சென்னை, ஜூலை 27 நீதிமன்ற உத்தரவு இல்லாமல் மதம், கோவில் நிர்வாகம் தொடர் பான பிரச்சினைகளுக்கு அமைதி பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என்று உயர்நீதிமன்றம் எச்சரித் துள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூர் தாலுகாவில் உள்ள தவுசம் பட்டியில் பெரியாண்டிச்சி அம்மன் பதிகோவில் உள்ளது. இந்த கோவிலில் முப்பூஜை தவம் என்ற பூஜை நடத்துவதில் மணி மற்றும் மாதேசன் தரப்பினர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து பூஜை மேற்கொள்ள காவல்துறை யினர் பாதுகாப்பு கேட்டு அதிகாரிகளுக்கு மணி கொடுத்த கோரிக்கை மனு பரிசீலிக்கப் படாததால், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அமைதி பேச்சு வார்த்தை
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அவரது கோரிக்கையை பரிசீலிக்க அதிகாரிகளுக்கு உத்தர விட்டது. இதன் அடிப்படையில், தாரமங்கலம் காவல்துறை ஆய்வாளர் இருதரப்பினரை யும் அழைத்து அமைதி பேச்சு வார்த்தை நடத்தினார். கோவில் விழாவை அமைதியாக நடத்தும் விதமாக 9 நிபந்தனைகளை ஆய்வாளர் விதித்தார்.
நடவடிக்கை எடுக்க…
இந்த நிபந்தனையை மாதேசன் தரப்பினர் மீறி விட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மணி வழக்கு தொடர்ந்தார். அதேபோல, ஆய்வாளர் ஒரு தலைபட்சமாக பேச்சுவார்த்தை நடத்தி, அதில் கட்டாயப்படுத்தி தன் கையெழுத்தை வாங்கி விட்டதாக சென்னை உயர்நீதி மன்றத்தில் மாதேசன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த 2 வழக்குகளையும் நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்தார். மாதேசன் தரப்பில் வழக்குரைஞர் வி.இளங்கோவன் ஆஜராகி, ‘ஆய்வாளர் நடத்திய அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தையும், அதில் எடுத்த முடிவையும் ரத்து செய்ய வேண்டும். வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் புதிய அமைதி பேச்சுவார்த்தையை நடத்த உத்தரவிடவேண்டும்’ என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பி.வேல்முருகன், ‘ஆய்வாளர் நடத்திய அமைதி பேச்சுவார்த்தை சட்டப்படி செல்லாது. சட்டம் – ஒழுங்கை பராமரிப்பதுதான் காவல் துறையினர் வேலை. அவர்கள் நீதிமன்றம் போல் செயல்பட முடியாது. சிவில் மற்றும் மத ரீதியான உரிமை தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தை நடத்த காவல் துறைக்கு மட்டுமல்ல வருவாய் துறை அதிகாரிகளுக்கும் சட்டப் பூர்வமான அதிகாரம் இல்லை.
அமைதி நிலவ வேண்டும்
சமுதாயத்தில் அமைதி நிலவ வேண்டும். சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும் என்பதற்காக, இருதரப்பினரின் முழு சம்மதத்துடன் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கோவில் திருவிழா உரிமை போன்றவைகளுக்காக எந்திரத்தனமாக இந்த நடை முறையை பின்பற்றக்கூடாது. ஆய்வாளர் நடத்திய அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் சட்டப் படி இல்லை.
ஒழுங்கு நடவடிக்கை
அமைதிப் பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஒரு தரப்பை மிரட்டி கையெழுத்து என்பது சட்டத்தின் ஆட்சியை காவல்துறையினர் சீர்குலைப்ப தாகும். எனவே, சிவில் பிரச்சினை, மத நடவடிக்கை, கோவில் நிர்வாகம் உள்ளிட்டவை தொடர் பாக அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தை நீதிமன்றம் உத்தரவு இல்லாமல் நடத்தக்கூடாது.
இதை அதிகாரிகள் மீறினால், அவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு மற்றும் சட்டப்படியான நடவடிக்கைகள் கடுமையாக எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்கிறேன். ஆய்வாளர் நடத்திய அமைதி பேச்சுவார்த்தையையும், அதில் எடுத்த நடவடிக்கையையும் ரத்து செய்கிறேன். மனுதாரர்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றம்டை அணுகி பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும். இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.