சென்னை, ஜூலை 29- நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது நீதித்துறைக் கடமைகளை நிறைவேற்றுவதில் ஜாதி மற்றும் வகுப்புவாதச் சார்புகளை வெளிப் படுத்தியதாக இந்திய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு வழக்குரைஞர் எஸ்.வாஞ்சிநாதனுக்குக் கடந்த 24.7.2025 அன்று சம்மன் அனுப்பியிருந்தார். எழுத்துப் பூர்வமாக நீதிமன்றம் கேள்வி எழுப்பினால், அதற்கு எழுத்து மூலமாகவே பதில் அளிப்பதாக வழக்குரைஞர் வாஞ்சிநாதன் தெரிவித்திருந்தார்.
நீதிமன்றம் தனது உத்தரவில், “ஜாதி சார்பைக் காரணம் காட்டி வாஞ்சிநாதன் எங்களில் ஒருவரை அவமதித்து வருகிறார் என்பது எங்களுக்குத் தெரியவந்தது” என்று கூறியிருந்தது.
இயற்கை நீதிக்கு முரணானது
இதனையடுத்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தன் மீதான குற்றச் சாட்டுக்குத் தானே நீதிபதியாக அமர்ந்து விசாரிப்பது இயற்கை நீதிக்கு முரணானது என்று மேனாள் நீதிபதிகள், வழக்குரைஞர்கள் உள்பட பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன, போராட்டங்களும் நடைபெற்றன. அவரது நடவடிக்கையையும், வழக்கையும் ரத்து செய்யக் கோரி போராட்டங்கள் நடைபெற்றன.
இந்நிலையில் அந்த வழக்கை நேற்று (ஜூலை 28) திங்கள் கிழமை எடுத்துக் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், நீதிபதி ராஜசேகர் அமர்வு, இவ் வழக்கைச் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாற்றியுள்ளது. எழுத்துப் பூர்வமாகத் தான் பதில் அளிப்பதாகத் தெரிவித்த வழக்குரைஞர் வாஞ்சிநாதனிடம், ஒரு காணொலியை ஒளிபரப்பச் சொல்லி, அதில் கூறியிருப்பதற்கும், அதற்குப் போடப்பட்டிருக்கும் தலைப்புக்கும் என்ன பதில் சொல்கிறீர்கள் என்று நீதிபதி கேட்டார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
மேலும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “நீங்கள் எந்த அடிப்படையும் இல்லாத இரண்டு விஷயங்களைக் கருதியுள்ளீர்கள். இதற்கும் (இந்த வழக்குக்கும்) நீங்கள் தலைமை நீதிபதிக்கு அனுப்பிய புகாருக்கும் எந்த தொடர்பும் இல்லை. இரண்டாவது, வெள்ளிக்கிழமை (ஜூலை 25) வரை நாங்கள் எந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடவடிக்கையையும் தொடங்கவில்லை.
நீங்கள் தொடர்ந்து ஜாதி மற்றும் வகுப்புவாதச் சார்பு குற்றச்சாட்டுகளை வைப்பதால் மட்டுமே உங்கள் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். நான்கு ஆண்டுகளாக நீங்கள் என்னை அவதூறாகப் பேசி வருகிறீர்கள்; நான் உங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது தீர்ப்புகளை கடுமையாக விமர்சிக்கும் உங்கள் உரிமையை நான் 100 சதவீதம் மதிக்கிறேன். ஆனால் நீங்கள் ஜாதிச் சார்பு என்று குற்றம் சாட்டும்போது, விஷயங்கள் வேறு விதமாக மாறுகின்றன,” என்று கூறினார். “நாங்களும் விதி நடைமுறையை அறிந்திருக்கிறோம். நாங்கள் முட்டாள்கள் அல்ல.
வழக்கை தலைமை நீதிபதி அல்லது பொருத்தமான பெஞ்ச் முன் வைப்போம்” என்று கூறிய நீதிபதி சுவாமிநாதன், “சூழல் அனைத்தும் ஒன்று சேர்ந்துள்ளது என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் மிரட்டப்படவோ அல்லது பணிந்துபோகவோ மாட்டோம்; நீதித்துறையின் சுதந்திரமே உச்சமானது.” என்று தெரிவித்தார்.
இதற்கிடையில் நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஆர்.வாஞ்சிநாதன் பயன்படுத்திய சொற்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
விசாரணையின் போது, வாஞ்சிநாதன் நீதிமன்றத்தில், “நான் அனைத்தையும் எழுத்துப்பூர்வமாகத் தருகிறேன்” என்றார். இதற்கு, நீதிபதி சுவாமிநாதன், “தயவுசெய்து வாய்மொழியாகச் சொல்லுங்கள்” என்று பதிலளித்தார்.
மீண்டும் பதிலளித்த வழக்குரைஞர் வாஞ்சிநாதன், “மதிப்பிற்குரிய நீதிபதி அவர்களே, நான் எழுத்துப்பூர்வமாகப் பதிலளிப்பேன்” என்று குறிப்பிட்டார். இதையடுத்து நீதிபதி, “உங்களை ஒரு கோழை என்று அழைத்ததற்கு நான் வருத்தப்பட்டேன். ஆனால் இப்போது எனக்கு வருத்தமில்லை” என்று குறிப்பிட்டார்.
கற்றறிந்த
வழக்குரைஞரை நோக்கி…
“தயவுசெய்து எனக்கு எப்படி பதிலளிக்க வேண்டும் என்று கூறி நீதிமன்றம் ஓர் உத்தரவை பிறப்பிக்க வேண்டுகிறேன். நான் அதன்படி பதிலளிக்கிறேன்” என்று வழக்குரைஞர் வாஞ்சிநாதன் பதில் அளித்தார். அதற்கு பதிலளித்த நீதிபதி சுவாமிநாதன், “உங்களையெல்லாம் புரட்சியாளர்கள் என்று யார் அழைத்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் அனைவரும் காமெடிப் பீசுகள்” என்றார்.
நீதிமன்றத்தில் வழக்குரைஞரை நோக்கி, ‘கோழை’ என்றும், ‘ காமெடிப்பீசுகள்’ என்றும் நீதிபதி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதிப்புமிகுந்த வகையில் சொற்களைப் பயன்படுத்தும் நீதிமன்றத்தில், உயர்நீதிமன்ற நீதிபதியே கற்றறிந்த வழக்குரைஞர் ஒருவரை நோக்கி, இந்தச் சொற்களைப் பயன்படுத்தியது வழக்குரைஞர்களின் சுயமரியாதையையும், கண்ணியத்தையும் குலைப்பதாகும் என்று கண்டனம் எழுந்துள்ளது.