உலகமயமாகும் பெரியார்
ஜெர்மனியில் பெரியார் பன்னாட்டு
அமைப்பு மாநாடு! (27,28, 29 ஜூலை 2017)
உலக வரலாற்றில் பல்வேறு முக்கியச் சம்பவங்களின் நிகழ்விடமாக இருந்திருக்கிறது ஜெர்மனி. சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய தந்தை பெரியாருக்கும், ஜெர்மனிக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. பார்வையாளராக 1932-ஆம் ஆண்டு ஜெர்மனி சென்றிருந்தார் பெரியார். அங்கு 27 நாள்கள்வரை தங்க நேர்ந்தபோது, அந்நாட்டைச் சிலாகித்திருக்கிறார். அவரது எண்ணத்தில் அந்நாட்டிற்கு தனியிடம் இருந்திருக்கிறது. அதே ஜெர்மனியில் 27.07.2017 அன்று பெரியார் சுயமரியாதை இயக்க பன்னாட்டு மாநாடு துவங்கியது
தந்தை பெரியாரின் தத்துவமும், சிந்தனைகளும் பல நாடுகளில் பரவியிருக்கும் சூழல் தற்போது உருவாகியுள்ளது. அமெரிக்காவில் பெரியார் பன்னாட்டு அமைப்பு ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ளது. பலநாடுகளில் தனித்தனி அமைப்புகளாகவும் செயல்பட்டு வருகின்றன. ஜெர்மன் சேப்டர், யூ.கே சேப்டர் என உலகம் முழுக்க பிரிவுகளும் உள்ளன. இதுபோன்ற அமைப்புகளும், பெரியார் சிந்தனைவாதிகளும், கல்வியாளர்களும் இணைந்து இந்த மாநாட்டை நடத்தினார்கள். ஜெர்மன் கொலோன் பல்கலைக் கழகத்தில் நடந்த மாநாட்டில். கொலோன் பல்கலைக் கழகப் பேராசிரியரும், தமிழ், ஜெர்மனி உட்பட பல மொழிகளின் ஆராய்ச்சியாளருமான உல்ரிக் நிக்லஸ் இந்த மாநாட்டில் முக்கியப் பங்காற்றினார்.