பாணன்
15ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு 19ஆம் நூற்றாண்டு வரை அய்ரோப்பியர்கள் எப்படி ஆப்பிரிக்காவிற்குள் புகுந்து அங்குள்ள மக்களை விலங்குகளைப் போல் வேட்டையாடி, தாங்கள் கண்டுபிடித்த கனரக வாகனங்களை சோதனை செய்வதற்காக அவர்களின் குடியிருப்புகளை இடித்துத் தள்ளி அதை வயல்வெளிகளாகவும், சுரங்கங்களாகவும் மாற்றினார்களோ அதையே தான் இன்று இஸ்ரேல் காஸாமீது செய்கிறது.
காஸாவில்…
உலகின் எந்த நாடும் இஸ்ரேலை எதிர்த்து கேள்வி கேட்கவில்லை. விமர்சனம் கூட செய்யவில்லை. காஸா என்ற சென்னையைவிட குறைந்த பரப்பளவு கொண்ட மக்கள் அடர்த்தி மிக்க ஒரு நகரத்தை மண்மேடாக்கிக் கொண்டு வருகிறது இஸ்ரேல். உலக நாடுகளோ வேடிக்கை பார்க்கின்றன.
துருக்கியில்…
இதுவே ஒரு நாட்டிற்குள் ஆட்சியாளர்களால் அதிகார அடக்குமுறை அளவில் நடத்தப்படுமா என்றால், ஆம் – துருக்கி நாட்டில் நடக்கிறது.
துருக்கி – அதன் அதிபர் ரசிப் தைய்யிப் எர்டோகன் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதுவும் பெரும் பான்மையாக கிடையாது.
துருக்கி முழுவதும் ஒரே முகம் மட்டுமே தெரிகிறது. அது பேருந்து நிலையமாக இருந்தாலும், பெட்ரோல் பங்க்காக இருந்தாலும், எங்கு பார்த்தாலும் எர்டோகனின் முகம் மட்டுமே தெரிகிறது.
அரசு விளம்பரம், உள்ளூர் விமான பயணச் சீட்டு முதல் பொழுதுபோக்கு பூங்காவிற்குச் செல்லும் சிறுவர்களுக்கான ரயில் டிக்கெட் வரை ஒரே முகம் மட்டுமே காணப்படுகிறது.
2023 ஜனவரியில், துருக்கியின் உயர் விசாரணை அமைப்பு நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான எச்டிபி (பீப்பிள்ஸ் டெமாக்ரடிக் பார்ட்டி) கட்சியின் நிதியை நிறுத்தி, அதன் வங்கிக் கணக்குகளை முடக்கியது. இந்தக் கட்சி துருக்கி நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக இருந்தது. ஆறு மாதங்களுக்குப் பிறகு, 2023இல் பொதுத் தேர்தல் நடைபெறவிருந்த நிலையில், எதிர்க்கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது. எர்டோகன் இந்தக் கட்சியை தேசவிரோதக் கட்சியாக மக்களிடையே பரப்புரை செய்தார்.
ஆனால், தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு துருக்கி உச்சநீதிமன்றம் எதிர்க்கட்சியின் கணக்குகள் மீதான தடையை நீக்கியது
புதுடில்லி பிப்ரவரி 2024
2024இல், இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, பழைய வழக்கு ஒன்றை காரணம் காட்டி, காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டன.
காங்கிரஸ் கட்சி பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியது. ராகுல் காந்தி கூறினார்: “எங்களது முழு நிதி அடையாளமும் அழிக்கப்பட்டுவிட்டது. எங்களால் பிரச்சாரம் செய்ய முடியாது, விளம்பரங்கள் செய்ய முடியாது, எங்கள் வேட்பாளர்களுக்கு உதவ முடியாது. எங்கள் தலைவர்களால் ரயில் டிக்கெட் கூட வாங்க முடியாது” என்று கூறிய அவர், “இது ஒரு குற்றச் செயல். இந்தியாவில் இனி ஜனநாயகம் இல்லை” என்றார்.
ஒரு குடும்பத்தின், ஒரு தனிநபரின், ஒரு வணிக நிறுவனத்தின் அல்லது எந்த ஓர் அமைப்பின் வங்கிக் கணக்கையும் முடக்கினால் என்ன ஆகும்? அவர்கள் முற்றிலும் முடங்கிவிடுவார்கள். ஒரு குடும்பத்தின் கணக்கு முடக்கப்பட்டால், அவர்கள் பசியால் வாடுவார்கள். இதே நிலைதான் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டது.
இந்தியாவில் 20 சதவிகித மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கின்றனர். “நாங்கள் 20 சதவிகித மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். ஆனால், இன்று எங்களால் ரயில் டிக்கெட் கூட வாங்க முடியவில்லை. எங்களால் ஒரு தலைவரை ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு அனுப்ப முடியவில்லை. எங்களால் விளம்பரங்கள் செய்ய முடியவில்லை,” என்று காங்கிரஸ் கூறுகிறது.
அரசியல் மோதல்கள் தேர்தல் களத்தில், நீதிமன்றத்தில் அல்ல
‘முடா’ எனப்படும், மைசூரு நகர மேம்பாட்டு ஆணையம், முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதியின் நிலத்தை 1998இல் கையகப்படுத்தியது. இதற்கு மாற்றாக பார்வதியிடம் 14 வீட்டுமனைகள் வழங்கப்பட்டன.
இந்த விவகாரத்தில் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி முதலமைச்சர் சித்தராமையா அவரது மனைவி பார்வதி, மைத்துனர் மல்லிகார்ஜுன சாமி, தேவராஜ் மீது வழக்குப் பதிவு செய்ய பெங்களூரு மக்கள் பிரநிதிகள் நீதிமன்றம் லோக் ஆயுக்தாவால் உத்தரவிடப்பட்டது.
நான்கு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய லோக் ஆயுக்தா, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. ‘நான்கு பேரும் குற்றமற்றவர்கள்’ என்று விசாரணையில் தெரியவந்தது.
திடீர் வழக்கு
இதற்கிடையில் ‘முடா’ வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்திருப்பதாகக் கூறி, திடீரென அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.
விசாரணைக்கு ஆஜராகும்படி, சித்தராமையா மனைவி பார்வதி மற்றும் நகர மேம்பாட்டுத் துறை அமைச்சர் பைரதி சுரேஷுக்கு தாக்கீது அனுப்பப்பட்டது.
இதை எதிர்த்து இருவரும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி நாக பிரசன்னா, அமலாக்கத்துறை வழங்கிய தாக்கீதை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
நீதிபதிகள் கேள்வி
இம்மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய், நீதிபதி வினோத் சந்திரன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
“அமலாக்கத் துறை பற்றி நாங்கள் மிகவும் கடுமையாக பேச வேண்டியிருக்கும். உங்கள் அரசியல் போராட்டத்தை வாக்காளர்கள் முன்னிலையில் நடத்துங்கள். அதற்கு அமலாக்கதுறை ஏன் பயன்படுத்தப்படுகிறது?” இவ்வாறு அவர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது, அமலாக்கத் துறை சார்பில் வாதிட்ட கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கூறுகையில், ‘சரி, நாங்கள் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெறுகிறோம். இதை வைத்து கடும் விமர்சனம் வேண்டாம்’ என்றார்.
இதற்குப் பதிலளித்த நீதிமன்றம், “உயர் நீதிமன்ற நீதிபதியின் சிந்தனையில் எங்களுக்கு எந்தத் தவறும் தெரியவில்லை. கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுக்கு நன்றி, அவர் எந்தக் கடுமையான கருத்துகளையும் தெரிவிக்கவில்லை” என்று தெரிவித்தது.
இரகசியமல்ல!
அமலாக்கத்துறை அரசியல் ரீதியாகப் பயன்படுத்தப் படுகிறது என்பதும், யார் பயன்படுத்துகிறார்கள் என்பதும் யாருக்கும் தெரியாத இரகசியமல்ல. தலைமை நீதிபதி இந்த வழக்கைப் பற்றிப் பேசியது, அமலாக்கத்துறை தொடர்பான பழைய நிகழ்வுகளை நினைவூட்டுகிறது.
தவறு செய்யாத ஹேமந்த் சோரன் சிறையில்…
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு என்ன நடந்தது? முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு அய்ந்து மாதங்களாக ஜாமீன் கிடைக்கவில்லை. ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியபோது, அவர் ஊழல் செய்ததற்காக ஆதாரமும் இல்லை என்று கூறியது.
வலுவான ஆதாரங்கள் இன்றி ஒரு மாநில முதலமைச்சர் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது அதிர்ச்சியளிக்கிறது.
அரசியலில் ஒன்றிவிட்ட அமலாக்கத்துறை
அமலாக்கத்துறை (ED) எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரின் வீடுகளில் சோதனை நடத்தியது பற்றிய பல அறிக்கைகள் வெளியாகியுள்ளன, அவர்களில் பலர் பின்னர் பாஜகவில் இணைந்தனர்.
ஏப்ரல் 2024 இல் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் தீப்திமான் திவாரி எழுதிய ஒரு கட்டுரையில் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர்களில் 25 பேர் பாஜகவில் இணைந்தனர். இந்த 25 பேரில் 23 பேர் குற்றவழக்கில் இருந்து விடுவிக்கப் பட்டனர்.
சிபிஅய், அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித் துறையின் விசாரணையில் இருந்த 41 நிறுவனங்கள், பாஜகவிற்கு ரூ.2,471 கோடி நன்கொடையாக அளித்துள்ளன. இது அமலாக்கத்துறையில் எந்த அளவு அரசியல் உள்ளது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில்…
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியின் போது சுரங்கத்துறையில் முக்கிய பதவி வகித்த பெண் அதிகாரி சவுமியா சவுராசியா எந்த ஒரு வழக்கு முக்காந்திரமும் இன்றி 11 மாதம் விசாரணை இன்றி சிறையில் வைக்கப்பட்டார்
இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி உஜ்வல் புயான் அமலாக்கத்துறையைக் கடுமையாக கண்டித்து, “குற்றச் சாட்டுகள் பதிவு செய்யப்படாமல் பெண் அதிகாரி ஒருவரை எவ்வளவு காலம் சிறையில் வைத்திருக்க முடியும்?” என்று நீதிமன்றம் அமலாக்கத்துறையைக் கண்டித்தது.
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் அமலாக்கத்துறை 5000 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. ஆனால், வெறும் 41 வழக்குகளில் மட்டுமே குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. இதில் பல வழக்குகள் எதிர்கட்சியினர் மீது மட்டுமே பதிந்துள்ளது. இத்தனை வழக்குகளில் 41 வழக்குகளில் மட்டுமே தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் அரசியல்வாதிகள் இல்லை.
அரியானாவில்…
அரியானா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, அமலாக்கத்துறை காங்கிரஸ் கட்சியின் இளம் சட்டமன்ற உறுப்பினர் சுரேந்தர் பன்வார் என்பவரை சிறையில் அடைத்தது.
இந்த வழக்கை விசாரித்த பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்ற நீதிபதி மகாவீர் சிங் சிந்து தலைமையிலான அமர்வு, “அமலாக்கத்துறை நடத்திய இந்தக் கைதை கண்டித்தது. அமலாக்கத்துறை சட்டத்திற்கு அப்பாற்பட்ட அமைப்பா?” என்று கேள்வி கேட்டு திணறச் செய்தது.
3000 கோடியை ஏழைகளுக்குக் கொடுப்பாராம்
மேற்கு வங்கத்தில் அமலாக்கத்துறையால் ரூ.3,000 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது “இந்த பணம் ஏழை மக்களின் பணம். இந்தப்பணத்தை மேற்குவங்கத்தில் பாஜக அரசு வந்த பிறகு ஏழைகளில் கணக்கில் திருப்பிச் செலுத்துவேன்” என்றார்.
மோடி மேற்குவங்க பா.ஜ.க. பிரமுகருடன் பேசிய இந்தத் தொலைபேசி உரையாடலை மன்கிபாத் பாத் போல் மேற்குவங்கம் முழுவதும் பரப்பினார்கள்.
வழக்குரைஞர்களுக்கும்
அழைப்பாணை அனுப்பிய அமலாக்கத்துறை
எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவதுடன், வழக்குரைஞர் களுக்கும் அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பத் தொடங்கியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமலாக்கத்துறை வழக்கு தொடர்பாக ஆலோசனை களை வழங்கிய மூத்த வழக்குரைஞர்களான அரவிந்த் தாதர் மற்றும் பிரதாப் வேணுகோபால் ஆகியோருக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியது. இது வழக்குரைஞர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
“இது அப்பட்டமான அச்சுறுத்தல்” என வழக்குரை ஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்தது. நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்ட பிறகு பிரச்சினை பெரியதாகிக் கொண்டு இருப்பதைக் கண்ட உடன் அமலாகக்த்துறை அழைப்பாணையை திரும்பப் பெற்றது.
எனினும், இந்த சம்பவம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்யின் கவனத்துக்குச் சென்றது. அவர் வழக்கை தன்முனைப்பாக விசாரணைக்கு எடுத்து (suo motu cognisance) அமலாக்கத்துறைக்கு தாக்கீது அனுப்ப உத்தரவிட்டார்.
உச்சநீதிமன்றத்
தலைமை நீதிபதி கூறியது என்ன?
தலைமை நீதிபதி கவாய், இது தொடர்பாக கூறும் போது, “இது நீதித்துறையை அச்சுறுத்தும் நோக்கமாகும் என்று கூறிய அவர் வழக்குரைஞர்கள் தங்களது கட்சிக் காரர்களுடன் நடத்தும் உரையாடல்களுக்கு எப்படி அழைப்பாணை அனுப்ப முடியும்?” என்று கேள்வி எழுப்பி கடுமையாகக் கண்டித்தார்.
வழக்குரைஞர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களின்படி ஒருவேளை, இந்தியாவும் துருக்கியைப் போன்றே சென்று கொண்டிருக்கிறதோ என்னவோ! துருக்கியில் எதிர்கட்சியினர் மீதான வழக்கின் போது ஒட்டுமொத்த துருக்கி உச்சநீதிமன்ற பார்கவுன்சில் கலைக்கப்பட்டது.
நீதித்துறையை
சிறுமைப்படுத்தும் அமலாக்கத்துறை
அமலாக்கத்துறை குறித்து தெரிவித்த கருத்துகளையும், அதற்கு முன்னரும் தெரிவித்த கருத்துகளையும் இணைத்துப் பார்க்கும்போது, அமலாக்கத்துறை தற்போது ஊழலைக் கண்டறியும் துறையாக இல்லாமல், நீதித்துறையையும் சிறுமைப்படுத்தும் அமைப்பாக மாறி வருகிறது.
அமலாக்கத்துறை மற்றும் தேர்தல் ஆணையம் (EC) ஆகிய இந்த இரண்டு துறைகளும் தங்கள் அதிகாரங்களை அத்துமீறிப் பயன்படுத்தி, புதிய வழிகளில் ஒன்றியத்தை ஆளும் கட்சித் தொடர்பான ஓர் அமைப்பாகவே மாறிவிட்டன. இது ஜனநாயகத்தின் மீதான அக்கரை கொண்டவர்களது கவலைகளை மேலும் ஆழப்படுத்துகிறது.
உச்ச நீதிமன்றம் மட்டுமல்ல, ஜூலை 21 அன்று சென்னை உயர் நீதிமன்றமும் அமலாக்கத்துறைக்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தது.
சத்தீஸ்கரின் மேனாள் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் தனது பிறந்தநாளைக் கொண்டாடிய நாளிலேயே, அமலாக்கத்துறையின் சோதனை நடைபெற்றது. ஜூலை 21 அன்று உச்ச நீதிமன்றம் அமலாக்கத்துறையின் இந்தச் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.