சிறீநகர், ஜூலை.28- உரிமைகள் பற்றி மக்களுக்கு தெரியாவிட்டால், அந்த உரிமைகளால் பயன் இல்லை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறியுள்ளார்
பயன் இல்லை
காஷ்மீர் தலைநகர் சிறீநகரில், தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் வடக்கு மண்டல பிராந்திய மாநாடு நடந்தது. அதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்கலந்து கொண்டார்.
மாநாட்டில் அவர் பேசியதாவது:-
நாட்டின் கடைசி குடிமகனுக்கும் நீதி கிடைப்பதை நீதிபதிகளும், வழக்குரைஞர்களும் இணைந்து உறுதி செய்ய வேண்டும். தேசிய சட்டப்பணிகள் ஆணை யம் அந்த திசையில் செல்கிறது. அதன் பணியை நாட்டின் மூலை, முடுக்கெல் லாம் அதாவது லடாக், வடகிழக்கு மாநிலங்கள், ராஜஸ்தான் என கொண்டு செல்ல வேண்டும்.
மக்களுக்கு தங்களுக்கான உரிமை கள் பற்றி தெரியாவிட்டால், அந்த உரிமை களால் பயன் இல்லை. உரிமைகளை தெரிந்து கொள்ள அவர்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அரசியல் நீதி
காஷ்மீரில் 35 ஆண்டுகளுக்கு முந்தைய நிலைமை தற்போது இல்லை. அந்த பிறழ்வுகளை நாம் நீக்க வேண்டும். நீதிபதிகளுக்கும், வழக்குரைஞர்களுக்கும் இடையிலான பேச்சு வார்த்தை புதிய கண்ணோட் டத்தை அளிக்கும்.
இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் ஒன்றாக வாழும் பாரம்பரிய காஷ்மீரை மறுகட்டுமானம் செய்வதில் இந்த நிகழ்ச்சி முக்கிய பங்கு வகிக்கும். சட்டமேதை அம்பேத்கர், ‘ஒரு நபர், ஒரு ஓட்டு’ என்பதன் மூலம் அரசியல் நீதியை கொண்டு வந்தார். அரசியல் சாசனம் மூலமாக, அரசியல் நீதி, சமூக நீதி, பொருளாதார நீதிக்கு நாம் உறுதி அளித்துள்ளோம். உண்மையான உணர்வுடன் நீதி அமல்படுத்தப்படுவதை காண விரும்புகிறோம்.
சொந்த ஊர்
இதற்கு முன்பும் காஷ்மீர், லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கு வந்துள்ளேன். இரு பகுதி மக்களும் என் மீது பாசம் வைத்துள்ளனர். என் சொந்த ஊருக்கு வருவது போல் இருக்கிறது.
அனைத்து மதத்தினரும் இங்குள்ள தர்காக்கள், கோவில்கள் மற்றும் இதர வழிபாட்டு தலங்களுக்கு செல்கிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
