அரசு மருத்துவமனைகளில் விரைவில் 2,794 செவிலியர் உதவியாளர் நியமனம் மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் அறிவிப்பு

சென்னை, ஜூலை 26-  மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம் மூலம் அரசு மருத்துவமனைகளில் விரைவில் 2,794 செவிலியர் உதவியாளர்கள் (கிரேடு-2) நியமிக்கப்பட உள்ளனர். அதேபோல் 404 கண் மருத்துவ உதவியாளர்கள் நவம்பரில் தேர்வு செய்யப்படுகின்றனர்.

செவிலியர்கள்

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்களும், அலுவலர்களும் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள் அதே போல் மருத்துவர்கள், சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவ பணியாளர்கள் எம்ஆர்பி என அழைக்கப்படும் மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

டிஎன்பிஎஸ்சியும் ஆசிரியர் தேர்வு வாரியமும் ஆண்டுதோறும் தேர்வு அட்டவணையை (Annual Planner) வெளியிட்டு வருகின்றன. இந்த வரிசையில் தற்போது மருத்துவப் பணிகள் தேர்வு வாரியமும் 2025ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை முதல்முறையாக வெளியிட்டிருக்கிறது.

அதில் பதவி, காலியிடங்கள், தேர்வு முறை, தேர்வு நடைபெறும் மாதம் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 2,794 செவிலியர் உதவியாளர் (கிரேடு-2) பணியிடங்கள் வெயிட்டேஜ் முறையில் நிரப்பப்படும் என்றும் அதற்கான அரசாணையை எதிர்நோக்கி இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கண் மருத்துவ உதவியாளர்கள்

அதேபோல், 404 கண் மருத்துவ உதவியாளர்களையும் வெயிட்டேஜ் முறையில் நியமிப்பதற்கான தேர்வு வரும் நவம்பரில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, 658 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்களை போட்டித்தேர்வு மூலம் நிரப்புவதற்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு, 60 லேப்-டெக்னீசியன்களை வெயிட்டேஜ் முறையில் நியமிப்பதற்கான தேர்வு ஆகஸ்டிலும் 74 ரேடியோகிராபர்களை வெயிட்டேஜ் முறையில் நியமிப்பதற்கான தேர்வு அக்டோபரிலும் நடக்க இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

தாம்பரத்தில் புதிய மாவட்ட தலைமை மருத்துவமனை

ஆகஸ்ட் 5ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

சென்னை, ஜூலை 26- தாம்பரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் நீண்டகால தேவையை நிறைவு செய்யும் வகையில், தாம்பரம் சானிடோரியத்தில் புதிய மாவட்ட தலைமை மருத்துவமனையை ஆகஸ்ட் 5ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இது அப் பகுதி மக்களுக்கு உயர்தர மருத்துவச் சேவைகளை வழங்குவதில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிதாகக் கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவமனை, நவீன வசதிகளுடன், அவசர சிகிச்சைப் பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சை அரங்குகள், நோயறிதல் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கவுள்ளது. தாம்பரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் இனி மேம்பட்ட மருத்துவ வசதிகளை தங்கள் அருகிலேயே பெற முடியும்.

மு.க.ஸ்டாலின்

தாம்பரத்தில் 213 படுக்கைகளுடன் செயல்பட்டு வந்த தாலுகா மருத்துவமனையை 115.38 கோடி மதிப்பில் தரம் உயர்த்தப்பட்டு, 400 படுக்கைகளும், 6 தளங்களும், 6 அறுவைச் சிகிச்சை மய்யங்களும் கொண்ட செங்கல்பட்டு மாவட்ட தலைமை மருத்துவமனையாகக் கட்டப்பட்டு உள்ளது.

இதேபோல் குரோம்பேட்டையில் 8 கோடி ரூபாய் செலவில் பல் மருத்துவமனையும், ஆய்வகமும் கட்டப்பட்டுள்ளன.

இவற்றை ஆகஸ்ட் 5ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

ஆளுநர் அதிகாரம் குறித்து கேரள அரசு தொடுத்த வழக்கு

தமிழ்நாடு ஆளுநர் குறித்து வழங்கப்பட்ட தீர்ப்பு அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்

உச்சநீதிமன்றம் கருத்து

சென்னை, ஜூலை 26- தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், மசோதாக்களுக்கு ஆளுநரும், குடியரசுத் தலைவரும் அதிகபட்சமாக மூன்று மாதங்களுக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஆளுநர் தொடர்பான வழக்குகளுக்கு ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், கேரள அரசும் தனது ஆளுநர் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றத்தில் இருந்து திரும்பப் பெற அனுமதி கோரியது. தமிழ்நாடு வழக்கின் தீர்ப்பு தங்களுக்குப் பொருந்தும் என்று கேரள அரசு வாதிட்டது. இருப்பினும், ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரல் இந்தக் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஏற்கெனவே வழங்கப்பட்ட தமிழ்நாடு வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் கேரள அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டனர். ஒன்றிய அரசின் வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், கேரள அரசின் வழக்கை திரும்பப் பெற அனுமதித்து உத்தரவிட்டனர்.

இந்தச் சம்பவம், ஆளுநர்களின் அதிகார வரம்பு மற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடு குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்துகிறது. இது மாநில அரசுகளின் சட்டம் இயற்றும் அதிகாரத்தைப் பாதுகாப்பதில் ஒரு வலுவான முன்னுதாரணமாக அமைகிறது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *