தமிழ்நாடு பா.ஜ.க-வின் மேனாள் தலைவரும், தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சவுந்தர ராஜன், `கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் சுந்தரகாண்டம் படிப்பது கருவிலிருக்கும் குழந்தைகளுக்கு நல்லது’ என்று கூறியிருக்கிறார்.
தொழில்முறையில் மருத்துவரான தமிழிசை சவுந்தரராஜன், ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதற்கு இணையான ராஷ்ட்ர சேவிகா சங்கத்தின் ஒரு பிரிவான சம்வர்தினி நியாஸ் மூலம் உருவாக்கப்பட்ட `கர்ப்ப சன்ஸ்கார்’ திட்டத்தை மெய்நிகர் மூலம் தொடங்கி வைத்தார். இந்த திட்டமானது தாய்மார்களுக்கு, கர்ப்பம் தரித்தது முதல் குழந்தையின் இரண்டரை வயது வரை பகவத் கீதை, ராமாயணம் போன்ற மத நூல்களைப் படித்தல், சமஸ்கிருத மந்திரங்களை உச்சரித்தல், யோகா பயிற்சி மேற்கொள்ளுதல் போன்றவற்றைப் பரிந்துரைக்கிறது.
இந்த நிலையில் கர்ப்ப சன்ஸ்கார் திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “கிராமங்களில் கர்ப்பிணிகள் ராமாயணம், மகாபாரதம் உள்பட பிற இதிகாசங்கள் மற்றும் நல்ல கதைகளைப் படிப்பதை நாம் பார்த்திருக்கிறோம். குறிப்பாக தமிழ்நாட்டில், கர்ப்பிணிகள் கம்ப ராமாயணத்தின் சுந்தரகாண்டத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே கர்ப்ப காலத்தில் சுந்தரகாண்டம் படிப்பது கருவிலிருக்கும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது” என்று கூறினார். சுந்தரகாண்டம் என்பது ராமாயணத்தின் ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழிசை கூறும் சுந்தர காண்டம் என்ன கூறுகிறது என்றால், “தோல்கருவி, முட்டாள், சூத்திரன், விலங்கு மற்றும் பெண்கள் இவர்களை எப்போதும் சுதந்திரமாக விடக்கூடாது; இவர்களைக் கண் காணித்துக் கொண்டே இருக்கவேண்டும் அதிகாரம் எக்காலத்திலும் இவர்களை நெருங்கக்கூடாது” (ராமாயணம் சுந்தரகாண்டம் அத்.3) ராமாயணம் சுந்தர காண்டத்தில் உள்ள ஸ்லோகம்தான் இது. ஒருவேளை இதற்குத்தான் தெலங்கானா ஆளுநர் தமிழிசை பெண்களைப் படிக்கச்சொல்கிறாரோ?
வேதங்களைப் படித்ததற்காக சம்பூகனை ராமன் கொலை செய்தான். இதனை இன்றும் சத்சங்கம் என்ற பெயரில் வடக்கே சாமியார்கள் கூறிவருகின்றனர். இது குறித்து அவர்கள் கூறும் போது, “மனிதர்கள் அவரவர் வேலைகளைச் செய்வதற்காகவே படைக்கப்பட்டுள்ளனர். வேதம் படிப்பது, கற்றுக்கொடுப்பது முதல்வருணத்தாரின் பணி, இந்தப்பணியை ஒரு சத்திரியன் செய்தால் நாட்டைப் பாதுகாப்பது யார்? நாட்டின் பாதுகாப்பு கேள்விக் குறியாகாதா? அதே போல் ஒரு வைசியன் வேதம் படித்தால் வணிகம் குழம்பி நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டு விடும். உள்நாட்டுக் குழப்பம் ஏற்படும். அதே போல் வேதத்தை ஒரு சூத்திரன் படித்தால் மேலே கூறிய மூன்று வருணத்தாருக்கான சேவைகளைச் செய்வது யார்? இதனால் ஒட்டு மொத்த நாட்டின் நிர்வாகமே கெட்டுப் போகும். ஆகையால் தான் சூத்திரனான சம்புகன் அவனது வேலையைப் பார்க்காமல், அவனைச் சேர்ந்தவர்களையும் வேலையைப் பார்க்க விடாமல் வேதம் படித்தான்; சம்பூகன் வேதம் படித்து ஒன்றுமே செய்யப்போவதில்லை, ஆனால் அவனால் இதர வேலைகள் தடைபடும், இதனால் தான் பிரபு ராமர் ஒரு எச்சரிக்கை விடுத்தார்” என்று கூறுகிறார்கள். இதனையே தமிழ்நாட்டில் கூட சில குடுமி பிரசங்கிகள் கதாகாலட்சேபத்தில் கூறியுள்ளனர்.
தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராசன் கூறும் சுந்தரகாண்டத்தில் பெண்களையும் சுதந்திரமாக விடக் கூடாது என்று கூறப்பட்டிருக்கிறதே – அதன்படி பார்த்தால் ஒரு பெண்ணான தமிழிசை சவுந்தரராசன் டாக்டர் ஆனது எப்படி? சுந்தரகாண்டக் கூற்றுக்கு எதிரானது தானே!
மதம் தலைக்கேறினால் நாம் என்ன நினைக் கிறோம் – எங்கே போகிறோம் – அதில் முரண்பாடு முண்டாசு கட்டி நிற்கிறதே என்பதெல்லாம் தெரிவதில்லையா?
சுந்தரகாண்டத்தைப் படிக்கச் சொல்லும் டாக்டர் தமிழிசை, அவசரப்பட்டு டாக்டர் பட்டத்தையும் ஆளுநர் பதவியையும் துறந்து போய் விட வேண்டாம்.
தமிழிசை போன்ற பெண்கள் டாக்டராக வேண்டும், பெரும் பதவிகளை அலங்கரிக்க வேண்டும் என்பதுதான் தந்தை பெரியாரின் கொள்கை – திராவிடர் கழகத்தின் செயல்பாடு!
ஆனால் இவர்கள் வேறு திசைக்கு ஓடுவது ஏன்?