சென்னை, ஜூலை 25- ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,457 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
நியமன ஆணைகள்
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு, தகுதியானவர்களை கலந்தாய்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,457 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று (24.7.2025) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி,பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் டாக்டர் சந்திரமோகன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் டாக்டர் ஆர்த்தி, தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் அய்.லியோனி, இயக்குநர்கள் கண்ணப்பன், நரேஷ், குப்புசாமி, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர்
வாழ்த்துச் செய்தி
வாழ்த்துச் செய்தி
விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்துச் செய்தியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாசித்தார்.
அதில் ‘பிற்போக்குத்தனமான அறிவியல் அணுகுமுறைகளுக்கு எதிரான புதிய கல்விக்கொள்கையை ஏற்காததால், தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறைக்கான நிதியை ஒன்றிய அரசு வழங்க மறுத்து வருவதை நீங்கள் அறிவீர்கள். அத்தகைய நெருக்கடிக்கு இடையிலும், பள்ளிக்கல்வியை மேம்படுத்துவதற்கான பல புதுமையான திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
உலகையே கற்றுத் தருபவர்கள்
விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ‘ஆசிரியர்களை பார்த்தாலே கொஞ்சம் பதற்றம் வரும். இவ்வளவு ஆசிரியர்களை பார்க்கும்போது, அதிக பதற்றம் ஏற்படுகிறது. பள்ளி, கல்லூரிகளில் நான் ‘அவுட்ஸ்டேண்டிங் ஸ்டூடன்ட்’தான்.
திராவிட இயக்கத்துக்கும், ஆசிரியர்களுக்கும் நெருங்கிய பந்தம் இருக்கிறது. கலைஞர் வழியில் ஆசிரியர்கள் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்போடு இருக்கிறார்.
ஆசிரியர்களிடம் இருந்து கல்வியை மட்டுமல்ல, உலகையே மாணவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். அந்தவகையில் ஆசிரியர்கள் போற்றுதலுக்குரியவர்கள். மலைப்பகுதி பள்ளிகளில் 100 சதவீதம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் தேவைகளை அறிந்து சரியான நேரத்தில் திட்டங்களை முதலமைச்சர் தருகிறார். பள்ளிக் கல்வித் துறை திட்டங்களுக்கு செலவிடப்படும் தொகையை செலவாக பார்ப்பது இல்லை. அதை எதிர்காலத்தின் முதலீடாகத்தான் இந்த அரசு பார்க்கிறது’ என்றார்.