இந்த நிலவரியானது சென்னை அரசாங்கத்தாருக்கு மாகாணம் பூராவிலும் கிடைக்கும் நிலவரிக்கு 3ல் ஒரு பங்குக்கு மேலானதென்றே சொல்லுவேன் இந்தப்படி விளைவின் பயனாய் உண்டான செல்வம் அதுவும் எத்தனை ஏழைக்குடியானவன், விவசாயக்கூலிக்காரன் ஆகியவர்கள் பெண்டு பிள்ளைகள் சகிதம் தங்கள் சரீரங்களை தினம் 8 மணி முதல் 15 மணிவரையில் வியர்வைப் பிழிந்து சொட்டு சொட்டாய் சேர்த்த ரத்தத்திற்கு சமானமான செல்வத்தை, ஒரு கஷ்டமும், ஒரு விபரமும் அறியாதவர்களும், ஒரு பொறுப்பும் இல்லாதவர்களுமான ஜமீன்தார்கள் சர்க்காரில் லைசென்சு பெற்ற கொள்ளைக் கூட்டத்தார்கள் போல் இருந்து கொண்டு மக்கள் பதறப்பதற வயிறு, வாய் எரிய எரிய, கைப்பற்றி பாழாக்குவதென்றால் இப்படிப்பட்ட ஒரு கூட்டம் உலகில் இருக்க வேண்டுமா? என்றும் இவர்களின் தன்மையையும், ஆதிக்கத்தையும் இன்னம் வைத்துக் கொண்டிருக்கும் ஒரு ஜனசமுகம் சுயமரியாதையை உணர்ந்த ஜன சமுகமாகுமா? என்பதைப்பற்றியும் யோசித்துப் பார்க்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.
மேல்ஜாதி, கீழ்ஜாதி முறை கூடாதென்றும், குருக்கள் முறைக் கூடாதென்றும் எப்படி நாம் பலதுறைகளில் வேலை செய்கின்றோமோ அதுபோலவேதான் ஜமீன்தாரன் குடிகள் என்கின்றத் தன்மையும், முறையும் கூடாதென்று வேலை செய்ய நாம் கட்டுப்பட்டவர்களாய் இருக்கின்றோம் என்று இச்சிறு வார்த்தைகளோடு இந்தத் தீர்மானத்தை நான் பிரேரேபிக்கின்றேன்
சாதாரணமாக ஜமீன் என்கின்ற மேற்கண்டத் தன்மை, நாட்டில் அடியோடு இல்லாமல் இந்த லாபங்களையும் அதாவது இந்த 2 கோடி ரூபாய்களையும் சர்க்காரே நேராய் அடைவதாய் இருந்தால் அதனால் மக்களுக்கு எவ்வளவு பயன் ஏற்படுத்தலாம் என்பதையும் யோசிக்க வேண்டுகின்றேன்.
ஆதலால் மேல்ஜாதி, கீழ்ஜாதி முறை கூடாதென்றும், குருக்கள் முறைக் கூடாதென்றும் எப்படி நாம் பலதுறைகளில் வேலை செய்கின்றோமோ அதுபோலவேதான் ஜமீன்தாரன் குடிகள் என்கின்றத் தன்மையும், முறையும் கூடாதென்று வேலை செய்ய நாம் கட்டுப்பட்டவர்களாய் இருக்கின்றோம் என்று இச்சிறு வார்த்தைகளோடு இந்தத் தீர்மானத்தை நான் பிரேரேபிக்கின்றேன் என்று பேசினார்.
தீர்மானங்கள்
- உலக செல்வத்தை ஒரே பக்கம் சேர்க்கும் முறையை ஒழிப்பதற்கும், உலகப் பொருளாதார சமத்துவத்துக்கும், பாடுபடுகிற மக்கள் அதன் பயனை சரிவர அடையவேண்டும் என்பதற்கும், ஜமீன்தார் முறையானது பெருத்த கெடுதியாகவும், தடையாகவும் இருந்துவருவதால் ஜமீன்தார் தன்மையை அடியோடு ஒழிக்கப் பகுத்தறிவுக்கு ஏற்றவழியிலும், பொருளாதார சமத்துவ நியாயவழியிலும் சுயமரியாதை இயக்கம் பாடுபடவேண்டுமென்று இம்மகாநாடு தீர்மானிக்கிறது. பிரேரேபித்தவர்:-ஈ. வெ. ராமசாமி, ஆமோதித்தவர்: கே.வி.அழகர்சாமி.
- இந்திய நாட்டு தேசியக் கிளர்ச்சி என்பதானது சுயராஜ்யம், சுயஆட்சி, ஜனநாயக ஆட்சி என்பவைகளின் பெயரால் சுமார் 50 வருஷகாலமாச் செய்து வந்த வேலைகளின் பயனெல்லாமல் ஜமீன்தாரர்களுக்கே அனுகூலமாயிருப்பதால்.இந்திய ஸ்தல ஸ்தாபனம், சுயஆட்சி அரசாங்கம் ஜனநாயக ஆட்சி ஆகிய நிர்வாகமெல்லாம் பொது ஜன விரோதிகளான ஜமீன்தாரர்கள் வசமும் அவர்கள் போன்ற செல்வ வான்களிடமே போய்ச்சேருவதாயிருப்பதாலும் இனி அந்தப்படி நேராமல் அதாவது ஜமீன்தாரர்களும் செல்வவான்களும் பொறுப்பற்றவர்களாகிய படித்த கூட்டத்தார் என்பவர்களும் கைப்பற்றாமல் இருக்கும்படி சகல முயற்சிகளும் செய்து அவை ஏழைப் பாட்டாளி மக்கள் கைக்கே வரும்படியான மார்க்கத்துக்கு சுயமரியாதை இயக்கம் மும்முரமாய் உழைக்க வேண்டுமென்று தீர்மானிக்கிறது. பிரேரேபித்தவர்: ப. ஜீவானந்தம், ஆமோதித்தவர்: நடேசன்
- ஜமீன்தார்கள் நிலைத்திருப்பதற்கும், அதிகரிப்பதற்கும் அனுகூலமாயிருந்து வரும் சட்டங்களையும் முறைகளையும் ரத்து செய்துவிட வேணுமாய் கிளர்ச்சிசெய்யச் சட்டசபைகளின் மூலம் அச்சட்டங்கள் ரத்தாக வேலை செய்யவேண்டும் என்றும் இம்மகாநாடு தீர்மானிக்கிறது. (எ) இக்காரியங்களை நடைபெறச் செய்யவும் ஜமீன் குடிகள் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்ற தீவிர முயற்சிகள் செய்யவும் கீழ்க்கண்டவர்களடங்கிய கமிட்டி ஒன்றை நியமிக்கிறது.
தோழர்கள்
ஈ.வெ. ராமசாமி, சி. நடராஜன், கே.எம். பாலசுப்பிரமணியம் பி.ஏ., பி.எல்., கே.வி. அழகர்சாமி, வி. பார்த்தசாரதி, பிரேரேபித்தவர்: எஸ்.வி. லிங்கம், ஆமோதித்தவர்: கோவை கிஸன் முதலிய சுமார் 20, 30 தோழர்களாகும்.
குடிஅரசு – சொற்பொழிவு – 27.08.1933