சீன தங்கச் சுரங்கத்தில் நேர்ந்த விபரீதம்
பீஜிங், ஜூலை 27– சீனாவில் உள்ள பெயின்இன் பகுதியில் செயல்பட்டு வரும் தொழில்கல்வி நிறுவனம் ஒன்றிலிருந்து ஆறு மாணவர்கள், சொங்சின் தங்க நிறுவனத்திற்குச் சொந்தமான தங்கச் சுரங்கத்துக்கு கடந்த 23ஆம் தேதி கல்விச் சுற்றுலா சென்றனர்.
அப்போது தங்கத்துகள்கள் கரைக்கப்படும் பெரிய தண்ணீர்த்தொட்டியின் செயல்பாட்டைப் பார்வையிடும்போது, அவர்கள் நின்றிருந்ததளம் திடீரென இடிந்து விழுந்து விட்டது. இதனால் அவர்கள் அனைவரும் அருகிலிருந்த தொட்டிக்குள் விழுந்தனர், தொட்டியில் நீர் மற்றும் வேதிக்கலவை இருந்த காரணத்தால் தொட்டிக்குள் விழுந்த மாணவர்கள் 6 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர் இதை மீட்புப் பணியாளர்கள் உறுதிப்படுத்தினர். உயிரிழந்த மாணவர்கள் அனைவரும் 20 வயது முதல் 22 வயதுக்குட்பட்டவர்கள்.
இந்தச் சம்பவம் சீனா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் பலரும் இந்த விபத்து குறித்துத் தங்களது கோபத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். “இந்தச் சம்பவம் நடந்திருக்கவே கூடாது. மாணவர்கள் ஏன் பாதுகாப்பு உபகரணங்களான தலைக்கவசம் அல்லது பாதுகாப்புக் கயிறை அணியவில்லை?” என எழுப்பியுள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவத்திற்காகச் சீன தேசியத் தங்கக் குழுமத்தின் நிறுவனமான சொங்சின் தங்கம் (Zhongjin Gold) மன்னிப்புக் கோரியுள்ளது.
பாதுகாப்பு வழிமுறை
தி போஸ்ட் (The Post) இதழ் இந்த விபத்து குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், மாணவர்களை கல்விச் சுற்றுப்பயணத்திற்கு அழைத்துச் செல்லும்போது பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுவது எவ்வளவு முக்கியம் என்பதையும், அரசு வகுத்துள்ள விதிமுறைகளை அலட்சியப்படுத்தியதே இந்த விபத்துக்குக் காரணம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது. இச்சம்பவம், கல்விச் சுற்றுப் பயணங்களின்போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்த கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.
வாழ்நாள் நீட்டிப்பு தொடர்பான
ஆய்வு நிறுவனத்தை விற்கும் முடிவிற்கு வந்த
உயிரியல் ஆய்வாளர் பிரையன் ஜான்சன்
உயிரியல் ஆய்வாளர் பிரையன் ஜான்சன்
உலகின் இளம் உயிரியல் ஆய்வாளர்களில் ஒருவரான பிரையன் ஜான்சன், மனிதர்களின் வாழ்நாளை நீட்டிக்கும் ஆய்வு நிறுவனத்தை நடத்தி வருகிறார். நிதி நெருக்கடி மற்றும் தகுதியான ஆய்வாளர்கள் பற்றாக்குறை காரணமாக இந்த நிறுவனத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
பிரையன் ஜான்சன் பல ஆண்டுகளாக, செல்லில் உள்ள பிளாஸ்மாவைக் கொண்டும் மற்றும் வளர்சிதை மாற்றப் புரதங்களில் உள்ள சில மரபணுக்களில் மாற்றங்களைச் செய்வதன் மூலம் வயதாகும் தன்மையைக் குறைத்து வாழ்நாளை அதிகரிக்க முடியும் என்ற கருத்தை முன்வைத்து ஆய்வு செய்து வருகிறார். இது ஒரு புரட்சிகரமான ஆய்வுத் துறையாகக் கருதப்படுகிறது.
ஆனால், வயர்டு (Wired) உடனான நேர்காணலில், தனது நிறுவனம் நிதிப் பற்றாக்குறை காரணமாக ஆய்வுகளைத் தொடர முடியாமல் இருப்பதாகவும், தகுதியான ஆய்வாளர்களைக் கண்டறிவதில் சிரமங்கள் இருப்பதாகவும் பிரையன் ஜான்சன் வேதனை தெரிவித்துள்ளார். இதன் விளைவாக, தனது நீண்ட ஆயுள் தொடர்பான ஆய்வு நிறுவனத்தை ஒரு பெரிய நிறுவனத்திடம் விற்று, அதன் கீழ் தனது ஆய்வுகளைத் தொடர அவர் திட்டமிட்டுள்ளார்.
பிரையன் ஜான்சனின் இந்த முடிவு, எதிர்காலத்தில் அவரது முக்கியமான ஆய்வுகள் எவ்வாறு தொடரும் என்பதைப் பொறுத்தே அமையும்.
எம்.பி.,க்களை திரும்பப் பெற
தைவானில் தேர்தல்
தைவானில் தேர்தல்
தைபே, ஜூலை 27– பார்லிமென்டில் பெரும்பான்மை உள்ளதால், அரசின் மசோதாக்கள், திட்டங்களை முடக்கி வரும் எதிர்க்கட்சியின் எம்.பி.,க்களை திரும்பப் பெறுவதற்கான தேர்தல் தைவானில் நடக்கிறது.
கிழக்காசிய நாடான தைவான், தன் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது என, சீனா கூறி வருகிறது. ஆனால், தனி நாடு உரிமையை தைவான் கேட்டு வருகிறது. இதனால், சீனாவுடன் அடிக்கடி உரசல் ஏற்படுகிறது.
தைவானில் கடந்தாண்டு நடந்த பார்லிமென்ட் தேர்தலில், அதிபர் லாய் சிங் டே எனப்படும் வில்லியம் லாயின் டி.பி.பி., எனப்படும்ஜனநாயக முற்போக்கு கட்சிக்கு, மொத்தமுள்ள 113 இடங்களில், 51 இடங்கள் கிடைத்தன.
அதே நேரத்தில் முக்கிய எதிர்க்கட்சியான, கே.எம்.டி., எனப்படும் கியோமின்டாங் கட்சி, 52 இடங்களில் வென்றது.
தைவான் மக்கள் கட்சி, சுயேச்சைகள் ஆதரவு என, பார்லிமென்டில் இந்தக் கூட்டணிக்கு, 62 எம்.பி.,க்கள் உள்ளனர்.
அதிபர் லாய் கொண்டு வந்த பல முக்கிய மசோதாக்கள், திட்டங்கள், பட்ஜெட்டை நிறைவேற்ற விடாமல், எதிர்க்கட்சிகள் கூட்டணி முடக்கியது.
இதையடுத்து, தைவான் சட்டத்தின்படி, எம்.பி.,க்களை திரும்பப் பெறுவதற்கான உரிமையை பயன்படுத்த, பல அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டன.
இதன்படி, லாய் கட்சியின் ஒரு எம்.பி.,யை திரும்பப் பெறுவதற்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது.
இதைத் தொடர்ந்து, கே.எம்.டி., கட்சியின், 24 எம்.பி.,க்களை திரும்பப் பெறுவதற்கான தேர்தல் நேற்று நடந்தது. அக்கட்சியின் மேலும், ஏழு எம்.பி.,க்களை திரும்பப் பெறுவதற்கான தேர்தல் அடுத்த மாதத்தில் நடக்க உள்ளது.
அந்தந்த எம்.பி., தொகுதியில் உள்ள வாக்காளர்களில் குறைந்தபட்சம், 25 சதவீதம் பேர் ஓட்டளிக்க வேண்டும். பதவியில் இருந்து நீக்குவதற்கான ஓட்டுகள் அதிகம் கிடைக்க வேண்டும்.
நேற்று நடந்த தேர்தலில் போதிய அளவு ஓட்டுகள் பதிவாகாததால், 24 எம்.பி.,க்களின் பதவியும் தப்பியது.