வேலூர், ஜூலை 26 வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில், ‘‘சமஸ்கிருதத்திற்கு மட்டும் ரூ.2,533 கோடி! தமிழ் உள்ளிட்ட 5 தென்னாட்டு மொழிகளுக்கு ரூ.147 கோடி மட்டுமே! யாருக்குப் போகும் நிதி? R.S.S, B.J.P–யின் சூட்சுமத்தை புரிந்துக்கொள்வீர்! என்ற திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி அவர்களால் எழுதப்பட்ட துண்டறிக்கையை 24.07.2025 அன்று குடியேற்றம் (குடியாத்தம்) பொது மக்களிடம் வழங்கி தமிழ் மொழிக்கு எதிராக செயல்படும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை கண்டித்து தெருமுனைக் கூட்டம் குடியேற்றம் பழைய பேருந்து நிலையத்தில் மாலை 6 மணியளவில் நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்திற்கு குடியேற்றம் நகர பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ப.ஜீவானந்தம் தலைமையேற்றார்.மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் பி.தனபால் வரவேற்புரையாற்றினார்.குடியேற்றம் நகர கழகத் தலைவர் சி.சாந்தகுமார் கழக புரட்சிப் பாடல்களைப் பாடினார். குடியேற்றம் நகர கழக அமைப்பாளர் வி.மோகன், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ச.ரம்யாஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மக்கள் கவனம் பெற்ற இந்த தெருமுனைக் கூட்டத்தில் வேலூர் மாவட்ட கழக காப்பாளர் வி.சடகோபன்,மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் மா. அழகிரிதாசன் ஆகியோர்கள் தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளுக்கு 147 கோடி சொற்ப நிதி ஒதுக்கி,சமஸ்கிருதத்திற்கு மட்டும் 2,533கோடி நிதியை வாரி வழங்கியஒன்றிய அரசை கண்டித்து கண்டன உரையாற்றினார்கள்.பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இர.அன்பரசன் இந்நிகழ்வில் ஆற்றிய சிறப்புரையில் இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 145 கோடி ஆகும் .இதில் 8.5 கோடி மக்கள் தமிழ் பேசுகிறார்கள், 10.35 கோடி பேர் தெலுங்கு மொழியும்,5.69 கோடி பேர் கன்னட மொழியும், 3.5கோடி பேர் மலையாளமும் பேசுகிறார்கள்.
தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளுக்கு வெறும் ரூ.147 கோடி நிதி ஒதுக்கிய ஒன்றிய அரசு,சுமார் 24,000 பேர் மட்டுமே பேசும் சம்ஸ்கிருத மொழிக்கு ரூ.2,533 கோடி தொகை ஒதுக்கியது மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயலாகும் என்று தமது உரையில் குறிப்பிட்டார்.மேலும் தந்தை பெரியார் அவர்களின் சீரிய பரப்புரைகளான பெண்ணடிமை, ஜாதி மதமோசடிகள், பார்ப்பனர்களின் மூடநம்பிக்கை கற்பித்தல்கள் ஆகியவற்றைத் தகுந்த மேற்கோள்கள் காட்டி பொது மக்களிடம் உரையாற்றினார். இந்நிகழ்வில் அறிவு வழி காணொலி தோழர் தாமோதரன் உள்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் திராவிட இயக்க உணர்வாளர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.