வழக்குரைஞர் வில்சன்
மாநிலங்களவை உறுப்பினர்
இந்தியாவின் சமூகநீதி வரலாற்றில் மறக்க முடியாத மகத்தான நாள். மருத்துவக் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் 27 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்த நன்னாள்.
சமூகநீதிக் கொள்கையில் உறுதி, அசராத உழைப்பின் அடையாளம் நம் திராவிட மாடல் நாயகர் – தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தந்த வழிகாட்டலில் உச்சநீதிமன்றத்தின் மூலம் வென்று வந்த நாள்.
கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் உரிமைகளில் எல்லோருக்கும் எல்லாம் என சமூகநீதிக்கான வரலாற்றை தொடங்கி வைத்தனர் நீதிக்கட்சி முன்னோடிகள். அந்த உரிமைப் போராட்டம், சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என படிப்படியாக அரசியல் வளர்ச்சி கண்ட பின்னர்தான், ஒடுக்கப்பட்ட தமிழ் சமுதாயம் படிப்படியாக முன்னேற்றியது.
அந்தப் போராட்டத்தை மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றியவர் தந்தை பெரியார். பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் சமூகநீதியை சட்ட வடிவங்களில் உறுதி செய்தனர். அணையாத அந்த திராவிடப் பெருஞ் சுடரை, கலைஞருக்குப் பின் தன் கைகளில் ஏந்தி “எல்லோருக்கும் எல்லாம்” என திராவிட மாடல் ஆட்சியில் இந்தியாவுக்கே வழிகாட்டிக் கொண்டிருக்கிறார் நம் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர்அவர்கள்.
‘கல்வியே நம் தலைமுறையை மாற்றும் ஆயுதம்’ என பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் கொண்டிருந்த உறுதியோடு, நம் தி.மு. கழகத் தலைவர் அவர்கள் தமிழ்நாட்டு மாணவர் நலனில் காட்டும் அக்கறைகள் ஏராளம்.
மருத்துவ உயர்கல்வியில் இதர பிற்படுத்தப் பட்ட மாணவர்களுக்கு இழைக்கப்பட்டு வந்த அநீதியை அறிந்தவர், அதற்கெதிரான சட்டப் போராட்டத்துக்கு ‘நீ சென்று வென்று வா’ என்று எனக்குக் கட்டளையிட்டார். அந்தச் சட்டப் போராட்டத்தில், இந்தியாவுக்கே வெளிச்சம் கிடைக்கும் வகையில், அகில இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கையில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் வழி உறுதி செய்தோம்.
2019 ஆம் ஆண்டில், மாநிலங்களவை உறுப்பின ராக எனக்கு மாபெரும் வாய்ப்பை அளித்தார் நம் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் அவர்கள். ஜனநாயகக் கடமையாற்றும் முதல் உரையிலேயே, மருத்துவப் படிப்புக்கான அனைத்திந்திய தொகுப்பு இடங்களில் ஓ.பி.சி. இட ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தினேன்.
எந்தக் கோரிக்கை, யார் மூலம், எங்கு ஒலிக்க வேண்டும் என்பதை அறிவார் நம் தலைவர். நம் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலில், அவர் காட்டிய உறுதியிலேயே நாடாளுமன்றம் வழி, உயர்நீதி மன்றம், உச்ச நீதிமன்றம் வழி போராட்டத்தை நடத்தினோம். 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தொடங்கிய நம் போராட்டம், 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் தேதி, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் வழி உறுதி செய்யப்பட்டது.
”நாடு முழுவதும் உள்ள அனைத் திந்திய தொகுப்பில் உள்ள மாநில அரசுகளுக்கு உட்பட்ட அனைத்து இளநிலை, முதுநிலை, பட்டய, பல் மருத்துவப் படிப்புகளில் OBC வகுப்பினருக்கு 27 சதவித இட ஒதுக்கீடு தர ஒப்புக் கொண்டு அரசாணை வெளியிட்டது ஒன்றிய அரசு.
இதன் மூலம் 2021 முதல் 2025 வரை நான்கு கல்வியாண்டுகளில் சுமார் 20,088 பிற்படுத்தப் பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களின்கல்வி உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது. வரலாற்றின் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய அந்த சாதனைப் போராட்டத்தை நிகழ்த்திக் காட்டியவர் நம் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் அவர்கள். ஆட்சியில் மட்டுமல்ல; உறுதி மிக்க செயல்பாடுகளாலும் இன்று இந்தியாவுக்கே வழிகாட்டும் தலைவராக, வரலாற்றை தெற்கிலிருந்து எழுதிக் கொண்டிருக்கிறார் நம் தலைவர்.
இந்தியாவில் ஒட்டுமொத்த ஓ.பி.சி. மாணவர்களின்கல்வி உரிமையை நிலைநாட்டிய இந்த நாள், நம் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்,- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வெற்றித் திருநாளாக கொண்டாடப்பட வேண்டும். நம் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரின் வழியில் சாதனை பயணத்தை தொடர்வோம்!
[நன்றி: ‘முரசொலி’ 29.7.2025]