ஆசிரியர் விடையளிக்கிறார்

4 Min Read

கேள்வி 1: உத்தரப்பிரதேசத்தில் போலித் தூதரகம் நடத்தியவர் கைது. இது எதைக் காட்டுகிறது?

– ப.முருகன், திருத்தணி

பதில் 1: உத்தரப்பிரதேசத்தில் போலித் தூதரகம் இத்தனை நாள் நடத்தப்பட்டு இருக்கிறது என்றால், இதைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்திருக்கின்ற ஓர் அரசு உ.பி. அரசு. இதைக் கொஞ்சமும் கண்காணிக்காமல் இருந்த ஒன்றிய அரசு – ஆகிய இரண்டின் ஆளுமை எப்படி இருக்கிறது என்பதற்கு இது ஒரு சரியான எடுத்துக்காட்டு – அது வெட்கப்பட வேண்டிய ஒன்று.

  • ••••

கேள்வி 2: கோயில் திருவிழாக்களில் உயிரிழப்புகள்அதிகம் ஏற்படுகிறது. இதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன?

– அ.கிருஷ்ணமூர்த்தி, மதுரை

பதில் 2: கோயில் திருவிழாக்களில் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதற்கு காரணம் அதில் பல்வேறு ஜாதிய தடங்கல்கள். அதேபோல மற்ற மற்ற நெருக்கடிகளும் ஏற்படுகின்றன. எனவேதான், இத்தகைய திருவிழாக்களை எவ்வளவு கண்காணித்தாலும் திருவிழாக்கள் திருவிழாக்களாக நடைபெறுவதில்லை. திருவிழாக்கள் பல வகைகளில் வீண் நோக்கத்தினால் ஏற்படுகிற கோளாறு. கடவுள் கருணை எப்படிப்பட்டது என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

  • ••••

கேள்வி 3: பா.ம.க.வில் அன்புமணி உரிமைப் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அதை தடை செய்யுமாறு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளாரே?

– த.தமிழ்வேந்தன், திருச்சி

பதில் 3: ‘‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்’’ – இது வள்ளுவர் குறள். புதிய அரசியல் குறள், ‘‘அன்பிற்கும் உண்டு அடைக்கும் தாழ்’’ – பரிதாபத்திற்குரிய நிலை!

  • ••••

கேள்வி 4: குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் திடீர் பதவி விலகலின் காரணம் என்ன?

– கி.மாசிலாமணி, மதுராந்தகம்

பதில் 4: எத்தனையோ காரணங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால்,  அடிப்படையான காரணம் ‘ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசமாக’ நடந்து கொள்கின்ற எவருக்கும் இப்படிப்பட்ட நிலைதான் ஏற்படும். இது பொதுவாழ்வில் உள்ள எவரும் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு பாடமாகும். ‘கடைசிவரை யாரோ’ என்பதற்கொப்ப தன்னை நம்பி வந்தவர்கள் உறுதியாக இருப்பார்கள் என்பதற்கு அடையாளம் இல்லை. பாஜக – ஆர்.எஸ்.எஸ்.க்கு நல்ல எடுத்துக்காட்டு.

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

  • ••••

கேள்வி 5: தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வை அழித்துவிட்டு பா.ஜ.க. கால் ஊன்றப் பார்க்கிறது என்று வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளாரே?

– க.சாக்கியமுனி, நுங்கம்பாக்கம்

பதில் 5: ‘அழித்துவிட்டு’ என்பது பின்னால் நடக்கப் போவதைப்போல எழுச்சித் தமிழர் சொல்லி உள்ளார். ஏற்கெனவே அது துவங்கிவிட்டது. பாதி முடிந்தும் விட்டது. மீதி பாதி வரும் தேர்தலின்போது தெரியவரும்.

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

  • ••••

கேள்வி 6: நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சித் தரப்பை மட்டுமே பேச அனுமதிக்கிறார்கள். என்னை பேச அனுமதிக்கவில்லை என்று எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கூறியிருப்பதற்கு, ஒன்றிய பி.ஜே.பி. அரசு செவிசாய்த்து நாடாளுமன்ற ஜனநாயக மாண்பை நிலைநிறுத்துமா?

– ஆர்.கார்த்தி, புதுடில்லி.

பதில் 6: இப்போதும் இது நிச்சயமாக பயன்படாது. காரணம் ஆறு ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் துணை சபாநாயகர் இல்லாத ஒரு விசித்திர ஜனநாயகம். எனவே எதிர்க்கட்சித் தலைவருக்கே  இப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்படுவது என்பது நம் ஜனநாயகத்தைப் பற்றிய நல்ல ஓர் உண்மையான ஸ்கேன் ரிப்போர்ட். எனவேதான் இது ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டிருக்கிறது. எதற்கும் முற்றுப்புள்ளி உண்டு.

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

  • ••••

கேள்வி 7: பா. ஜனதா, மொழி பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடுகிறது என்றும், மேற்கு வங்காளத்தில் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும், மேற்கு வங்காள முதல் அமைச்சர் மம்தா உறுதிபடக் கூறியிருப்பதை ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொள்வார்களா?

– அ.அப்துல் அகத், அய்தராபாத்.

பதில் 7: எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? மம்தாவையும், அவரது ஆட்சியையும் அகற்றிவிட வேண்டும் என்று எந்த முறையை வேண்டுமானாலும் கையாளுவோம் என்று நினைக்கக் கூடிய அவர்களுக்கு, மேற்கு வங்கத்தின் மீது – தமிழ்நாட்டைப்போல – கேரளத்தைப் போலவே ஒரு குறி. நல்ல நடுநிலையாளர்களாகவும், உண்மையான ஜனநாயகப் பற்றுள்ளவர்களாக இருந்தாலும் கூட ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால், நிச்சயமாக ‘காளை மாடு கன்று போடாது.”

  • ••••

கேள்வி 8: இந்திய அளவில், தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் முதலிடமும், தனிநபர் வருமானத்தில்  2-ஆவது இடமும்  பெற்றிருப்பதாக வெளிவந்துள்ள தேனினும் இனிய செய்தி ஒவ்வொரு தமிழரையும் பெருமிதம் அடையச் செய்யும் என்று எதிர்பார்க்கலாமா?

– கி.கோவிந்தராஜ், வந்தவாசி.

பதில் 8: ஒவ்வொரு தமிழனையும் பெருமையடைச் செய்யும். ஒவ்வொரு ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வினரையும் எரிச்சல் அடையச் செய்யும்.

  • ••••

கேள்வி 9: உடல்நிலை சரியில்லாத நிலையிலும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுவரும் செயல்பாடுகள் தந்தை பெரியாரின் திட்டத்தைப்போல் இருக்கிறதல்லவா?

– ஓவியன், சென்னை

பதில் 9: ஆம். ‘‘பெரியார் வழியேதான் எங்கள் வழி’’ என்பதனை உழைப்பிலும் கூட, உடல் நலம் குன்றியிருந்தாலும், உடல் நலிவு ஏற்பட்டாலும் கடமையிலிருந்து நாங்கள் ஒருபோதும் நகர மாட்டோம் என்று செயல்படக் கூடிய அந்த வைராக்கிய உறுதி பாரம்பரியமான ஒன்று. எனவே, திராவிடத்தை யாரும் அசைத்துப் பார்த்துவிட முடியாது என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *