சென்னை, ஜூலை 24- மருத்துவ மனையில் சிகிச்சையில் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (23.7.2025) பொதுமக்களுடன் காணொலி மூலம் உரையாடினார். மக்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டார்.
மருத்துவமனையில் இருந்தாலும்…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவ மனையில் இருக்கும் நிலையிலும், மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பாக அதிகாரிகளுடன் நேற்று முன் தினம் (22.7.2025) ஆலோசனை நடத்தினார். ‘உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடர்பாக, தலைமைச் செயலாளர் முருகானந்தத்துடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த திட்டத்தில் பெறப் பட்ட மனுக்கள் எண்ணிக்கை, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். சந்திப்பு, ஆலோசனை தொடர்பாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
சந்திப்பேன்
இந்த நிலையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமுக்கு வந்திருந்த பொதுமக்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வழியாக நேற்று (23.7.2025) உரையாடினார். இதற்காக அப்பல்லோ மருத்துவமனையில் தனி அறை உருவாக்கப்பட்டிருந்தது.
முதலமைச்சரின் குரலை காணொலியில் கேட்ட தொண்டர்களும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். ‘நீங்கள் நலம் பெற்று விரைவில் திரும்ப வேண்டும்’ என்று அவர்கள் விருப்பம் தெரிவித்தனர். அவர்களிடம் முதலமைச்சர் மு.கஸ்டாலின் ‘விரைவில் உங்களையெல்லாம் சந்திக்க உங்கள் மாவட்டங்களுக்கு வருவேன்’ என்று தெரிவித்தார்.
ஆட்சியர்களுடன் ஆலோசனை
தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்ட மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் ஆகியோருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் பேசினார். ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்தார். முகாம்களுக்கு மனுக்களை அளிக்க வரும் மக்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரவேண்டும், அவர்கள் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களை முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.
பின்னர் தலைமைச்செயலாளர் முருகானந்தத்துடன் ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு, திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தார்.
இதற்கிடையே, மக்களுடன் உரையாடியது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மருத்துவமனையில் இருந்தபடியே ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் குறித்து மாவட்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொது மக்களிடம் கேட்டறிந்ததோடு, அரசுக் கோப்புகளிலும் கையெ ழுத்திட்டேன். மருத்துவர்கள் அறிவுறுத்திய ஓய்வுக்கு பிறகு விரைவில் உங்களை சந்திக்க உங்கள் மாவட்டங்களுக்கு வருவேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.