அமைச்சர் கே.என். நேரு சகோதரர் ரவிச்சந்திரன் மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர்
என்.ரவிச்சந்திரன் இயக்குநராக உள்ள ‘டிருடம்’ இபிசி இண்டியா நிறுவனம் கடந்த 2013ஆம் ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடமிருந்து 30 கோடி ரூபாய் கடன் பெற்றது. அந்த கடன் தொகையை அந்த நிறுவனம் தனது சகோதர நிறுவனங்களுக்கு திருப்பி விட்டது. இதன் மூலம் தங்களுக்கு 22 கோடியே 48 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக வங்கி சார்பில் புகாரளிக்கப்பட்டது. இதனடிப்படையில் அமைச்சர் நேருவின் சகோதரர் என்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் மீது 2021ஆம் ஆண்டு சிபிஅய் வழக்குப் பதிவு செய்தது.
2021இல் சிபிஅய் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ரவிச்சந்திரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ரவிச்சந்திரன் மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சோதனையில் கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்கள், பணம் உள்ளிட்டவற்றை திரும்ப ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே சிபிஅய் வழக்கு ரத்து செய்யப்பட்ட நிலையில் அமலாக்கத்துறை வழக்கும் ரத்து செய்யப்பட்டுள்ளது.