சென்னை, ஜூன் 14 – கல்விச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல்களை பொது மக்கள் பாதுகாப்பாக பகிர் வதற்கான இ-பெட்டகம் கைப்பேசி செயலி சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த செயலியை தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார் சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்ஆளுமை முகமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சியில், புதிய செயலி யின் சேவை தொடங்கப்பட்டது.
இணைய சேவை மய்யம் அளிக்கும் சான்றிதழ்கள், கல்விச் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள், உரிமங்கள், நிலப் பரிவர்த்தனை ஆவணங்கள் மற்றும் தரவுகளைப் பாதுகாக்க நம்பிக்கை இணையம் வழி செய்திடும். சான்றிதழ்களை சேதப்படுத்தாமல் பாதுகாக்க அரசாங்கத்துக்கு இந்த நம்பிக்கை இணையம் உதவி புரியும். இதேபோன்று, பொது மக்களுக்கு உதவிடும் வகையில் இ-பெட்டகம் கைப்பேசி செயலி தொடங்கப்பட்டுள்ளது.
இந்தச் செயலி மூலமாக இணைய சேவை மய்யங்கள் வழங்கும் சான்றிதழ்கள், கல்விச் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள் ஆகியவற்றை சேமித்து வைத்து பொது மக்களே பாதுகாப்பாகப் பகிரலாம். இந்தச் சேவையால், மக்கள் தங்களது டிஜிட்டல் ஆவணங்களை வேலை வாய்ப்பு, உயர்கல்வி நிறுவனங்கள், அரசு நிறுவ னங்கள், வங்கிகள் மற்றும் பிற அலுவலர்களின் சரி பார்ப்புக்காக பாதுகாப்பான மற்றும் காகிதமில்லாத முறையில் பகிர முடியும்.
வேலைவாய்ப்பு, கல்வி சேர்க்கை, அரசு சேவைகளை அணுகுதல், வெளிநாடுகளுக்குப் பயணம் செய்தல், பணிபுரிதல் போன்றவற்றுக்காக ஆவணங்களின் அசல் காகித நகல்களை நேரில் சென்று சமர்ப்பிப்பதற்கான தேவையை இது வெகுவாகக் குறைக்கும்.
முதல் கட்டம்: புதிய சேவையின் முதல் கட்டமாக ஜாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், முதல் பட்டதாரிச் சான்றிதழ் உட்பட 24 வகையான சான்றிதழ் களை இ-பெட்டகம் கைப்பேசி செயலி பாதுகாக்கும். இந்தச் செயலி மூலம் மின்னஞ்சல், குறுஞ்செய்தி அல்லது பிறவழிகளில் ஆவணங்களைப் பாதுகாப்பாக பகிர விருப்பான வழியை குடிமக்களே தேர்வு செய்யலாம்.
புதிய செயலி தொடக்க நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பவியல் துறை செயலர் ஜெ.குமரகுருபரன், மின் ஆளுமை இயக்குநர் பிரவீன் பி.நாயர், இணை முதன்மைச் செயல் அலுவலர் பெ.ரமண சரஸ்வதி உட்பட பலர் பங்கேற்றனர்.