சென்னை, ஜூலை 26- திமுக, வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், “ஓரணியில் தமிழ்நாடு” என்ற மாபெரும் மக்கள் இணைப்பு இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. மண், மொழி, மானம் காக்க என்ற முழக்கத்துடன் இந்த முன்னெடுப்பு ஜூலை 1ஆம் தேதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் சென்னையில் தொடங்கப்பட்டது.
இந்த இயக்கம் தொடங்கிய 22 நாட்களுக்குள்ளாகவே, 2 கோடிக்கும் அதிகமான பொதுமக்கள் திமுகவில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது திமுகவுக்கு கிடைத்த மிகப்பெரிய மக்கள் ஆதரவாக பார்க்கப்படுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த உறுப்பினர் சேர்க்கை பணியை நேரடியாக கண்காணித்து வருகிறார்.
அவர் தனது ஆழ்வார்ப்பேட்டை இல்லம் அமைந்துள்ள பகுதியிலேயே நேரடியாக வீடுகளுக்குச் சென்று மக்களைச் சந்தித்து, புதிய உறுப் பினர்களைச் சேர்த்துள்ளார். மேலும், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் தங்கள் சொந்த வாக்குச்சாவடி பகுதிகளுக்குச் சென்று மக்களைச் சந்தித்து வருகின்றனர்.
வெளிமாவட்டங்களுக்குச் செல்லும்போதும் முதலமைச்சர் இந்த பரப்புரையில் ஈடுபட்டு, அரசின் நலத்திட்டங்கள் மக்களை முறையாகச் சென்றடைகிறதா என்று பொதுமக்களிடம் கேட்டறிந்து வருகிறார். இது அரசின் செயல்பாடு குறித்த மக்களின் கருத்துகளை நேரடியாக அறிய உதவுகிறது.
திமுகவினரின் இந்த “ஓரணியில் தமிழ்நாடு” பரப்புரை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் இந்த வெற்றி கொண்டாடப்பட்டு வருகிறது. “சமூகநீதியை காக்கும் ஜனநாயக பேரியக்கமான திமுகவில்” குடும்பம் குடும்பமாக மக்கள் இணைந்து வருவதாக திமுக தெரிவித்துள்ளது