தீர்மானங்கள்:
1.பல்லாயிரக்கணக்கான வருஷங்களாய் ஜாதி இந்து சமுகத்திலிருந்து நீக்கி வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு வந்த கூட்டத்தாரை இந்துக்களுடன் சேர்த்துக் கொள்வதாய் பாவனை செய்வது சட்டசபைகளில் இந்து தலைவர்களெனப் பட்டவர்களுக்கு கிடைக்கும் ஸ்தானங்களை அதிகப்படுத்திக் கொள்வதற்குச் செய்யும் சூழ்ச்சியென்றும், தாழ்த்தப்பட்ட சமுகத்தார் தங்களை இந்துக்களெனச் சொல்லிக்கொள்ள விரும்பவில்லையென்றும், அவர்களை அரிஜனங்கள் — அதாவது ஒரு இந்து கடவுளின் அடிமையென்று பெயரிட்டழைப்பது அவர்களை அவமதிப்பதென்றும் இம்மகாநாடு தீர்மானிக்கிறது; கோவில் நுழைவு இயக்கத்தினால் தாழ்த்தப்பட்ட மக்கள் நிலைமை மிகவும் கேவலமாகி வருகிறதென்றும் பொருளாதார சுதந்திரத்தின் மூலமே தாழ்த்தப் பட்ட சமுகம் மேன்மையடைய முடியுமெனவும் இம்மகாநாடு தீர்மானிக்கிறது.
பிரேரேபித்தவர் :- அ. பொன்னம்பலனார்
ஆமோதித்தவர்கள் : – எஸ். குருசாமி பி. ஏ., எஸ். ஜீவானந்தம்
* * * * *
2.தாழ்த்தப்பட்ட மக்களின் ஒரு பகுதியைக் கத்தோலிக்கப் பாதிரிகள் தங்கள் மதத்தில் சம சுதந்திரங்களை அளிப்பதாக வாக்குக் கொடுத்து மதம் மாறும்படிச் செய்து பிறகு கத்தோலிக்கக் கோவில்களில் ஒதுக்கிவைப்பது போன்ற பல அவமானங்களுக்கு உட்படுத்திவருவதால் அப்படிக் கத்தோலிக்க மதத்தில் கஷ்டப்படும் தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் தைரியமாக மதத்தையும், பாதிரிகளின் ஆதிக்கத்தையும் பகிஷ்கரித்து சுயமரியாதை வாழ்வு நடத்தவேண்டுமென்று இம்மகாநாடு தீர்மானிக்கிறது.
பிரேரேபித்தவர்: – சி. ஆர். அமிர்தவாசகம்
ஆமோதித்தவர்: – ஜி. இன்னாசிமுத்து
* * * * *
3.ஒருவர் இறந்தபிறகு உடலை எடுத்து அடக்கம் செய்யும் முறையில் மதத் தரகர்கள் தலையிட்டு தங்களுக்கு ஊதியமும், மதத்திற்கு ஆதரவும் தேடிக்கொள்ளுவதால் இந்த ஜில்லாவாசிகள் இறுதிச் சடங்குகளை அறவே ஒழிக்க வேண்டுமென்றும் சவத்தை அடக்கம் செய்யும் சுடுகாடுகள், கல்லறைகள் முதலியவைகளில் மதத்தைப் பற்றியோ, ஜாதியைப் பற்றியோ ஏற்பட்டுள்ள பிரத்தியேக வித்தியாசங்களையும், சுதந்திரங் களையும் அறவே ஒழிக்க வேண்டுமென்றும் இம்மகாநாடு தீர்மானிக்கிறது.
பிரேரேபித்தவர்: – கே. எஸ். நாதன்
ஆமோதித்தவர்:- எஸ். ரங்கநாதன்
* * * * *
4.ஈரோட்டில் நமது இயக்கத் தோழர்களால் வகுக்கப்பட்ட சுயமரியாதை இயக்க லட்சியத்தையும், சுயமரியாதை இயக்க சமதர்மக் கட்சியாரின் வேலைத்திட்டத்தையும் இம்மகாநாடு முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளுவதோடு மாகாண மகாநாட்டிற்கும் சிபாரிசு செய்கிறது.
பிரேரேபித்தவர்:- தோழர்கள் பா. ஜீவானந்தம், எஸ். குருசாமி
ஆமோதித்தவர்கள்:- அ. பொன்னம்பலனார், கே. எம். பாலசுப்பிரமணியம்
* * * * *
5.சென்ற 1929-இல் செங்கல்பட்டில் நடந்த முதலாவது சுயமரியாதை மகாண மகாநாட்டில் நடந்த முதலாவது சுயமரியாதை மகாநாட்டிற்காக வசூல் செய்யப்பட்ட தொகையில் மகாநாட்டுச் செலவு போக மிகுந்ததை சுயமரியாதைச் சங்க பொக்கிஷதாரிடம் சேர்ப்பிக்காமல் மேற்படி மகாநாட்டு வரவேற்புக் கமிட்டியின் உத்தியோகஸ்தர் ஒருவரிடம் இருப்பதாகத் தெரியவருவதால் மேற்படி தொகையை உடனே சங்கப் பொக்கிஷதார் செட்டிநாடு வை. சு. சண்முகம் அவர்களிடம் சேர்ப்பிக்க வேண்டுமென்று இம்மகாநாடு கேட்டுக்கொள்கிறது.
பிரேரேபித்தவர்:- டி. சம்பந்தம்
ஆமோதித்தவர்:- எம்.எஸ். முத்து
* * * * *
6.கீழ்க்கண்டவர்களை செங்கல்பட்டு ஜில்லா சுயமரியாதை நிர்வாகக் கமிட்டி அங்கத்தினர்களாக நியமிக்கிறதெனத் தீர்மானிக்கிறது.
தலைவர்:- பண்டிட். எஸ். எஸ். ஆனந்தம்
காரியதரிசி:- எஸ். ரங்கநாதன்
1.ஆர்.டி.அய்யாக்கண்ணு, 2. சி.ஆர். அமிர்தவாசகம், 3. எல். இராமசாமி, 4.சி.தங்கராஜ், 5. டி. சம்பந்தம், 6. டி.எம். பார்த்தசாரதி, 7. வி.பி.எஸ். மணியர்.
மேற்படி கமிட்டிமூலம் இந்த ஜில்லாவில் ஒவ்வொரு தாலுக்காவிலும் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை அமலுக்குக் கொண்டுவரப் பிரயத்தனம் செய்ய வேண்டுமெனத் தீர்மானிக்கிறது.
பிரேரேபித்தவர்:- எஸ். ரங்கநாதன்
ஆமோதிப்பவர்:- சி. தங்கராஜ்
* * * * *
7.கொண்ணூர் மேலையம்பதி தண்ணீர் வசதி அதிகக் குறைவாய் இருக்கிறபடியால் அவை நிவர்த்திக்க கவர்ன்மெண்டாவது, ஜில்லா தாலுகா போர்டாவது சிரத்தையெடுக்க வேண்டியதாகவும் சமீபத்தில் ஓடும் புழல் ஏரி ஜலத்தில் சிறிது இந்த ஊருக்கு உதவும்படி சென்னை கார்ப்பரேஷனையும், சென்னைக் கவர்ன்மெண்டாரையும் கேட்டுக் கொள்ளுகிறது.
பிரேரேபிப்பவர்:- ஆர். டி. அய்யாக்கண்ணு
ஆமோதிப்பவர்:- கே.எஸ். பெருமாள்
* * * * *
8எல்லா வகுப்பினர்களுக்கும் பிரவேசமளிக்காத ஹோட்டல்களுக்கு லைசென்ஸ் கொடுக்கலாகாதென சேலம் முனிசிபாலிட்டியார் தீர்மானத்தை சென்னை அரசாங்க முதன்மந்திரி கனம் பொப்பிலி அரசர் ரத்துசெய்ததை ஆட்சேபிக்கின்றது.
9.செங்கல்பட்டு ஜில்லாவில் சிதறுண்டு கிடக்கும் பலதிறப்பட்ட தொழிலாளர் களை ஒன்றுகூட்டி அவர்கள் தொழில்முறைக்கேற்ற தொழில் சங்கங்களையும் விவசாய சங்கங்களையும் ஏற்படுத்தி அவைகள் மூலம் பொருளாதார விடுதலைக் கும், மத ஒழிப்புக்கும் செங்கல்பட்டு ஜில்லா – சுயமரியாதைச் சங்கத்தாரை துரிதமாகச் செய்யும்படி இம்மகாநாடு கேட்டுக்கொள்கிறது.
பிரேரேபிப்பவர்:- டி. எம். பார்த்தசாரதி
ஆமோதிப்பவர்:- எஸ். நடேசன், ஓ.சி. சீனிவாசன்
தலைவர் பின்னுரைக்குப் பின் தோழர் எஸ். குருசாமி அவர்களால் வந்தனோபசாரம் கூறப்பட்டு மாலை 5-மணிக்கு மகாநாடு முடிவுற்றது.
தோழர்கள் எம்.எஸ். முத்து, எஸ். சிவானந்தம் ஆகியவர்களால் சமதர்மக் கீதங்கள் பாடியது குறிப்பிடத்தக்கது.
குடிஅரசு – தீர்மானங்கள் – 08.10.1933