சென்னை, ஜூலை 29- சிறுநீரக உறுப்புக் கொடை முறைகேடுகளில் ஈடுபடும் மருத்துவமனைகள், மருத்துவர்கள் மற்றும் இடைத்தரகர்கள் மீது தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககம் எச்சரித்துள்ளது. அண்மையில் நாமக்கல்லில் நடந்த முறைகேடான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிறுநீரக உறுப்பு முறைகேடு
நாமக்கல் மாவட்டத்தில் முறைகேடான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான புகார் குறித்து மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககத்தின் ஆய்வு மற்றும் விசாரணைக் குழுவால் கடந்த ஜூலை 22 ஆம் தேதி கள ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.
இந்த ஆய்வில், வறுமை நிலையில் உள்ளவர்களைக் குறிவைத்து முறைகேடான ஆவணங்களைத் தயாரித்து, வணிக ரீதியாக சிறு நீரகங்களைப் பெற்று மாற்று அறுவை சிகிச்சை செய்தது கண் டறியப்பட்டது.
இந்த முறைகேட்டில் தொடர்புள்ள பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மற்றும் திருச்சி சிதார் மருத்துவமனை ஆகிய இரண்டிலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவை முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் நலன் கருதி, இதுபோன்ற தவறுகள் மீண்டும் நிகழாத வகையில், இந்த இரண்டு மருத்துவமனைகளுக்கும் வழங்கப்பட்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் இதேபோன்ற முறைகேட்டில் ஈடுபட்ட சென்னை புளியந்தோப்பில் உள்ள திருவாளர் முத்து மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உரிமம், கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனை, நாமக்கல் மாவட்டம் பள்ளிப் பாளையத்தைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்களைக் குறிவைத்து இடைத்தரகர்கள் மூலம் முறைகேடாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
இடைத் தரகர்கள்
கடந்த 2014 ஆம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் ஈடுபட்ட சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர் கணேசன், இதேபோன்ற முறைகேடான ஆவணங்களைச் சமர்ப்பித்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர் மீதும், அவருக்கு இடைத்தரகராகச் செயல்பட்ட சங்ககிரியைச் சேர்ந்த அய்யாவு மற்றும் ஆள்மாறாட்டம் செய்த நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையத்தைச் சேர்ந்த வேலுமணி ஆகியோர் மீதும் மனித உறுப்பு மாற்று சட்ட விதிமீறல் தொடர்பாகக் குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது.
வணிக ரீதியிலான சிறுநீரக உறுப்புக் கொடை செய்வது சட்டப்படி குற்றமாகும் என மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககம் தெளிவு படுத்தியுள்ளது.
இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடும் மருத்துவமனைகள், மருத்துவர்கள் மற்றும் இடைத்தரகர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் எனவும் எச்சரித்துள்ளது. மேலும், பொதுமக்கள் சிறுநீரக உறுப்புக் கொடை செய்வது குறித்து இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளது.