சென்னை, ஜூலை 28- கடந்த 6 மாதங்களில் சாலையில் சுற்றித்திரிந்த 1,053 மாடுகள் பிடிபட்டுள்ளன, மாடுகளின் உரிமையாளர்களிடம் ரூ.71 லட்சம் அபராதம் வசூலிக்கப் பட்டுள்ளது.
வாகன விபத்துகள்
சென்னையில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன விபத்துகள் ஏற்படுகிறது. சில நேரங்களில் சாலைகளில் செல்லும் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் முதல் முறை பிடிபட்டால் அதன் உரிமையாளர்களுக்கு அபராத தொகை முறை ரூ.10 ஆயிரம் என அறிவிக்கப்பட்டது.
அதே மாடு 2ஆவது பிடிக்கப்படும்போது அதன் உரிமையாளர்களுக்கு அபராத தொகை ரூ.15 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டது. மாடுகளை பிடித்த 3 நாட்களுக்கு பின்பும் மாட்டின் உரிமையாளர்கள் வரவில்லை என்றால் பராமரிப்பு செலவுக்காக மாடு ஒன்றுக்கு ஒரு நாளைக்கு ரூ.1,000 என கூடுதலாக வசூலிக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி அறிவித்தது.
அபராதம் வசூல்
அந்த வகையில், சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான கடந்த 6 மாதங்களில் சாலையில் சுற்றித்திரிந்த 1,053 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளது. மாட்டின் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.71 லட்சத்து 60 ஆயிரம் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து, மாநகராட்சி கால்நடைதுறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “அபராத தொகை உயர்த்தப்பட்டதால் சாலையில் திரியும் மாடுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதை மேலும் கட்டுப்படுத்த சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை ஒரே இடத்தில் வைத்து பராமரிக்க மாட்டுத் தொழுவம் அமைக்கப்பட இருக்கிறது.
இதில் முதல் மாட்டுத்தொழுவம் ராயபுரம் மண்டலத்தில் திறக்கப்பட்டது. எஞ்சிய மண்டலங்களில் மாட்டுத்தொழுவம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அனைத்து பகுதிகளிலும் மாட்டுத்தொழுவம் திறந்த பின்னர், சாலையில் மாடுகள் தொல்லை இல்லாத அளவிற்கு கட்டுபடுத்த முடியும்” என்றார்.