பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் வாக்காளர் பட்டியல் திருத்தம் தேர்தல் ஆணையம் முனைப்பு

சென்னை, ஜுலை 25- பீகாரை போன்று தமிழ்நாட்டிலும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பட உள்ளது. இதையடுத்து முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. அதற்காக காலியாக உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களை உடனடியாக நியமிக்க உத்தரவிட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி

பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு உள்ளது. அங்கு நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளதால் அந்த பணிகள் நடந்து வருகிறது.

இந்த தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிக்காக வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரி பார்த்து வருகின்றனர். அதோடு வாக்காளர்களுக்கு புதிய கணக்கெடுப்பு படிவங்கள் கொடுக்கப்படுகின்றன. அவற்றை வாக்காளர்கள் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

மேலும் மிக முக்கியமாக 2003ஆம் ஆண்டுக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் சேர்ந்தவர்கள் தங்களது இந்திய குடிமகன் என்பதற்கான பிறப்பு சான்றிதழ், கடவுச் சீட்டு உள்ளிட்ட 11 வகை ஆவணங்களை வழங்க வேண்டும் என்று கூறி இருந்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு, பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர்.

ஆனாலும், ஆதார்-பான்கார்டு போன்றவற்றை ஆவணமாக சமர்ப்பிக்க பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறினர். ஆனால் தேர்தல் ஆணையம் அதனையும் நிராகரித்து விட்டது.

இறந்த வாக்காளர்கள்

தற்போது பீகாரில் மேற்கொள்ளப் பட்டு உள்ள இந்த வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் காரணமாக மரணம் அடைந்த 21 லட்சத்து 61 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியலில் கண்டறியப்பட்டது. இவர்கள் அனைவரது பெயரும் நீக்கப்பட உள்ளன. அதே போல் முற்றிலும் பீகாரில் இருந்து பிற மாநிலங்களுக்கு இடம் மாறியதாக  31 லட்சத்து 50 ஆயிரம் வாக்காளர்கள் கண்டறியப்பட்டு உள்ளனர்.

எனவே அவர்களும், தாங்கள் வசிக்கும் மாநிலங்களில் உள்ள வாக்காளர் பட்டியலில் சேர்ந்து கொள்ளலாம். எனவே அவர்களது பெயரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளது.

இதற்கிடையே பீகாரை, போன்று நாடு முழுவதும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் முடிவு செய்துவிட்டது. அதில் முதல்கட்டமாக அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடும், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இந்த பணிகள் விரைவில் தொடங்குகிறது.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி

தமிழ்நாட்டை பொறுத்தவரை, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியை மேற்கொள்ள முன்னேற்பாடுகளை தொடங்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. அந்த அடிப்படையில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அதற்கான பணிகளை தொடங்கி உள்ளார். அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் இது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

அதில் அனைத்து வாக்குச் சாவடி களுக்கும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இருக்க வேண்டும். எந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமனம் – இல்லாமல் இருக்கக்கூடாது. அதேபோல 10 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ஒரு மேற்பார்வையாளர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

அந்த அடிப்படையில் தமிழ்நாட்டில் பணிகள் தொடங்கி உள்ளன. விரைவில் இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் நடைபெற போகும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிக்கான கால அட்டவணையை வெளியிடும் என்று தேர்தல் உயரதிகாரி ஒருவர் கூறினார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *