சென்னை, ஜூலை 27- தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டு களில் மட்டும் பல்வேறு புதிய கட்டமைப்புகளை உருவாக்கி பொதுப்பணித் துறை சாதனை புரிந்துள்ளதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பொதுப்பணித் துறை, தமிழ்நாட்டின் வளம் பெருக்கும் கட்டமைப்புகளை, வரலாற்றுச் சிறப்புமிக்க கலைச் சின்னங்களை உருவாக்கும் பெருமைக் குரியதுறையாகும். துறை சார்பில் வள்ளுவர் கோட்டம், ரூ.80 கோடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரூ.240.53 கோடியில் கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை உட்பட 4 ஆண்டுகளில் பல புதிய கட்டமைப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படைத்துள்ளார். 2021இல் ஆட்சிப் பொறுப்பேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓராண்டில் சென்னை கிண்டியில் ரூ.240.53 கோடியில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை, ரூ.210.80 கோடியில் 560 படுக்கை வசதியுடன் கொளத்தூரில் பெரியார் மருத்துவமனை, ரூ.187.79 கோடியில் மதுரை ராஜாஜி மருத்துவமனை கட்டடம் ரூ.4,179 கோடியில் அரியலூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாகை, நாமக்கல், உதகை, ராமநாதபுரம், திருப்பூர், விருதுநகர், திருவள்ளூர் ஆகிய 11 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்குத் தேவையான கட்டிடங்கள், காஞ்சிபுரம் காரப்பேட்டையில் ரூ.218 கோடியில் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை கட்டிடம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. அதேபோல் ரூ.413.16 கோடியில் திருப்பத்தூர், ராணிப்பேட்டை,மயிலாடுதுறை, விருதுநகர்மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடங்கள் முதலமைச்சர் ஸ்டாலினால் திறக்கப்பட்டுள்ளன.
கீழடி அருங்காட்சியகம்:
கீழடி அகழாய்வில் கண்டெடுக் கப்பட்ட பழங்காலப் பொருட்களைக் காட்சிப்படுத்த தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையைப் பறைசாற்றும் உலகத் தரம் வாய்ந்த நவீன வசதிகளுடன் கூடிய புதிய அகழ்வைப்பக அருங்காட்சியகக் கட்டிடம் ரூ.18.42 கோடியில் முதலமைச்சரால் திறக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரையில் ரூ.218.84 கோடியில் கலைஞர் நூற்றாண்டு நூலகம், அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் ரூ.62.77 கோடியில் 5 தளங்களுடன் பிரம்மாண்டமாக உலகின் முதல் ஏறுதழுவுதல் அரங்கம் கட்டி திறக்கப்பட்டுள்ளது.
தந்தை பெரியார் நூலகம்
வெள்ளி விழா நினைவாக திருவள்ளுவர் சிலையையும் விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் கடல் நடுவில் நாட்டிலேயே முதலாவதாக ரூ.37 கோடி செலவில் மிகப் பிரமாண்டமான கண்ணாடி இழைப் பாலம் கட்டி திறக்கப்பட்டுள்ளது. இவை மட்டுமின்றி டெல்லி சாணக்கியபுரியில் ரூ.257 கோடியில் வைகை தமிழ்நாடு இல்லக் கட்டடங்கள், கோவையில் ரூ.300 கோடியில் தந்தை பெரியார் நூலகம், அறிவியல் மய்யம், திருச்சியில் ரூ.290 கோடியில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மய்யம், முட்டுக்காட்டில் ரூ. 525 கோடியில் கலைஞர் பன்னாட்டு மாநாட்டு மய்யம் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்பெறும் பல்வேறு உயர் தொழில்நுட்ப கட்டமைப்புகள் கட்டப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.