முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அரசியல் மற்றும் குடும்ப வாழ்க்கையை அவரது இணையர் துர்கா ஸ்டாலின் ‘அவரும், நானும்’ என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றில் தொடராக எழுதினார். இதை அவர், புத்தகமாக வெளியிட விரும்பினார். அதன்படி ‘அவரும், நானும்’ புத்தகத்தின் முதல் பாகம் கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது.
இந்த புத்தகத்தின் 2ஆம் பாகத்தை கடந்த 19ஆம் தேதி அன்று வெளியிடுவதற்கு துர்கா ஸ்டாலின் ஏற்பாடு செய்திருந்தார். அன்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மூத்த சகோதரர் மு.க.முத்து மரணம் அடைந்ததால் இந்த விழா ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் இந்த விழா திட்டமிட்டப்படி நடக்குமா? நடக்காதா? என்று கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விழாவை ஒத்திவைக்காமல் நடத்த வேண்டும் என்று துர்கா ஸ்டாலினிடம் கூறியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில், துர்கா ஸ்டாலின் எழுதிய ‘அவரும் நானும்’ 2ஆம் பாகம் புத்தக வெளியீட்டு விழா 21.7.2025 அன்று மாலை நடைபெற்றது.
2ஆம் பாகத்தின் முதல் பிரதியை எழுத்தாளர் சிவசங்கரி வெளியிட்டார். அதனை ‘டாபே’ குழுமத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான மல்லிகா சீனிவாசன் பெற்றுக்கொண்டார். சிறப்பு பிரதியை துர்கா ஸ்டாலினின் பேரன்கள் இன்பநிதி, நலன் சபரீசன், பேத்திகள் தன்மயா, நிலானி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். விழாவில் மேனாள் நீதிபதியும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மேல் முறையீட்டு ஆணைய தலைவருமான பவானி சுப்பராயன், கோவை சந்திரா, ஜி.ஆர்.ஜி.நிறுவனங்களின் தலைவர் நந்தினி ரங்கசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
துர்கா ஸ்டாலின்
ஏற்புரையாற்றி பேசியதாவது:-
பத்திரிகையில் வெளிவந்த 2 பாகங்களுக்குப் பிறகு, என்னுடைய கணவர் முதலமைச்சரான பிறகான நிகழ்வுகளை புதிய அத்தியாயங்களாக இதில் சேர்த்துள்ளோம்.
இந்த நூல் உருவான வகையில் நான் மீண்டும் நன்றி சொல்ல வேண்டியது என் கணவருக்குதான். மனப்பூர்வமாக, முழுமையாக எனக்கு ஆதரவு அளித்து, ‘நீ எழுது துர்கா’ என சொல்லி உற்சாகப்படுத்திய எனது கணவருக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. இந்த நூல் என் கணவர் பற்றியும், என்னை பற்றியும், எங்கள் 50 ஆண்டுகால வாழ்க்கை பற்றியும் என்னுடைய பார்வையில் சொல்லும் நூல்.
சிறப்பாக விழா நடக்கட்டும் என என்னை வாழ்த்தி அனுப்பியதே, மருத்துவமனையில் இருந்து விழாவை பார்த்துக்கொண்டு இருக்கும் என் கணவர் தான்.
எப்போதும் என்னுடைய கணவர் ‘உங்களில் ஒருவன் நான்’ என்று சொல்லுவார். நூலும் அதே தலைப்பில் வெளியிட்டார். அதேபோல், நானும் உங்களில் ஒருத்தியாக இருக்கவே எப்போதும் ஆசைப்படுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் வரவேற்று பேசினார். ‘உயிர்மை’ நிர்வாக ஆசிரியர் செல்வி ராமச்சந்திரன் நன்றி கூறினார். விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்ட அமைச்சர்களும், தி.மு.க. வர்த்தகரணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், மேனாள் தலைமை செயலாளர் வெ.இறையன்பு, பத்திரிகையாளர்கள் இந்து என்.ராம், நக்கீரன் கோபால், கிருத்திகா உதயநிதி, லோகநாயகி, புத்தகத்தின் பதிப்பாளர் கவிஞர் மனுஷ்ய புத்திரன் மற்றும் துர்கா ஸ்டாலின் குடும்பத்தினர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி முடிந்ததும் விழாவில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் வரிசையாக வந்து துர்கா ஸ்டாலினிடம் புத்தகத்தை பெற்றுக்கொண்டனர்.