சியோல், ஜூலை 27– தென் கொரியாவின் சவுத் ஜுல்லா மாகாணத்தில் கட்டுமானப் பணிகளுக்காக அழைத்துச் செல்லப்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவர், சிமென்ட் பலகைகளுடன் கட்டிவைத்து, உயரமான கட்டடத்தின் மீது லிஃப்ட் மூலம் தூக்கிச் செல்லப்பட்ட கொடூரமான சித்திரவதை காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் காணொலி மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் கடும் கண்டனத்தைப் பெற்றுள்ளது. வைரலான காணொளி யில், இலங்கையிலிருந்து கட்டட வேலைக்காகச் சென்ற இலங்கைத் தமிழரை சிமிண்ட்பாளங்களோடு சேர்த்து கட்டிவைக்கப்பட்டிருப்பதும், அவர் லிப்ட் மூலம் உயர்த்தப் படுவதும் தெளிவாகக் காணப் படுகிறது. இந்தக் கொடூரக் காட்சி யுடன் பின்னணியில் சிரிப்புச் சத்தமும் கேட்கிறது.
வெளிநாட்டு ஊழியர்களின் நலனைக் காக்கும் ஆர்வலர் குழு ஒன்று இந்தக் காணொலியை சமூக ஊடகங்களில் வெளியிட்டது. சவுத் ஜுல்லா மாநிலத்தில் உள்ள ஒரு செங்கல் சூளையில் இந்தச் சம்பவம் இந்த மாதத் தொடக்கத்தில் நடந்ததாக அக்குழு தெரிவித்துள்ளது. சிமிண்ட் பாளத்துடன் கட்டி சித்திரவதை செய்யப்பட்ட இலங்கைத் தமிழர் தற்போது மனநலச் சிகிச்சை பெற்று வருவதாகவும் அக்குழு கூறியுள்ளது. இந்தக் காணொலி வெளியானதைத் தொடர்ந்து, தென் கொரிய அதிகாரிகளின் கவனத்திற்கும் சென்றது. இது குறித்துக் கருத்து தெரிவித்த தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங் , சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை நடப்பது ஒருபோதும் சகித்துக்கொள்ளப்பட மாட்டாது என்று உறுதிபடத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தென் கொரி யாவில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பி யுள்ளது.