வேதகால இலக்கியங்களில் கவுரவர்கள் மட்டும்தான் குறிப்பிடப்படுகிறார்கள் என்று மகாபாரத ஆராய்ச்சியாளர் எட்டுவேடு ஆங்கின்சு (Edward Angnes) குறிப்பிடுகிறார். பாண்டவர்களைப் பற்றிய குறிப்பு வேதகால இலக்கியங்களில் இல்லை. பிராமணங்களிலோ, சூத்திரங்களிலோ பாண்டவர்களைப் பற்றிய குறிப்பு எங்குமே காணப்படவில்லை. மார்க்குசு முல்லர் என்னும் ஆராய்ச்சியாளரின் கருத்தும் இதேதான். இதிலிருந்து கி.மு 5ஆம் நூற்றாண்டில் பாண்டவர்கள் பற்றிய குறிப்பு இல்லை என்பது தெரிகிறது.
மகாபாரதப் போருக்கு ஆதாரம் இல்லை
(இ)ரிக்கு வேதத்திலே பரதவர்களின் அரசன் சுதாசுகும், இரவி நதிக்கரையில் அமைந்த 10 அரசுகளின் கூட்டாட்சிக்கும் நடைபெற்று போரைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. சிறிய அளவில் நடைபெற்ற இந்தப் போர் பற்றி குறிப்பிடப்படும் பொழுது, தேசிய அளவில் நடைபெற்றதாக சொல்லப்படுகின்ற மகாபாரதப் போர் பற்றி எந்தக் குறிப்பும் (இ)ரிக்கு வேதத்திலே இல்லை. மகாபாராதப் போர் நடைபெற்று இருந்தால் நிச்சயமாக அது (இ)ரிக்கு வேதத்திலோ மற்றைய வேத கால இலக்கியங்களிலோ குறிப்பிடப்பட்டு இருக்கும்.
மகாபாரதப் போர் நடைபெற்ற இடம் என்று சொல்லப்படுகின்ற குருசேத்திரத்தை ஒரு புனித இடம் என்று மட்டுமே வேத இலக்கியங்கள் சுட்டிக் காட்டுகின்றனவே தவிர ஒரு போர் நடை பெற்ற இடமாக அஃது எந்த இடத்திலும் சுட்டிக்காட்டப் படவில்லை.
இவற்றைவிட மகாபாரதப் பாத்திரங்கள் குறித்தும் மகாபாரதப் போர் குறித்தும் பல முரண்பாடான தகவல்கள் மகாபாரதக் கதையிலும், வேறு இலக்கியங்களிலும் காணப்படுகின்றன.
மகாபாரதத்தில் அருச்சுனன் இந்திரனின் புதல்வனாவான். ஆனால் சதபத பிராமணத்தில் இந்திரனும் அருச்சுனனும் ஒன்றே என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
வேடிக்கை, வியப்பான கணக்குகள்
இதைவிடப் போரில் பங்கு பற்றிய படைகள் குறித்து மகாபாரதத்தில் தெரிவிக்கப்படுகின்ற கணக்குகள் மிகவும் வேடிக்கையானவை.
மகாபாரதப் போரில் 18 “அக்குரோணிப்” படைகள் பங்கு பற்றியதாக மகாபாரதம் கூறுகிறது. இதில் 11 அக்குரோணிப் படைகள் கவுரவரவர்களுடையதும், 7 பாண்டவர்களுடையதும் ஆகும்.
ஓர் அக்குரோணிப் படை என்பது பின்வரும் கணக்கைக் கொண்டது.
21,870 இரதங்கள்
21,800 யானைகள்
65,610 குதிரைகள்
1,09,350 காலாட்படையினர்
ஆகவே குருசேத்திரத்தில் அணிவகுத்து நின்ற படைகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?
21,870 இரதங்கள் X 18 = 393,660 இரதங்கள்
21,800 யானைகள் X 18 = 392,400 யானைகள்
65,610 குதிரைகள் X 18 = 1,180,980 குதிரைகள்
1,09,350 கலாட்படையினர் X 18 = 19,78,300 வீரர்கள்
எந்த ஒரு நாட்டிலாவது இத்தனை பெரிய படைகள் நிற்கக் கூடிய போர்க்களத் திடல் உண்டா? இத்தனை பெரிய படை கி.மு 5ஆம் நூற்றாண்டில் இருந்திருக்க முடியுமா? கி.மு 5ஆம் நூற்றாண்டில் இருந்த மிகக் குறைந்த மக்கள் தொகையில் இவ்வளவு பேர் படைகளில் இருந்திருக்க வாய்ப்பு உண்டா? அக் காலத்தின் போக்குவரத்து வசதிகள் இத்தனை பெரிய படைகள் வருவதை அனுமதித்து இருக்குமா? ஆகவே மகாபாரதம் என்பது ஓர் அதீத கற்பனை அல்லாமல் வேறு ஒன்றும் இல்லை.
எப்படி சாத்தியமாகும்?
அத்துடன் மகாபாரதப் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை பற்றி கூறப்பட்டது பகுத்தறிவுக்கு எவ்விதத்தில் ஒவ்வாதது. 1660 பேராயிரம்(மில்லியன்) மக்கள் இறந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. இது எப்படிச் சாத்தியமாகும்?
அக் காலத்தில் இருந்த போர்க்கருவிகள் எப்படிப்பட்டவை என்பதைத் தொல்பொருள் ஆராய்சியாளர்கள் பல சான்றுகளுடன் மெய்ப்பித்திருக்கிறார்கள். அரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகக் காலத்தின் ஆயுதங்களாகக் கற்கருவிகள், கோடரிகள், சிறிய ஈட்டிகள் போன்றவை விளங்குகின்றன. இவ்வாறான நிலையில் குருசேத்திரப் போர் நடைபெற்று இருந்தால், போர்க்கருவிகளும் இவற்றை விடத் தரம் குறைந்தவைகயாகவே இருந்திருக்க முடியும்.
கீதையின் பொய்மை
‘கீதையைப் பற்றிய உண்மைகள்’ என்ற ஆங்கில நூல் இன்னும் ஒரு வேடிக்கையான விடயத்தைப் பற்றி கூறுகிறது.
பாரதப் போரில் பங்கு பற்றிய சேனைகள் – 18 அக்குரோணிப் படைகள்
போர் நடைபெற்ற நாட்கள் – 18
பாரதப் போர் வருணிக்கப்படும் காண்டங்கள் – 18
பகவத்து கீதையின் அத்தியாயங்கள் – 18
போரின் பின்பு பாண்டவர் தரப்பில் எஞ்சியவர் – 6 இது 18இல் மூன்றில் ஒரு பங்கு
கவுரவர் தரப்பில் எஞ்சியவர் – 3 இது 18 இல் ஆறில் ஒரு பங்கு
யுதிட்டிரர் ஆண்ட ஆண்டுகள் – 36 இது 18இன் இரு மடங்கு
போர் முடிந்து கிருட்டிணன் வாழ்ந்த ஆண்டுகள் – 36 இதுவும் 18இன் இரு மடங்குகள்.
இப்படி இந்த 18 என்ற இலக்கம் மகாபாரதக் கதையில் முதன்மைத்துவம் பெற்ற இலக்கமாக மீண்டும் மீண்டும் சுற்றி வருகிறது. பாரதக் கதை எழுதியவர் எண்சோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர் போலும்.
பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை
இந்த மகாபாரதம், இராமாயணம் எல்லாமே சுத்தப் புரட்டு என்று தந்தை பெரியார் சொல்வார். இராமாயணம் “திரேதாயுகத்தில்” நடந்ததாகச் சொல்லப்படுகிறது. ஒரு யுகம் என்பது 12,96,000 வருடங்கள் என்று கணக்கு சொல்லப்படுகிறது. ஆனால் இராமன் 50,00,000 வருடங்கள் ஆண்டான் என்று இராமாயணம் சொல்லுகிறது. இப்படி பகுத்தறிவுக்கு எந்த வகையிலும் பொருந்தாத கணக்குகள் மகாபாரதத்தலும் , இராமாயணத்திலும் விரவிக் கிடக்கின்றன.
மகாபாரதம் எழுதப்பட்ட காலம் காட்டுமிராண்டிக் காலம். நீதி, ஒழுக்கம், கற்பு, அகிம்சை போன்ற சிந்தனைகள் வளராத காலம். ஆனால் பிற்காலத்தில் கற்பு, ஒழுக்கம் போன்ற சிந்தனைகள் வளர்ந்தன. இராமாயணம் புனையப்பட்டதன் காரணங்களில் ஒன்றாக இதையும் தந்தை பெரியார் சுட்டிக்காட்டுவார்.
மொத்தத்தில் மகாபாரதமோ, இராமாயணமோ, புராணக் கதைகளோ நடந்த வரலாறுகள் அல்ல. இதை எமது மக்கள் பகுத்தறிந்து உணர்ந்து கொள்ள வேண்டும்.
– புலோலியூரான்-வன்னியிலிருந்து
‘‘இலக்குவனார் திருவள்ளுவன்
ஸநாதனம் – பொய்யும் மெய்யும்’’ பக். 185-188