புதிய கல்விக்கொள்கை, விஸ்வகர்மா யோஜனா, மும்மொழிக் கொள்கை என கடந்த 11 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட, பழங்குடி மக்களை கல்வியில் இருந்து வெளியேற்றுவதற்கான எண்ணற்ற முயற்சிகள் கண்ணுக்குத் தெரிந்து நடந்திருக்கின்றன. ஆனால், வெளியே தெரியாமல் இதுபோல பல சூழ்ச்சிகளும் நடந்துகொண்டிருக்கின்றன என்பதை, கடந்த 5 ஆண்டுகளில் மத்திய பல்கலைக்கழகங்களில் செய்யப்பட்ட பணி நியமனம் குறித்த தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
இதுதொடர்பாக, ராஷ்ட்ரிய ஜனதா தள எம்.பி. மனோஜ் குமார் ஜா மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய கல்வித்துறை இணையமைச்சர் சுகந்தா மஜூம்தார் அளித்துள்ள பதிலில், “ஜூன் 30, 2025 கணக்குப்படி மத்திய பல்கலைக்கழகங்களில் பேராசிரியர், இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை 18 ஆயிரத்து 951. அதில் 14 ஆயிரத்து 62 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 25 விழுக்காடு பணியிடங்கள் காலியாக உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
மேலோட்டமாகப் பார்த்தால், 25 விழுக்காடுதானே காலியிடங்கள்தானே என்று தோன்றலாம். ஆனால், இதில்தான் பா.ஜ.க.வின் உள்நோக்கம் இருக்கிறது. இதில் பொதுப்பிரிவினருக்கான இடங்கள் 15 விழுக்காடு மட்டுமே காலியாக உள்ளன. இதர பிற்படுத்தப்பட்டோருக்கான காலியிடங்கள் 40 விழுக்காடு ஆகவும், தாழ்த்தப்பட்டோருக்கான காலியிடங்கள் 30 விழுக்காடு ஆகவும், பழங்குடி யினருக்கான காலியிடங்கள் 37 விழுக்காடு ஆகவும் உள்ளன என்பது உற்றுநோக்க வேண்டிய செய்தி,
குறிப்பாக, கடந்த 5 ஆண்டுகளில் ஓ.பி.சி. பிரிவில் 423 பேரை நியமித்திருக்க வேண்டும். ஆனால், நியமிக்கப்பட்டதோ 84 பேர் மட்டும்தான். இது 20 விழுக்காடு மட்டும்தான். அதேபோல தாழ்த்தப்பட்ட பிரிவினரில் 308 பேரை நியமித்திருக்க வேண்டும். ஆனால், நியமிக்கப்பட்டதோ 111 பேர் (36 விழுக்காடு) மட்டும்தான். பழங்குடியினர் பிரிவில் 144 பேரை கடந்த 5 ஆண்டுகளில் நியமித்திருக்க வேண்டும். ஆனால், நியமிக்கப்பட்டதோ 24 பேர் (17 விழுக்காடு) மட்டும்தான்.
ஆர்.எஸ்.எஸின் கொள்கை என்பதே சமூகநீதிக்கு மரணக் குழி வெட்டுவதே!
சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது மண்டல் குழுவின் பரிந்துரைகளில் ஒன்றான பிற்படுத்தப்பட்டோருக்கு வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறை வேற்றிய காரணத்தால் அதுவரை வெளியிலிருந்து வி.பி. சிங் தலைமையிலான (ஜனதா தள்) ஆட்சிக்குக் கொடுத்து வந்த பி.ஜே.பி., தன்ஆதரவை விலக்கிக் கொண்டதன் காரணமாக அவர் ஆட்சிக் கவிழ்க்கப்படவில்லையா?
27 விழுக்காட்டை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார்கள் வட மாநிலங்களில் கலவரங்களை ஏற்படுத்தவில்லையா?
சமூகநீதி, கல்வி ரீதி அடிப்படையில் தான் இடஒதுக்கீடு (Socially and Educationally) என்ற அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையையே தகர்க்கும் வகையில் பொருளாதாரத்தில் நலிவுற்ற உயர் ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு என்ற ஒரு சட்டத்தை (EWS) அவசர அவசரமாக நிறைவேற்றி செயல்பாட்டுக்கும் கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் தான் மத்திய பல்கலைக் கழகங்களில் தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப் பட்டோரும், பழங்குடியினரும் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதற்கு ஒன்றிய அமைச்சர் மாநிலங்களவையில் புள்ளி விவரங்களோடு அளித்த தகவல் அதிர்ச்சியை அளிக்கிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், குறிப்பாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கூட்டாகச் சேர்ந்து பிரதமரைச் சந்தித்து, பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்குப் பரிகாரம் தேடித் தருமாறு வலியுறுத்துகிறோம்.