சமூக அறிவியல் ஊற்று – 14 அறிய வேண்டிய அண்ணல் அம்பேத்கர்

5 Min Read

இந்தியாவில் ஜாதிகள் – 3

ஆயினும் இந்திய மக்களைப் பொறுத்தமட்டில் புறமணமுறை என்ற விதி இன்றுங்கூட உறுதியான தடையாக உள்ளது. இந்தியாவில் குலக்குழுக்கள் எதுவும் இல்லாதபோதும்கூட குலக்குழு அமைப்பை இந்தியச் சமூகம் போற்றுகிறது. புறமணமுறையின் கொள்கைகளை மையமாகக் கொண்ட திருமணச் சட்டத்தில் இதை எளிதாகக் காணலாம். சபிந்தர்கள் (இரத்த உறவினர்) திருமணம் செய்யக்கூடாது என்று மட்டுமில்லை, மாறாக சகோத்திரர்களுக்கு (ஒரே வகுப்பைச் சேர்ந்தவர்கள்) இடையேகூட திருமணம் தெய்வ குற்றமாகக் கருதப்படுகின்றது.

எனவே, அகமணமுறை என்பது இந்தியர்களுக்கு அயலானது என்ற உண்மையை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இந்தியாவில் பல்வேறு கோத்திரங்களும் புறமண வழக்கத்தைக் கொண்டவைதான். குலமரபுச் சின்னங்களைக் கொண்ட குழுக்களும் இத்தன்மையனவே. இந்திய மக்களைப் பொறுத்தமட்டில் புறமணமுறை என்பது எவரும் மீறத் துணியாத ஒரு மதக் கோட்பாடாகவே உள்ளது. இந்திய மக்களிடையே சாதிகளுக்குள் அகமணமுறை கடைப்பிடிக்கப்பட்ட போதிலும், புறமணமுறை என்பது எவரும் மீறாத ஒரு மதக் கோட்பாடாகவே உள்ளது. மேலும் புறமணமுறையை மீறியதற்காக விதிக்கப்படும் தண்டனைகள் அகமணமுறையை மீறியதற்காக விதிக்கப்படும் தண்டனைகளைவிட மிகக் கொடுமையானவை. புறமணமுறை என்றாலே கலந்து ஒன்றாவது என ஆகின்றது. எனவே, புறமணமுறை ஒரு விதியாக இருக்கும்போது சாதி என்பது இருக்க இயலாது என்பதை எளிதாகக் காணலாம்.

ஆனால் இந்தியாவில் சாதிகள் உள்ளனவே; இது எதனால்? இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஆராய்ந்து பார்த்தோமானால் சாதிகளின் உருவாக்கம் என்பது புறமணமுறையின் மீது அகமணமுறையை சுமத்தியது என்று பொருள்படும். எனினும் வழக்கமாக புறமணமுறையைப் பின்பற்றிவந்த குழுவினுள் அகமணமுறையைச் செயல்படுத்துவது – இது சாதியை உருவாக்குவதைக் குறிக்கிறது – ஓர் ஆழமான சிக்கல். புறமணமுறைக்கு எதிராக அகமணமுறையைப் பாதுகாப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட வழிமுறைகளை நோக்குவதன் மூலம் நமது சிக்கலுக்கான தீர்வைக் காண முயலலாம்.

இவ்வாறாக, புறமணமுறையின் மீது அகமணமுறையைச் சுமத்துவது என்பது ஜாதியின் தோற்றமாயிற்று. ஆனால், இது அவ்வளவு எளிய வேலை இல்லை. தன்னை ஒரு ஜாதியாக மாற்றிக்கொள்ள விரும்பும் கற்பனையான குழு ஒன்றை நாம் எடுத்துக்கொள்வோம். தன்னை அகமணமுறைக் குழுவாக மாற்றிக்கொள்வதற்கு அது என்ன வழிகளைப் பின்பற்ற வேண்டும் என்று ஆராய்வோம். ஒரு குழு தன்னை அகமணக் குழுவாக அமைத்துக்கொள்வதற்கு, வெளியில் உள்ள குழுக்களுடன் கலப்பு மணம் செய்யக்கூடாது என்று தடை விதிப்பது மட்டும் போதாது; அதிலும் குறிப்பாக அகமணமுறை புகுத்தப்படுவதற்கு முன்னதாக அனைத்து திருமண உறவுகளிலும் புறமணமுறையே வழக்கமாக இருந்திருந்தால் இதனால் எந்தப் பலனும் இருக்காது என்பது உறுதி. மேலும், அருகருகே நெருங்கிவாழும் குழுக்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து உள்வாங்கிக் கொள்வது என்ற போக்கு உள்ளது. இவ்வாறாக அவை ஒருபடித்தான சமூகமாகிவிடுகின்றன. ஜாதியை உருவாக்கும் பொருட்டு இந்தப் போக்கை வலுவாக எதிர்க்க வேண்டுமானால், சுற்றிலும் ஓர் எல்லைக்கோடுபோட்டு அதற்கு வெளியே யாரும் திருமண உறவு வைத்துக்கொள்ளாதபடி செய்வது முற்றிலும் கட்டாயமாகிறது.

ஆயினும் இவ்வாறு வெளியில் திருமண உறவைத் தடுப்பதற்கு எல்லைக்கோடு போடுவதனால், உள்ளேயே சில சிக்கல்கள் தோன்றுகின்றன. இவை எளிதில் தீர்வு காண முடியாத சிக்கல்கள். பொதுவாகப் பார்த்தால் வழக்கமான ஒரு குழுவில் ஆண், பெண் ஆகிய இருபாலரும் வயதளவில் ஒரே சீராகப் பிரிந்திருப்பதும் இரு பாலார்களிலும் ஒத்த வயதினரின் எண்ணிக்கை சமமாக இருப்பதும் காணப்படும். ஆனால் நடைமுறையில் பார்க்கும்போது குழுக்களில் இத்தகைய சமத்துவம் இருப்பதில்லை. ஆனால் தன்னை ஒரு ஜாதியாக மாற்றிக்கொள்ள விரும்பும் குழுவுக்கு இந்தச் சமநிலை இறுதிக் குறிக்கோள் ஆகிறது; ஏனென்றால் இது இல்லாமல் அகமணமுறை செயல்பட முடியாது. வேறு வகையாகச் சொன்னால் அகமணமுறையைப் பாதுகாக்க வேண்டுமானால் குழுவுக்குள்ளேயே மணவாழ்க்கை உரிமைகள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்; இல்லையென்றால் குழுவின் உறுப்பினர்கள் குழுவுக்கு வெளியே சென்று தமது விருப்பப்படி தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்படும். எனவே, தம்மை ஜாதியாக ஆக்கிக்கொள்ள விரும்பும் ஒரு குழுவினர் தங்களது குழுவுக்குள்ளே திருமண வயதுக்கேற்ற ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே எண்ணிக்கை சமநிலையைப் பேணுவது முற்றிலும் கட்டாயமாகிறது. இந்தச் சமநிலையைப் பேணுவதன் மூலம் மட்டுமே அகமணமுறை உடையாமலிருக்கும்; ஆண், பெண் எண்ணிக்கையில் ஏற்படும் பெரிய ஏற்றத்தாழ்வு அகமணமுறையை உறுதியாகத் தகர்த்துவிடும்.

ஆக,ஜாதி பற்றிய சிக்கல் என்பது குழுவினுள் திருமணத்துக்குத் தகுந்த வயதுப் பிரிவுகளில் இரு பாலர்களிலும் உள்ளவர்களின் எண்ணிக்கையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வை ஒழுங்குபடுத்துவது என்று ஆகிறது. ஆண் பெண் எண்ணிக்கையில் மிகவும் கட்டாயமான சமநிலையைப் பேண வேண்டுமானால், திருமணமான கணவனும் மனைவியும் ஒரே நேரத்தில் இறந்து போக வேண்டும். ஆனால் இவ்வாறு நேர்வது மிக அரிது. மனைவிக்கு முன் கணவன் இறக்கக்கூடும்; அப்போது ஒரு பெண் உபரியாகிவிடுகிறாள்; இந்தக் கூடுதலாக உள்ள பெண்ணுக்கு ஒரு வழி செய்ய வேண்டும். இல்லையென்றால் ஜாதிக் கலப்பு மணத்தின் மூலம் அவள் குழுவின் அகமணமுறையை மீறிவிடுவாள். அதேபோல மனைவி முதலில் இறந்துபோய் கணவன் உயிருடன் இருந்தால் ஓர் ஆண் உபரியாகி விடுகிறான். மனைவியை இழந்த அவன்மீது குழுவுக்கு இரக்கம் இருந்தாலும் அவனுக்கு ஒரு வழி செய்ய வேண்டும். இல்லையென்றால் அவன் குழுவுக்கு வெளியே மணம் செய்து அகமணமுறையை மீறிவிடுவான். இவ்வாறாக உபரி ஆண்கள், உபரி பெண்கள் இருதரப்புக்குமே ஒரு வழி செய்யாவிட்டால் அவர்கள் ஜாதி முறைக்கு அச்சுறுத்தலாகிவிடுவார்கள். ஏனென்றால், அவர்களுக்கு வழி செய்யாவிட்டால் தங்களுக்கு வரை யறுக்கப்பட்ட வட்டத்துக்குள் தங் களுக்குத் தகுந்த துணைவர் கிடைக்காமல் (இணைகளாக இருக்கப் போதுமான எண்ணிக்கையிலேயே ஆண்களும் பெண்களும் குழுவில் இருப்பதால் இவர்களுக்குத் துணைவர்கள் கிடைக்க மாட்டார்கள்) இவர்கள் எல்லைக்கோட்டை மீறிச் சென்று, வெளியில் மணம் செய்துகொண்டு, ஜாதிக்குப் புறத்தேயுள்ள மக்களை உள்ளே கொண்டுவருவார்கள்.

நாம் எடுத்துக்கொண்ட கற்பனையான குழு, இந்த உபரி ஆணையும் உபரிப் பெண்ணையும் என்ன செய்யக்கூடும் என்பதை இனிப் பார்ப்போம். முதலில் உபரியாக இருக்கும். பெண்ணை எடுத்துக்கொள்வோம். ஜாதியின் அகமணமுறையைப் பாதுகாக்கும் வகையில் இரண்டு வகைகளில் இவளுக்கு வழி செய்யலாம்.

– தொடரும்

‘அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள்’ சாதியம்: வரலாறு – ஆய்வு  (தொகுதி 1)

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *