சென்னை, ஜூலை 28- அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் 5 ஆண்டுகளுக்கு வெளிச்சந்தைகளில் இருந்து 1,500 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டின் அன்றாட மின்சாரத் தேவை சராசரியாக 16 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் இருக்கும். கோடை காலங்களில் 20 ஆயிரம் மெகாவாட்டையும் கடந்து மின் தேவை அதிகரிக்கும். தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மே 2ஆம் தேதி அதிகபட்ச மின் தேவை 20,830 மெகாவாட்டாக பதிவானது.
இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 20 ஆயிரம் மெகாவாட்டை கடந்தது. மே மாதத்தில் மின் தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மழையின் காரணமாக மின் தேவை அதிகரிக்கவில்லை.
மேலும் 2026- 2027ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மின் தேவை 23 ஆயிரம் வாட்டாக அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் வாரியம் தனக்கு சொந்தமான அனல், எரிவாயு மின் நிலையங்கள், சூரியசக்தி மற்றும் காற்றாலைகள் மூலமாக மின் உற்பத்தி செய்து தேவையை சமாளிக்கும். இதை தவிர ஒன்றிய அரசின் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து கிடைக்கும் தமிழ்நாட்டுக்கான பங்கில் இருந்தும் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இவை தவிர தேவை அதிகரிக்கும் போது மாநிலங்களுக்கு இடையே மின்சார பரிமாற்ற ஒப்பந்தம் மற்றும் வெளிச்சந்தைகளில் இருந்து நீண்ட, நடுத்தர, குறுகிய கால மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் வாயிலாக மின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்ய அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் 5 ஆண்டுகளுக்கு நாடு முழுவதும் மற்றும் மாநிலத் துக்குள் உள்ள தனியார் உற்பத்தி யாளர்களிடம் இருந்து 1,500 மெகாவாட் மின்சாரத்தை வாங்க உள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நடுத்தர கால மின் கொள் முதல் ஒப்பந்தங்களின் கீழ் பிற மாநிலங்களில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து 800 மெகாவாட் மின்சார கொள் முதலுக்கு ஒப்பந்தப் புள்ளி வெளியிட மின் பகிர்மானக் கழகத்துக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஒப்பந்தம் விரைவில் ஒன்றிய எரிசக்தி அமைச்சகத்தின் டீப் போர்ட்டலில் வெளியிடப்படும். குறைந்த விலை வழங்கும் நிறுவனம் தேர்வு செய்யப்படும். மீதமுள்ள 700 மெகாவாட்டுக்கு, மாநிலத்துக்குள் உள்ள உற்பத்தியாளர்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.