பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் நெருப்புடன் விளையாடாதீர்கள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

சென்னை. ஜூலை 26-  சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது ஒரு தில்லுமுல்லு நடவடிக்கை என்றும் மக்களாட்சி மக்களுக்கே உரியது; அதையாரும் களவாட அனுமதிக்க மாட்டோம், நெருப்புடன் விளையாடாதீர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் திருத்தம்

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியானதால், பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்திடம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும் ஆதாரை ஆவணமாக கருதவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதற்கிடையில் பீகாரில் பல லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவு:

‘சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்’ என்பது சத்தமே இல்லாமல் பின்தங்கிய மற்றும் தங்களுக்கு எதிரான பிரிவினரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி, தேர்தலில் பாஜகவுக்கு சாதகமான சூழலை உருவாக்கும் செயலாகும். இது சீர்திருத்தம் அல்ல; தேர்தல் முடிவுகளைத் திட்டமிட்டபடி வடிவமைக்கும் தில்லுமுல்லு நடவடிக்கை.

நெருப்புடன் விளையாடாதீர்கள்

பீகார் மாநிலத்தில் நடந்ததே அனைத்தையும் வெட்ட வெளிச்சமாக்கி விட்டது. முன்பு தங்களுக்கு வாக்களித்த அதே மக்களே கூட இம்முறை நம்மை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் என்பதை டில்லி அணி நன்கு உணர்ந்துள்ளது. அதனால்தான், அவர்கள் வாக்களிக்கவே கூடாது எனத் தடுக்கப் பார்க்கிறது. எங்களைத் தோற்கடிக்க முடியாது என்ற சூழல் எழுந்ததால் எங்களை வாக்காளர் பட்டியலில் இருந்தே நீக்கப் பார்க்கிறீர்கள். நெருப்புடன் விளையாடாதீர்கள். மக்களாட்சிக்கு எந்த வடிவில் அச்சுறுத்தல் நேர்ந்தாலும் அதனை உறுதியாக நின்று எதிர்ப்போம்.

முழு ஆற்றலுடன் தமிழ்நாடு தனது குரலை உரக்க எழுப்பும். இந்த அநீதிக்கு எதிராக ஜனநாயகரீதியான அத்தனை ஆயுதங்களையும் நாங்கள் அறவழியில் பயன்படுத்துவோம். அரசியலமைப்புச் சட்டத்தின்பால் நம்பிக்கை கொண்டுள்ள குடிமக்கள் அனைவருக்கும் சொல்லிக்கொள்வது என்னவென்றால், ‘சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்’ என்பது ஒரு மாநிலத்தோடு தொடர்புடையது மட்டுமல்ல, நமது குடியரசின் அடித்தளம் தொடர்பானது. மக்களாட்சி மக்களுக்கே உரியது. அதனை எவரும் களவாட அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *