சட்டவிதிகளின்படி கோயில் கட்டுமானங்களுக்கு நிதி பயன்பாடு உயர்நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை விளக்கம்

2 Min Read

சென்னை, ஜூலை 27 கோயில் அறங்காவலா் குழு தீா்மானத்தின்படி, சட்டவிதிகளைப் பின்பற்றியே கோயில் நிலத்தில், கோயில் நிதியைப் பயன்படுத்தி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் இந்து சமய அறநிலையத் துறை விளக்கம் அளித்துள்ளது.

தடை கேட்டு மனு

சென்னை உயா்நீதிமன்றத்தில் டி.ஆா்.ரமேஷ் என்பவா் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் நிதியில் இருந்து கோயில் நிலங்களில் திருமண மண்டபங்கள், கலாசார மய்யங்கள், நிர்வாகக் கட்டடங்கள் உள்ளிட்ட கட்டுமானங்களை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், கோயில் தொடா்பான பணிகளில் தற்போதைய நிலையே நீட்டிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.சிறீவாஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தா் மோகன் ஆகியோர் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்துசமய அறநிலையத் துறை ஆணையா் தரப்பில் பதில் மனு தாக்கல் செய் யப்பட்டது. அதில், தமிழ்நாட்டில் அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமாக 4.78 லட்சம் ஏக்கா் நிலங்கள் உள்ளன. 23,000 கடைகள், 76,500 கட்டுமானங்கள் உள்ளன. இவற்றின் மூலம் 2024 ஏப்ரல் முதல் 2025 மாா்ச் வரையிலான ஓராண்டு காலத்தில் ரூ.345 கோடி குத்தகை வருமானம் வந்துள்ளது.

வருவாய்

பாசன வசதியின்மை, நகா்மய மாதல் காரணமாக பெரும்பாலான நிலங்கள் எந்த வருவாயும் ஈட்டுவதில்லை. இந்த நிலங்களில் திருமண மண்டபங்கள், அரங்கங்கள், கடைகள் உள்ளிட்டவை கட்டுவதன் மூலம் கோயிலுக்கு வருவாய் கிடைக்கும். ஆக்கிரமிப்புகளில் இருந்தும் அந்த நிலங்களைப் பாதுகாக்க முடியும். எனவே, இதுபோன்ற கட்டுமானங்களை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது.

கோயில் அறங்காவலா் குழு தீா்மானத்தின் அடிப்படையில் உரிய அனுமதிகளைப் பெற்ற பின்னரே சட்ட விதிகளைப் பின் பற்றி இத்தகைய கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அதற்கான நிதிகளும் பயன்படுத்தப் படுகின்றன. கோயில் நிலங்களில் கட்டுமானங்கள் மேற்கொள்ள கோயிலின் உபரி நிதியைப் பயன் படுத்தக் கூடாது என எந்த சட்டப் பிரிவும் கூறவில்லை. எனவே, இந்த வழக்கில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்ற உத்தரவை நீக்க உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், எந்தக் கோயிலுக்கு, எந்த சட்டவிதியை மீறி நிதி பயன் படுத்தப்பட்டது என்பது உள்ளிட்ட விவரங்களுடன் மனுதாரா் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தர விட்டு, விசாரணையை ஒத்தி வைத்தனா்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *