தூத்துக்குடி,ஜூலை.25– திருவிழா முடிந்து 2 நாட்களில் குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து ரூ.2 லட்சத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
அம்மன் கோவில்
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் தென்திருப்பேரை அருகே குரங்கணியில் உள்ள முத்துமாலை அம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆனி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 15-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி தீர்த்த வாரியுடன் நிறைவு பெற்றது. இதில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொண்டனர்.
உண்டியல்கள்
இந்த கோவிலில் அன்னதான உண்டியல் உள்பட 11 நிரந்தர உண்டியல்களும், தற்போது நடந்த திருவிழாவுக்காக 6 தற்காலிக உண்டியல்களும் அமைக்கப்பட்டிருந்தன.
நேற்று (24.7.2025) காலையில் பூஜை செய்வதற்காக பூசாரி கோவிலை திறந்தார். அப்போது, அங்குள்ள நாராயணர் சன்னதி, துர்க்கையம்மன் சன்னதி முன் வைக்கப்பட்டு இருந்த 2 தற்காலிக உண்டியல்களை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பூசாரி கோவில் வளாகம் முழுவதும் தேடிப் பார்த்தார்.
அப்போது, கோவிலுக்கு வடக்கு பகுதியில் 2 உண்டியல்களும் உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தன.
பணம் கொள்ளை
இதுகுறித்து ஆழ்வார்திருந கரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் கோவிலுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், கோவிலில் தூணில் கயிறு மூலம் கட்டப்பட்டு இருந்த 2 தற்காலிக உண்டியல்களை தூக்கிச் சென்றனர். பின்னர் உண்டியல்களை உடைத்து அதில் இருந்த ரூபாய் நோட்டுகளை கொள்ளையடித்துச் சென்றதும், நாணயங்களை அப்படியே உண்டியல்களில் போட்டுவிட்டுச் சென்றதும் தெரியவந்தது.
‘ஒவ்வொரு உண்டியலிலும் சுமார் ரூ.1 லட்சம் வரை காணிக்கை செலுத்தப்பட்டிருக்கலாம். எனவே தற்போது கொள்ளையடிக்கப்பட்ட உண்டியல்களில் சுமார் ரூ.2 லட்சம் வரை பணம் இருந்து இருக்கலாம்’என்று பக்தர்கள் தெரிவித்தனர்
இந்த துணிகர சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த அடையாளம் தெரியாத நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.