்று சக ஊழியர்களை தனது மனைவியுடன் உடலுறவு கொள்ள வீட்டிற்கு அழைத்தார். அவள் ‘வேண்டாம்’ என்று கத்தினால் அல்லது அவளுக்கு அதில் விருப்பமில்லாததுபோல் தோன்றினால், அது ஒரு Rape fantasy என்று மோர்கன், தன் நண்பர்களிடம் கூறியுள்ளார். மோர்கனின் மனைவியை அவள் 11 வயது மகனுடன் தூங்கிக் கொண்டிருந்த படுக்கையில் இருந்து இழுத்து, மோர்கனும் அவர் நண்பர்களும் பாலியல் வன்கொடுமை செய்தனர். மோர்கன் மீது பாலியல் வன்கொடுமை குற்றம் சாட்டப்படவில்லை, பாதிக்கப்பட்டவரின் கணவர் என்பதால், முழு சட்டப்பூர்வ விலக்கு அளிக்கப்பட்டது. குற்றம் செய்ய தூண்டியமைக்கும், அச்செயல்களுக்கு உதவி புரிந்தமைக்கும் மட்டுமே குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
மூன்று ஆண்களுக்கும் தலா நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது; அதே நேரத்தில் மோர்கனுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் ஒவ்வொருவரும் மேல்முறையீடு செய்தனர். 1975-ம் ஆண்டில், சட்ட விவாதப் புள்ளியின் அடிப்படையில் இந்த வழக்கு பிரபுக்கள் சபைக்கு (House of Lords) பரிந்துரைக்கப்பட்டது.
ஒரு பெண் தனது சம்மதத்தை அளித்ததாக ‘நேர்மையாக நம்பினால்’, அது ஒரு ஆணால் அவ்வாறு நம்பப்படும் பட்சத்தில், அது நியாயமானதாக இல்லாவிட்டாலும்கூட, ஒரு ஆண் பாலியல் வன்கொடுமைக்கு தண்டனை பெற முடியாது என்று பிரபுக்கள் தீர்ப்பளித்தனர். ஒரு ஆணின் ‘நேர்மையான நம்பிக்கை’, எவ்வளவு நியாயமற்றதாக இருந்தாலும், அவர் பாலியல் வன்கொடுமை செய்தாரா என்பதை தீர்மானிப்பதில் மிக முக்கியமானது என்பது சட்டத்தில் பொறிக்கப்பட்டது. பல தசாப்தங்களாக பெண்ணிய பிரச்சாரத்திற்குப் பிறகு இந்த வாதம் இறுதியாக 2003-ம் ஆண்டு (Sexual Offences Act 2003) முறியடிக்கப்பட்டது.
1970களின் பிற்பகுதியில், பெண்ணியவாதிகள் திருமண பாலியல் வன்கொடுமை தொடர்பான சட்டத்தில் மாற்றம் வேண்டும் என்று கோரத் தொடங்கினர். இது 1978-ம் ஆண்டு பெண்கள் விடுதலை மாநாட்டில் ஒரு கோரிக்கையுடன் தொடங்கியது: ‘திருமணம் புரிந்தவரா என்ற எந்த நிபந்தனைகளும் அற்று, அனைத்து பெண்களுக்கும் பாலியல் வன்முறை அல்லது பாலியல் வற்புறுத்தல், அச்சுறுத்தலிருந்து விடுதலை’ என்ற கோரிக்கை வலிமையாக முன்வைக்கப்பட்டது.
நன்றி: ‘ஹெர் ஸ்டோரிஸ்’ இணையதளம்