சமூக அறிவியல் ஊற்று – 14 அறிய வேண்டிய பெரியார்

9 Min Read

ஜாதிக்குக் காரணம் விபசாரமாம்

பொதுவாக ஜாதி என்பது இந்துக்கள் என்பவர்களுக்குள் ஆரியக் கொள்கைகளுக்கு அடிமைப்பட்டவர்களுக்குள் மாத்திரம்தான் “கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டது” என்கின்ற கொள்கையின் மீது நான்கு வருணங்களாக அதுவும் பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. இவை முறையே ஒன்றுக்கொன்று தாழ்ந்ததாகவும் கடைசி ஜாதி என்பது மிக்க இழிவானதாகவும் கருதப்படுவதாகக் குறிக்கப்பட்டிருக்கின்ற விவரம் யாவரும் அறிந்ததேயாகும். இப்படி இருந்தாலும் இப்போது அநேக ஜாதிகள் இருப்பதற்கு என்ன காரணம் என்று கவனித்துப் பார்ப்போமானால் அதற்குக் கிடைக்கும் சமாதானம் மிகமிக இழிவைத் தரத்தக்கதாகவே இருப்பதை உணரலாம். அதாவது “ஆதியில் கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட நான்கு வருணத்தாரும் தங்களில் ஜாதி முறை தவறி கலப்பு விவாகம் செய்து கொண்டதாலும் கலப்பு விபசாரம் செய்து கொண்டதாலும் ஏற்பட்ட பிரிவு”களென்றும், அப்படிப்பட்ட பிரிவுகளுக்கு பஞ்சம ஜாதியார்கள் என்றும் பெயர் கொடுக்கப்பட்டிருக்கின்றதென்றும் ஆதாரங்களில் இருக்கின்றன.

அப்படிச் சொல்லப்படுவதிலும் இப்பஞ்சம ஜாதிகள் என்பது இப்போது நமது நாட்டில் பெரும்பான்மையாய் இருக்கும் பல முக்கியமான ஜாதிக்காரர்கள் என்பவர்களே பெரிதும் இந்த விபசாரப் பெருக்கால் ஏற்பட்ட பஞ்சம ஜாதிகள் என்றே காட்டப்பட்டிருக்கின்றன.

அந்த விவரத்தைத் தமிழ் அகராதியில் உள்ளபடி கீழே பிரசுரித் திருக்கின்றோம். ஆகவே அதில் உதாரணமாக, இன்று தமிழ் நாட்டில் பிரபல ஜாதியும் பிரமுக ஜாதியும் என்று சொல்லிக் கொள்ளப் படுவதான வேளாள ஜாதியார் எனப்படுபவர்களே பஞ்சம ஜாதியில் சேர்ந்தவர்கள் என்றும், பஞ்சம ஜாதியிலும், பிராமணன் க்ஷத்திரிய குலப்பெண்ணை சோரத்தால் கலந்ததால் பிறந்தவர்கள் என்றும் குறிக்கப்பட்டிருக்கின்றன.

இவர்களில் இந்தப்படியான வேளாளர் என்பவர் களில் விவசாயம் செய்பவர்களாயிருந்தால் அவர்களுக்கு காணியாளர் என்று பெயர் என்றும், மற்றபடி “சிற்றரசு, மந்திரித்துவம்” முதலிய பதவிகளில் இருப்பவர்களாயிருந்தால் அவர் களுக்கு வேளாளன் சாமந்தர் என்கின்ற பெயர் என்றும், குறிக்கப்பட்டிருப்பதுடன் இவற்றிற்கு ஆதாரம் சுப்பரபோதகம், பிரம்ம புராணம், வைகாநசம், மாதவியம், சாதி விளக்கம் என்கின்ற நூல்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

தவிர மேற்கண்ட பிராமண ஜாதி ஆண், க்ஷத்திரிய ஜாதி பெண்ணை விவாகம் செய்து கொண்டதால் பிறந்த பிள்ளைகளே சவர்ணர் எனவும் தெலுங்கர் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அதாவது இது தெலுங்கு பாஷை பேசும் தெலுங்கு தேசத்தவரனை வரையும் குறிப்பிடத்தக்கதாகவே குறிக்கப்பட்டிருக்கிறது.

அதுபோலவே பிராமணன் வைசியப் பெண்ணுடன் கல்யாணத்தால் பிறந்த பிள்ளை அம்பட்டன் என்றும் சோரத்தால் பிறந்த பிள்ளைகள் குயவர் என்றும் நாவிதர் என்றும் குறிக்கப்பட்டிருக்கின்றது. அதுபோலவே பிராமணன் சூத்திரப் பெண்ணுடன் கல்யாணத்தால் பிறந்த பிள்ளை பரதவர் அதாவது செம்படவர் என்றும், சோரம் செய்ததால் பிறந்தவர் வேட்டைக்காரர் அதாவது வேடுவர் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

பிராமணப் பெண்ணுடன் சூத்திரன் விபசாரம் செய்ததால் பிறந்தவர்கள் சண்டாளர்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

பிராமண குலப் பெண்களுடன் சண்டாளர் கூடிப் பிறந்த பிள்ளைகள் சருமகாரர் அதாவது சக்கிலிகள் என்று குறிப்பிடப் பட்டிருக்கின்றது. க்ஷத்திரிய குலப்பெண்களுடன் சண்டாளர்கள் முதலியவர்கள் சேர்வதால் பிறந்த மக்கள் ‘வேணுகர்’, (அதாவது வேணுகானம் செய்பவர்களும்) ‘கனகர்’ (அதாவது தங்க வேலை செய்பவர்களும்) சாலியர் (அதாவது சாலியர் முதலிய நெசவு வேலை செய்வோரும்) ஆவார்கள் என்றும் கூறப்பட்டிருக்கின்றன.

இந்த மாதிரி “கீழ் மேல்” ஜாதிகள் கலந்து கலந்து வந்ததால் ஏற்பட்ட ஜாதிகளில் ஒன்றாகிய அயோவகச் ஜாதிப் பெண்ணிடம் நிடாதனுக்குப் பிறந்த பிள்ளைகள் ‘பார்க்கவர்கள்’ என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இந்தப் படியே இப்போது அமுலில் உள்ள ஜாதிகளையெல்லாம் குறிக்கும்படியாகவே இன்னும் அநேக விஷயங்கள் காணப்படுகின்றன.

இதுபோலவே இன்னும் இரண்டொரு ஆராய்ச்சி நூல்களில் அதாவது அபிதான கோசம், அபிதான சிந்தாமணி முதலிய எல்லா இந்து பண்டிதர்களாலும் ஆதாரமாய்க் கொண்டாடும் புத்தகங் களில் மற்றும் பல ஜாதிகளை இதைவிடக் கேவலமாகவும் குறிக்கப் பட்டிருக்கின்றதோடு நான்கு ஜாதி தவிர மற்ற ஜாதிகள் எல்லாம் மேல் கண்ட நான்கு ஜாதிக்குள் மேல் கீழாகவும், கீழ் மேலாகவும் கல்யாணம் செய்தும், விபசாரம் செய்தும் பிறந்த பிள்ளை களாக ஏற்பட்டவர்கள் என்றே கூறப்பட்டிருக்கின்றன.

செட்டியார்மார்களையும் ஆசாரிமார்களையும் பற்றி மிக மிக இழிவாகவே கூறப்படுகின்றது. ஆகவே ஜாதியை கட்டிக் கொண்டு அழுவது இவ்விழிவுகளை மரை முகமாய் ஏற்றுக் கொள்ளுவதையே ஒக்குமென்பதைத் தவிர வேறில்லை.

உண்மையில் யாருக்கு யார் பிறந்திருந்தாலும் அதனாலேயே குற்றம் சொல்வதற்கில்லை என்பது நமது கொள்கையானாலும் ஒரு இழிவைக் கற்பித்து அதை நம் மக்கள் மீது சுமத்தி, ஒரு பெரிய சமூகம் நிரந்தரமாய் அடிமையாயும் காட்டுமிராண்டியாயும் இருப்பதற்குச் செய்த காரியமே ஜாதிப்பிரிவும் பாகுபாடும் என்பதை எடுத்துக் காட்டவும் அவ்விதம் கொடுமையை ஒழிப்பதற்காகவுமே இதை எழுதுகிறோம்.

ஜாதி உற்பவம்

சாதி என்னும் தலைப்பில் அகராதியில் காணப்படும் குறிப்பாவது:-

சாதி – 4 – ஆந்திரம், கன்னடம், திராவிடம், மகாராட்டிரம்.

சாதி – 91 – குண்டகர், கோளகர், சவர்ணர், நக்ஷத்திரசீவகர், அம்பட்டர், கும்பகாரர், பாரசவர், நிடாதர், போசர், நாவிதர், சூதர், கூவிரர், மாகிட்டியர், விசன்மர், உக்கிரர், சூலிக்கியர், மணிகாரர், புளிந்தர், க்ஷத்தர், மிலேச்சர், மாகதர், அத்தர், தௌட்டியந்தர், கடகாரர், மாலாசிதர், உற்பலர், சண்டாளர், பாகுதாயர், வைதேகர், பலதர், அயோகவர், சத்திரியர், ஆவந்தியர், மல்லர், கதன்மர், மைத்திரர், பலகண்டர், இரசகர், புட்பதர், தக்ககர், சபைசர், குகபர், கரணர், சருமகாரர் (சக்கிலி), பராகர் (தோணிக்காரன்), வேணுகர் (வேணுகானம் செய்பவர்), கனவர், அத்திகர், வர்த்தனசாலிகர், கருமகாரர் (கம்மாளன்), தண்டகபோலர், மார்க்கவர், சல்லர், வந்திகர் (புலவர் மங்களம் பாடுபவர்), வாடதானர், கண்டகர், கற்பர், சவுண்டிகர் (கள் விற்போர்), சாத்துவதர், தசியவர், பைரவர், ஆசிரயிகர், கரண்டர், சமுத்திரர், மாலாகாரர் (பூ விற்பவர்), கைவர்த்தர், நீலகாரர், வருணாகரர், பீங்களர், நர்த்தகர், மாதங்கர் (வேடன், சக்கிலி), நடர், திரமிளர், கர்மசீவியர், நீலாதிவர்ண விக்கிரேதர், சுவபாகர், குக்குடர், வேணர், புலகரர், ஆவிரதர், ஆபீரர், திக்குவணர், கசர், சைரந்திரியர், மைத்திரேயர், பார்க்கவர், காரூவாரர், பாண்டு சோபாகர், ஆகிண்டிகர், சோபாகர், அந்தியாவசாயிகர்.

இப் பஞ்சம சாதியாரின் வரலாறாவன:

நான்கு வருணத்தாருள்ளும், உயர்குலத்தானும், இழிகுலப் பெண்ணும் கூடிப் பிறந்தவர் அநுலோமர். இழிகுலத்தானும் உயர்குலப் பெண்ணும் கூடிப் பிறந்தவர் பிரதிமோதர். அநுலோமத்தானுக்கும், பிரதிலோமப் பெண்ணுக்கும் பிறந்தவர் அந்தராளர், பிரதிமோத்தானுக்கும், அநுலோமப் பெண்ணுக்கும் பிறந்தவர் விராத்தியர்.

பார்ப்பனக் கன்னி, தன் குலத்துச் சோர நாயகனோடு கூடிப் பிறந்தவர் குண்டகர். பார்ப்பன விதவை அங்கனக் கூடிப் பிறந்தவர்கள் கோளகர். பிராமணன் விவாக முறைப்படி க்ஷத்தரிய கன்னிகையுடன் சேரப் பிறந்தவர் சவர்ணர். இவர் சவுணர் எனவும், தெலுங்கர் எனவும் வழங்கப்படுவர்.

பிராமணன், க்ஷத்திரிய குல மகளிரைச் சோரத்தாற் தேரப் பிறந்தவர் நக்கரத்திர சீவகர்; இவர் யாவரும் விரும்பும் குடியாராதவின், வீழ்குடியார் எனவும், காணியானர் எனவும், சிற்றரசராகலின் வேளாண், சாமந்தர் எனவும் பெயர் பெறுவர்.

பிராமணன் வைசிய குலக் கன்னிகையை விவாகஞ் செய்து பிறந்தவர் அம்பட்டர், வைசிக குலப் பெண்களைச் சோரத்தாற் கூடிப் பிறந்தவர் கும்பகாரர்; இவருக்கு நாவிர், குயவர் எனவும் பெயர்.

பிராமணன் சூத்திர குலக் கன்னிகையை விவாகஞ் செய்து பிறந்தவர் பாரசவர், போரத்தாற் கூடிப் பிறந்தவர் நிடாதர். இவர்க்குச் சித்தர் வேட்டைக்காரர் எனவும் பெயர். க்ஷத்திரியக் கன்னிகையும், விதவையும் தம் குலத்துச் சோர புருடரைக் கூடிப் பெற்றவர் முறையே போசர், நாவிதர் எனப்படுபவர்.

க்ஷத்தரியன் பார்ப்பன மகளிரை விவாக முறையாகவுஞ் சோரத்தாலுஞ் சேரப் பிறந்தவர் முறையே சூதர், கூவிரர் எனப்படுவர். அரசர் சபையில் நின்றேத்துவார் சூதர் எனப்படுவர்.

க்ஷத்திரியன் வைசிய, சூத்திர குல மகளிரை விவாகத்தாலும், சோரத்தாலுஞ் சேர்ந்து பெற்றவர் முறையே மாகிட்டியர், விசனமர், உக்கிரர், சூலிக்கியர் எனப்பவடுபவர்.

வைசிய குலக் கன்னியும், விதவையும் தம் குலத்துச் சோர புருடரோடு சேர்ந்து பெற்றவர் முறையே மணிகாரர், புளிந்தர் எனப்படுவர். வைசியனானவன் பிரம, க்ஷத்திரிய, சூத்திர மகளிரை விவாகத்தினாலுஞ், சோரத்தினாலுஞ் சேரப் பறிந்தவர் முறையே க்ஷத்தர், மிலேச்சர், மாகதர், அத்தர், தௌட்டியந்தர், கடகாரர் எனப் பெயர் பெறுவர்.

இவருள் மாகதர் என்பவர் அரச சபையில் இருந்து புகழ் சொல்வோராம். தௌட்டியந்தர் குந்த வேளாளர் எனப் பெயர் பெறுவர். சூத்திரகுலக் கன்னியும், விதவையும் தம் குலத்துச் சோர புருடரோடு கூடிப் பெற்றவர் முறையே மாலாசிதர், உற்பவர் எனப் பெயர் பெறுவர்.

சூத்திரனானவன் பிராமணர் முதலிய முக்குல மகளிரையும் முறையாலுஞ், சோரத்தாலுங் கூடிப் பிறந்தவர் முறையே சண்டாளர், பாகுகாயர், வைதேகர், பவதர், அயோகவர், சத்திரியர் என்று சொல்லப்படுவர். பிரம விராத்தியர் முதல் சூத்திர குல விராத்தியர் ஈறாக உள்ள நாற்குலத்து விராத்தியரும், நாற்குலப் பெண்களோடுஞ் சேர்ந்து பெற்றவர் முறையே ஆவந்தியர், மல்லர், சுதன்மர், மைத்திரர் என அழைக்கப்படுவர்.

தௌட்டியந்தர், வைதேகர், நிடாதர், உக்கிரர், சண்டாளர், சுவபசர், குகபர், அயோகவர் என்பவர்களுக்கும் பிராமணப் பெண்களுக்குத் தனித்தனி பிறந்தவர் முறையே பலகண்டர், இரசகர், புட்பதர், தக்ககர், சுவுபரர், குகபர், கரணர், சருமகாரர் எனப் பெயர் பெறுவர். சடாதர், நாவிதர், மாகதர், விராத்தியர் வைதேகர், கரணர், சண்டாளர், கனகர் என்பவர்கள், க்ஷத்திரிய குலமகளிருடன் முறை, முறையே சேரப் பிறந்தவர் பாரகர், வேணுகர், கனகர், அத்தியர், வர்த்தனசாலிகர், கருமகாரர், தண்டகபோலர், மார்க்கவர் எனப் பெயர் பெறுவர்.

பாரசவர், மாகிட்டியர், நிடாதர், உக்கிரர், கரணர், சற்பர், சவுண்டிகர், சாத்துவதர் என்பவர்கள் வைசிய மகளிரோடு சேர்ந்து பெற்றவர் முறையே சல்லர், வந்திகர், வாடதானர், கண்டகர், சற்பர், சவுண்டிகர், சாத்துவதர், தசியவர் எனப் பெயர் பெறுவர்.

நிடாதர், சண்டாளர், மாகதர், பலதர், தசியவர், சவுண்டிகர், தண்டக போலர், என்பவர்களுக்குஞ் சூத்திரப் பெண்களுக்கும் பிறந்தவர் முறையே பைரவர், ஆசீரயிகர், கரண்டகர், சாமுத்திரர், மாலாகாரர், கைவிர்த்தர், நீலகாரர், வருணாகரர் என்று பெயர் பெறுவர்.

பிராமணனுக்கும், அயோகவப் பெண்ணுக்கும் பிறந்தவர் பிங்களர், சவர்ணனுக்கும் அம்பட்டப் பெண்ணுக்கும் பிறந்தவர் நாத்தகர். மாகிட்டியனுக்கும், கரணப் பெண்ணுக்கும் பிறந்தவர் மாதாங்கர். மல்லனுக்கும் விச்சுலை குலப் பெண்ணுக்கும் பிறந்தவர் நடர். சற்பனுக்கும் க்ஷத்திரியப் பெண்ணுக்கும் பிறந்தவர் திரமீளர், நிடாதனுக்கும், காரோசருமப் பெண்ணுக்குப் பிறந்தவர் சர்மசீவியர். அயோகவனுக்கும் நீலகாரப் பெண்ணுக்கும் பிறந்தவர் நீலாதி வன்னவிக்கிரோதர். க்ஷத்தாவுக்கும் உக்கிரசாதிப் பெண்ணுக்கும் பிறந்தவர் சுவபாகர், சூத்திரனுக்கும் நிடாதப் பெண்ணுக்கும் பிறந்தவர் குக்குடர். வைதேகனுக்கும், அம்பட்ட ஜாதிப் பெண்ணுக்குஞ் சூத்திரப் பெண்ணுக்கும் பிறந்தவர் புல்சகர்.

உண்மையில் யாருக்கு யார் பிறந்திருந்தாலும் அதனாலேயே குற்றம் சொல்வதற்கில்லை என்பது நமது கொள்கையானாலும் ஒரு இழிவைக் கற்பித்து அதை நம் மக்கள் மீது சுமத்தி, ஒரு பெரிய சமூகம் நிரந்தரமாய் அடிமையாயும் காட்டுமிராண்டியாயும் இருப்பதற்குச் செய்த காரியமே ஜாதிப்பிரிவும் பாகுபாடும் என்பதை எடுத்துக் காட்டவும் அவ்விதம் கொடுமையை ஒழிப்பதற்காகவுமே இதை எழுதுகிறோம்.

பிராமணனுக்கு உக்கிர சாதிப் பெண்ணிடம் பிறந்தவர் ஆவிரதர். அம்பட்டக் கன்னிகையிடம் பிறந்தவர் அபீரர். அயோகவப் பெண்ணிடம் பிறந்தவர் திக்குவணர். தண்டகபோலனுக்கும், பிராமணப் பெண்ணுக்கும் பிறந்தவர் கசர். தசியு வென்பவனுக்கும், அயோகவப் பெண்ணுக்ம் பிறந்தவர் சைரந்தியர். வைதேகனுக்கும் அயோகவப்பெண்ணுக்கும் பிறந்தவர் மைத்திரேயர். நிடாதனுக்கும் அயோகவ சாதிப் பெண்ணுக்கும் பிறந்தவர் பார்க்கவர். கரண்டனுக்கும் விதேகசாதிப் பெண்ணுக்கும் பிறந்தவர் காருவாரர். சண்டாளனுக்கும் வைதேகப் பெண்ணுக்குப் பிறந்தவர் பாண்டு சோபாகர். நிடாதனுக்கும் வைதேகப் பெண்ணுக்கும் பிறந்தவர் ஆகிண்டிகர். சண்டாளனுக்கும் புல்க சாதி பெண்ணுக்கும் பிறந்தவர் சோபாகர். அவனுக்கும் நிடாத சாதிப் பெண்ணுக்கும் பிறந்தவர் அந்தியாவசாயிகர்.

இங்ஙனம் ஒவ்வோர் குல ஆடவரும், மகளிர்களும் தத்தம் முறை தவறிக் கூடிப் பிறநத்தனாற் பல சாதிகள் உள்ளன. அவற்றை எல்லாம் சுப்பிர பேதாகமம், பிரமபுராணம், கைகாநசம், மாதவியம், சாதி விளக்கம் முதலிய நூல்களிற் கண்டு தெளிக.

குறிப்பு – பிராக்கட்டுக்குள் இருப்பவைகள் அதே அகராதியில் காணப்படும் அர்த்தமாகும்.

இந்த விபரங்கள் 1937ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்ட மதுரைத் தமிழ் பேரகாரதி புத்தகத்தில் (3ஆம் தொகுப்பு) 797, 798ஆம் பக்கங்களில் உள்ளவையாகும்.

இப்புத்தகம் மதுரைத் தமிழ்ச் சங்கத்து அங்கத்தினர் தோழர் இ.மா.கோபாலகிருஷ்ணன் கோன் அவர்களால் வெளியிடப்பட்டு, மகாமகோபாத்தியாயர் உ.வெ.சாமிநாதய்யர் அவர்கள் முன்னுரையுடன் அப்போது கல்வி மந்திரியாக இருந்த டாக்டர் சுப்பராயன் அவர்களுக்கு கல்வி மந்திரி ஒதாவில் உரிமையாக்கப்பட்டதாகும். புத்தகத்தின் பக்கங்கள் 2000. விலை ரூ.30-0-0.

(விடுதலை – 04.09.1950)

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *