தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் அடங்கிய மனுவை
பிரதமர் மோடியிடம் வழங்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு
சென்னை, ஜூலை 27 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் பெறப்பட்ட தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் அடங்கிய மனுவை பிரதமர் நரேந்திர மோடியிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.
கடந்த ஜூலை 21 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடைப்பயிற்சியின் போது தலைசுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை 3 நாள்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து, தொடர் சிகிச்சையில் மருத்துவமனையில் முதலமைச்சர் இருந்து வருகிறார். இருப்பினும், அரசு மற்றும் கட்சி தொடர்பான ஆலோசனைகளை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்தே மேற்கொண்டு வருகிறார். முதலமைச்சரை, குடும்பத்தினர், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்ந்து சந்தித்துப் பேசி வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். முதலமைச்சர் அவரை சந்திக்க இயலாத நிலையில், தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த மனுவை பிரதமரிடம் அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், தலைமைச் செயலர் நா.முருகானந்தம் முதலமைச்சரை சந்தித்துப் பேசினார்.
தொடர்ந்து, தயாரிக்கப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சரிடம் அதிகாரிகள் அளித்து அவரின் ஒப்புதலை பெற்றனர். இந்த சந்திப்பின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் உடன் இருந்தார். இந்த மனுவை பிரதமரிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.