சென்னை, ஜூலை 29- ‘செயற்கை நுண்ணறிவு’ தொழில் நுட்பம் குறித்து கிராமப்புற மாணவர் களுக்கு கலந்துரையாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.
‘ஏ.அய்.’ கருத்தரங்கம்
தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் சார்பில் ‘செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) ஏற்படுத்தும் தாக்கம்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னையில் நேற்று (28.7.2025) நடைபெற்றது. உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்து பேசினார்.
உயர் கல்வி துறை செயலர் பொ.சங்கர் சிறப்புரை நிகழ்த்தினார். முன்னதாக, உயர்கல்வி மன்ற துணை தலைவர் எம்.பி.விஜயகுமார் வரவேற்று அறிமுகவுரை ஆற்றினார். மன்றத்தின் உறுப்பினர் செயலர் டி.வேல்முருகன் நன்றி கூறினார். விழாவில், கல்லூரி கல்வி ஆணையர் ஏ.சுந்தரவல்லி, தொழில்நுட்ப கல்வி ஆணையர் இன்னசென்ட் திவ்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழா முடிந்த பிறகு, செய்தி யாளர்களிடம் அமைச்சர் கோவி.செழியன் கூறியதாவது: தற்போது அரசு கல்லூரிகளிலும் ஏஅய் மற்றும் அதுதொடர்பாக புதிய பட்டப் படிப்புகள் அறிமுகம் செய்யப் பட்டுள்ளன. உயர்கல்வியை அடுத்த நிலைக்கு கொண்டுசெல்ல பல புதிய திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன.
கலந்துரையாடல்
கிராமப் புற மாணவர்களும் தெரிந்துகொள்ளும் வகையில், அனைத்துத் துறைகளிலும் ஏஅய் தொழில்நுட்பம் தொடர்பான கலந்துரையாடல், நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
கருத்தரங்கில், கல்வி – வேலை வாய்ப்பில் ஏஅய் தொழில் நுட்பத்தின் தாக்கம் குறித்து கல்வியாளர்கள், நிபுணர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள், தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்துரையாடினர். எதிர்காலத்தில் கல்வி, வேலைவாய்ப்புகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏஅய்) எந்த வகையான மாற்றங்களை ஏற்படுத்தும், அதை எதிர்கொள்ள மாநில உயர்கல்வி அமைப்புகளில் எத்தகைய கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்பது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் எதிர்கால தேவைக்கு ஏற்ப தமிழ்நாடு உயர்கல்வி நிறுவனங்களில் உரிய மாற்றங்கள் செய்வது தொடர்பான ஆலோசனைகள், கருத்தரங்க முடிவில் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரையாக சமர்ப்பிக்கப்படும் என்று மாநில உயர்கல்விமன்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.