பன்னாட்டு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஓர் ஆய்வின் வாயிலாக கவலைக்குரிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 2008 முதல் 2017 வரை பிறந்த கிட்டத்தட்ட 1.56 கோடி பேர், எதிர்காலத்தில் வயிற்றுப் புற்றுநோயால் பாதிக்கப்படலாம்.
இதில், 76 சதவீத பாதிப்புகளுக்கு அறிகுறியற்ற எச்.பைலோரி (H. Pylori) என்ற பாக்டீரியா தொற்றே காரணமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவாக, இந்த பாக்டீரியா, குழந்தைப் பருவத்தில் அசுத்தமான உணவு, நீர் அல்லது தொடுதல் வாயிலாக பரவும்.
பிறகு வயிற்றில் தங்கி, நாள்பட்ட அழற்சியை ஏற்படுத்தும். நாளடைவில் அல்சர் எனப்படும் குடற்புண்கள் மற்றும் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய இந்த பாதிப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு, ஆசியாவிலேயே இருக்கும் என்றும் இந்த ஆய்வு கணித்துள்ளது.
இந்த பாக்டீரியாவை குடலிலிருந்து நீக்க எளிய ஆன்டிபயாடிக் மருந்துகள் வந்துவிட்டன.
எனவே, எச்.பைலோரியை இலக்காகக் கொண்டு, உலகளவில் ‘பரிசோதித்து சிகிச்சை அளிக்கும்’ (Screen–and–treat) திட்டங்களைச் செயல்படுத்துவதன் வாயிலாக, புதிய வயிற்றுப் புற்றுநோய் பாதிப்புகளை 75 சதவீதம் வரை குறைக்க முடியும் என, ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
எனவே, பொது சுகாதார அமைப்புகள், குறிப்பாக அதிக பாதிப்பு உள்ள பகுதிகளில், இந்த அமைதியான அச்சுறுத்தல் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்துவதற்கு முன் உடனடியாக செயல்பட வேண்டும்.