தி.மு.க.வை அழிக்க யாகமாம்!

3 Min Read

‘ஆல் வேர்ல்ட் பிராமின்ஸ்’ என்ற சமூகவலைதளப் பக்கத்தில் இளம் பார்ப்பனப் பெண் ஒருவர் எழுதியுள்ளார்.

‘‘எனக்கு ஒரு சந்தேகம். நமது வேதங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

திமுகவும், அதன் ஹிந்து விரோத கூட்டணியினரும் வரவிருக்கும் தேர்தலில் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க சக்திவாய்ந்த வேத மந்திரங்கள் உள்ளதே! அதை பயன்படுத்த வாய்ப்பு உள்ளதா? தலைசிறந்த புரோகிதர்கள் ஏன் அதைச் செய்யவில்லை? தலைசிறந்த புரோகிதர்கள் வேத தர்மத்திற்கு பயப்படுகிறார்களா அல்லது அவர்களுக்கு தங்களின் மந்திர சக்தியை இந்த ஹிந்துவிரோத ஆட்சிக்கு எதிராக பயன்படுத்த ஆர்வமில்லையா?  அசுரர்கள் ஆட்சிக்கு வந்து அதர்மத்தின் படி ஆட்சி செய்கின்றனர்,

அதைத் தடுத்து  தமிழ்நாட்டில்  ஹிந்துக்களுக்கு ஆதரவானவர்களை ஆட்சிக்குக் கொண்டுவர அனைத்து பெரியவர்களும், வேத அறிஞர்களும் தலைசிறந்த புரோகி தர்களை அழைத்து மிகப் பெரிய அளவில் யாகத்தை  செய்ய ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.’’ என்று எழுதியுள்ளார்.

நாட்டில் நடப்பது ஆரியர் – திராவிடர் போராட்டமே என்றார் தந்தை பெரியார். அது எத்தகைய நூறு விழுக்காடு உண்மை என்பதை பார்ப்பனர்களின் நடவடிக்கையும், கூப்பாடுகளும், பிரச்சாரமும் சான்று கூறுகின்றன.

வேதங்கள்கூட ‘எங்களைச் சுற்றியுள்ள கருப்பர் கூட்டத்தை, அசுரர்களை, இந்திரனே! அழி! கொளுத்து, மின்னலைக் கக்கு’ என்ற வேண்டுதல்களின் தொகுப்புகள் தானே.

வைக்கத்தில் என்ன நடந்தது?

நூறு ஆண்டுகளுக்கு முன்பு பயணம் செய்ய வேண்டும்!  வைக்கம் போராட்டம், கேரளாவில் உள்ள வைக்கம் மகாதேவர் கோவிலைச் சுற்றியுள்ள பொது சாலைகளில் தாழ்த்தப்பட்ட மக்கள், ஈழவ மக்கள் நடமாட விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கக்கோரி 1924-1925 காலகட்டத்தில் நடந்த ஒரு முக்கிய சமூக புரட்சிப் போராட்டம்!

. தந்தை பெரியார்  இந்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்க அழைக்கப்பட்டார்,அவர் அதில் தீவிரமாகப் பங்கேற்று கடும் சிறை வாசத்தையும் அனுபவித்தார்.

தந்தை பெரியாரின் பங்கேற்பு, அவரது அறிவார்ந்த பேச்சுகள் மற்றும் போராட்ட உத்திகள் மலையாள பூமி எங்கும் பேசு பொருளானது, அன்றைய மக்கள் எங்கு பார்த்தாலும் தந்தை பெரியார் முன்வைத்த  வைக்கம் மகாதேவர் கோவில் தெருவில் செல்வதற்கான தடையை உடைக்கவேண்டும் என்ற  உரிமைமுழக்கம் பற்றி பேசத்துவங்கினர்.

அவரை சிறை வைத்த பிறகு பொதுமக்களின் கோபம் வெளிப்படையாகவே தெரிந்தது. இந்த நிலை யில்   வைக்கம் பகுதியில் உள்ள பார்ப்பனர்கள் மற்றும் பழமைவாத உயர்ஜாதியினர்க்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அவர்களின் கோபம் பெரியார் மீது திரும்பியது. அதன் விளைவாக, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தந்தை பெரியார் சாகவேண்டும் என்று கூறி  ”சத்ரு சம்ஹார யாகத்தை” நம்பூதிரிகள் நடத்தினர்.

இந்த யாகம் குறித்து சிறையில் உள்ள தந்தை பெரியாருக்கும் தெரியும்.

ஆனால், நடந்தது என்ன? சிறைக்காவலர் இந்த யாகம் பற்றி சத்தம் போட்டு பேசிக்கொண்டு இருந்த போதே, வெளியே கடும் வெடிச்சத்தம் கேட்டது.  இது குறித்துப்  பெரியாரிடம் கேட்ட போது அதே காவலர் ‘‘அய்யா எதிரிகளை அழிக்க யாகம் நடத்தினார்கள். ஆனால் மன்னர் இறந்து விட்டார்’’ என்று வருத்தத்தோடு கூறினார்.

யாகம் தோற்றது – இறுதியில் வெற்றி தந்தை பெரியாரிடத்தில் தான் சரணடைந்தது. தந்தை பெரியார் குடும்பமே வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டது என்பது வைரத்தால் எழுதப்பட்ட வரலாற்று வரிகளாகும்.

இந்த 2025ஆம் ஆண்டிலும் ‘ஆல் வேர்ல்டு பிராமின்ஸ்’ எ்னற சமூக வலைதளம் ஒன்றை ஏற்படுத்தி அதில் தி.மு.க. ஆட்சியின்மீது வன்மத்தைக் கொட்டித் தீர்க்கிறார்கள்.

1971இல் நடந்த தேர்தலில், ராமனை செருப்பாலடித்தார் பெரியார் என்று கூறி, நிர்வாண ஆட்டம் போடவில்லையா? (உண்மையில் நடந்தது வேறு!) அதிலும் தந்தை பெரியார் பெரு வெற்றியைத்தான் பெற்றார். தி.மு.க. வரலாறு கண்டிராத வெற்றியை அந்தத் தேர்தலில் பெற்றது.

ஆம், ஆரியர் – திராவிடர் போராட்டமாகவே அந்தத் தேர்தல் நடைபெற்றது. இப்பொழுது தி.மு.க.வை வீழ்த்த யாகம் நடத்த வேண்டுமாம்!

இப்பொழுதும் 1971அய் விஞ்சும் வண்ணம் தி.மு.க. கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்று,  இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்யப் போகிறது.  பார்ப்பனர் மீதான எதிர்ப்பு மேலும் கொழுந்து விட்டு எரியும் சுழலுக்குப் பார்ப்பனர்களே அடி எடுத்துக் கொடுக்கிறார்கள்.

 

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *