சென்னை, ஜூலை 25- ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட மாநில தகுதித் தேர்வு (செட்) கடந்த மார்ச் 6 முதல் 9ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், இந்த செட் தேர்வில் தமிழ்வழியில் பயின்றோருக்கு (PSTM Persons Studied in Tamil Medium) இடஒதுக்கீடு வழங்கி உயர்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
செட் தேர்வு எழுதியவர்களில் தமிழ்வழி ஒதுக்கீட்டின் கீழ் முன்னுரிமை கோரும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள், தாங்கள் ஒன்றாம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை தமிழ்வழியில் படித்ததற்கான சான்றிதழ்களை (மாதிரி படிவத்தில் உள்ளபடி) உரிய அலுவலர்களிடம் கையொப்பம் பெற்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.gov.in) ஆகஸ்ட் 7ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இந்தச் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்வோர் மட்டுமே தமிழ்வழி ஒதுக்கீட்டின் கீழ் முன்னுரிமை கோர முடியும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.