தமிழ்நாட்டின் வரலாற்றை இருகூறுகளாகப் பிரிக்க வேண்டுமென்றால், சுயமரியாதை இயக்கத்திற்கு முன்பு பின்பு என்றுதான் பிரிக்கவேண்டும். அந்த சுயமரியாதை இயக்கத்தின் வரலாறும், பெரியாரால் தொடங்கப்பட்ட ‘குடி அரசு’ இதழின் வரலாறும் வேறு வேறல்ல. திராவிட இயக்கத்திற்கும் இஸ்லாமியர்களுக்குமான உறவு எப்படி உருவானது, வலுப்பெற்றது என்பதை அறிந்துகொள்வதற்கு ‘குடிஅரசு’ இதழின் வழியே ஏராளமான சான்றுகள் உள்ளன.
1925 ஆம் ஆண்டில் ‘குடிஅரசு’ இதழ் உருவாவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அப்படியானதொரு இதழைத் தொடங்க வேண்டுமென்ற சிந்தனையில் பெரியார் இருந்தார். இதழ் பற்றிய அவரது எண்ணவோட்டத்தில் சிறுபான்மைச் சமூகம் விரும்பும் ‘சகோதரத்துவம்’ என்பதும் நோக்கமாக இருந்தது. 18.05.1927 ‘குடிஅரசு’ இதழில் இதுதொடர்பாக எழுதியுள்ள பெரியார், “நமது நாட்டு மக்களுக்குள் சுயமரியாதையையும், சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் உண்டாக்கி, ‘குடி அரசு’ என்னும் பத்திரிகையை ஆரம்பிக்க வேண்டும் என்பதாக முதன்முதலில் நானும் எனது நண்பர் ஸ்ரீமான் தங்கபெருமான் பிள்ளையும் 1922-இல் கோயம்புத்தூர் ஜெயிலில் சிறைவாசம் செய்யும்போதே நினைத்தோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
‘குடிஅரசு’ இதழ் பங்களிப்பு!
அந்த சகோதரத்துவத்தின் வெளிப்பாடுதான் இஸ்லாமிய சமூகத்திடம் அவர் காட்டிய அன்பு.
1925-ஆம் ஆண்டு முதல் 1949 ஆண்டு வரை பல்வேறு சமுகங்கள். ஜாதிகள், மதங்களைச் சேர்த்தவர்களும், பெண்களும் ‘குடிஅரசு’ இதழில் கட்டுரைகள் எழுதியுள்ளனர். அதில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களும் பலர் உள்ளனர். இக்பால் அலிஷா, கலிஃபுல்லா, எஸ்.கே.உபயதுல்லா, கோவை எம்.ஏ. ரஹ்மான், கோவை கே.எம்.ஹனீப், எஸ்.கே.முஹம்மத் ஹனீப் சாகிப், பி.எம். அப்துல் மஜீது, கோவை கே.எஸ்.முஹம்மன், ஹுசைன், ஏ.எம்.அஸ்லீம், ஏ.எம்.யூசுப் மரைக்காயர், காயல் எஸ்.கே.சுலைமான், நாகூர் ஜராப் எஸ்.ஏ.முகம்மது, ரஹியா மரைக்காயர், கே.முஹம்மத் இஸ்மாயில், விருத்தாசலம் எஸ்.ஏ. ரஹ்மான், வா.மு.அ.ரகீம், திருவாரூர் ஷெரீஃப், கல்லிடை டி.எம்.பீர் முகம்மது, எஸ்.டி.பாட்சா என இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்த பெரும் பட்டாளமே குடி அரசு’ இதழில் கட்டுரைகள் தீட்டியுள்ளனர்.
1938-இல் நடைபெற்ற கும்பகோணம் முஸ்லிம் மாநாடு, 1989-இல் நடைபெற்ற பட்டுக்கோட்டை தாலுகா முஸ்லிம் லீக் முதலாவது அரசியல் மாநாடு, 1940-இல் நடைபெற்ற ஆம்பூர் முஸ்லிம் லீக் மாநாடு, விழுப்புரம் தென்னாற்காடு முஸ்லிம் லீக் 3-ஆவது அரசியல் மாநாடு உள்ளிட்ட சில மாநாடுகள் குறித்த செய்திகளையும் ‘குடிஅரசு’ இதழில் பெரியார் பதிவு செய்திருக்கிறார். இஸ்லாமிய அமைப்புகளின் விழாக்கள், பொதுக்கூட்டங்கள், மாநாடுகளில் பெரியார் பங்கேற்ற செய்திகளும், இஸ்லாம் மார்க்கம் குறித்த பெரியாரின் கருத்துகளும் ‘குடி அரசு’ இதழில் தொடர்ச்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
‘‘திராவிட இயக்கத்திற்கு, இயக்கமும் ஏடும் வேறு வேறல்ல. இயக்கம்தான் ஏட்டை நடத்தியது. ஏடுதான் இயக்கத்தை வழி நடத்தியது.’’
கடவுள் மறுப்புக் கொள்கையாளராகவே பெரியாரை அணுகும் பலருக்கு ‘இன இழிவு நீங்கிட இஸ்லாமே நன்மருந்து’ என பெரியார் கூறியது ஏன் என்று ஆராய்ந்தாலே, பெரியாருக்கு பிரச்சினை கடவுளிடம் அல்ல என்பது விளங்கும். ‘ஒரு மனிதன். நான் மாலை 5 மணிக்கு இஸ்லாம் கொள்கையை ஏற்றுக்கொண்டதாகச் சொல்லி 5:38 மணிக்கு தீண்டாதவன் என்கின்ற இழிவிலிருந்து மீண்டு, தெருளில் நடக்க உரிமை பெற்று மனிதனாக முடியும்’ என்று 02.08.1931 ‘குடிஅரசு’ இதழில் குறிப்பிட்டுள்ளார். ஆக, ஜாதி இழிவில் இருந்து ஒருவரை விடுவித்து, அவர்களின் சுயமரியாதையைக் காக்கும் உடனடி திவாரணியாக இஸ்லாம் உள்ளது என்பதே பெரியாரின் கருத்தாக இருந்தது.
நபிகள் நாயகம் விழாவில், பெரியார் பங்கெடுத்து வந்தார். அவர் வழியை அண்ணாவும், கலைஞரும் பின்பற்றினார்கள் என்பதை, ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளோம். 28.7.1931-இல் சாத்தான்குளத்தில் நடைபெற்ற விழாளில் பேசிய பெரியார். ‘திரு.முகம்மது நபியைப் பற்றி யார் எப்படி நினைத்துக் கொண்டாலும், நான் அவரை ஒரு மனிதர் என்னும் மனிதரைப் போலவே தாயும் தகப்பனும் கூடி கருத்தரித்துப் பிறந்தவர் என்றும் கருதித்தான் அவரால் செய்யப்பட்ட தாகச் சொல்லும் விசயங்களில் அனேகத்தை நான் புகழ்கிறேன் அதற்காகவே அவரையும் நான் பாராட்டுகிறேன். அப்படிச் சொல்லப்படுபவைகளே அந்த மார்க்கத்திற்கு ஒரு பெருமை என்றும் நினைக்கிறேன். ஆனால், மற்ற மதத்துக்காரர்களோ தங்கள் மதத் தலைவரை ஒரு மனிதர் என்றாலே, கோபித்துக் கொள்கிறார்கள்” என்று பேசினார்.
இன்றைக்கும் வட இந்தியாவில் மாட்டுக்கறி வைத்திருந்தார்கள் என தாழ்ந்தப்பட்டவர்கள். இஸ்லாமியர்கள் தாக்கப்படும் சம்பவங்களைத் தொலைக்காட்சிகளில் பார்க்கிறோம். ‘பசுவதை எதிர்ப்பு’ என்ற போர்வையில், சங் பரிவார்கள் நடத்தும் கும்பல் தாக்குதல்கள் பாசிச பாஜக, ஆட்சியில் பன்மடங்கு பெருகியிருக்கின்றன. சர்வதேச சமூகமே அச்சம் தெரிவிக்கும் அளவுக்கு ஆபத்தாக மாறியிருக்கிறது இந்த கும்பல் தாக்குதல். ஆனால், இப்பிரச்சினை 100 ஆண்டுகளுக்கு முன்பும் இருந்திருக்கிறது என்பதை ‘குடிஅரசு’ இதழ் மூலம் அறிய முடிகிறது.
இதுகுறித்து 01.07.1926 ‘குடிஅரசு’ இதழில் எழுதியுள்ள பெரியார். “இந்துக்களுக்கு எப்படி ஒரு ஆட்டையோ, கோழியையோ, பன்றியையோ விலை போட்டு வாங்கி வளர்த்து கொன்று தின்பதற்கு பாத்தியமுண்டோ அதே போல் முஸ்லிம்களுக்கும் பசுவையோ, ஆட்டையோ, கோழியையோ விலை போட்டு வாங்கிக் கொன்று தின்னப் பாத்தியமுண்டு. மாடு சாப்பிடுவதும் மாட்டைக்கொல்வதும் நமது தேசத்தில் முஸ்லீம்கள் மாத்திரம் செய்யவில்லை. நமது நாட்டில் பஞ்சமர் என்று சொல்வோரில் கோடிக்கணக்கான பேர்கள் அப்படியே செய்கிறார்கள். நாம் இப்போது எந்த அரசாங்கத்தின் கீழ இருக்கிறோமோ அந்த அரசாங்கமே (ஆங்கிலேய அரசு) மாடு தின்கிற வகுப்பைச் சேர்ந்த வர்கள்தான்” என்று மிக எளிமையாக இப்பிரச்சினையை விளக்கியவர் பெரியார்.
இஸ்லாமிய ஆதரவு
ஒடுக்கப்பட்டோரின் சுயமரியாதைக்காக மட்டும் அல்லாமல், அரசியல் சார்ந்தும் பெரியாரின் இஸ்லாமிய ஆதரவு நிலைப்பாடு சற்றே வியப்பைத் தருவதாகும். “ஏனெனில் கல்வியிலும், சமூகத்துறையிலும் பொருளாதாரத்திலும் அரசியலிலும் பிற்படுத்தப்பட்டு, தாழ்த்தப்பட்டு கிடந்த மக்கள் முன்னேற்றமடைய முயற்சிக்க வழிகாட்டியவர்கள், முதன் முதல் முஸ்லிம்களேயாகும். எனது தோழர் கலீஃபுல்லா சாயுபு அவர்கள் சுயமரியாதை இயக்கத்துக்குக்கூட 1,500 வருசத்துக்கு முன்னமேயே வழிகாட்டியது இஸ்லாம் என்றார். ஜஸ்டிஸ் இயக்கத்துக்குக்கூட 35 வருசத்துக்கு முன்னமேயே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கு வழிகாட்டியவர்கள் முஸ்லிம்களேயாகும். அதாவது முஸ்லிம் லீக்கேயாகும்” என்று 05.12.1937 தேதியிட்ட ‘குடிஅரசு’ இதழில் பெரியாரின் பேச்சு பதிவாகி யிருக்கிறது.
இவ்வாறு ‘குடி அரசு’ இதழ் முழுக்க பெரியாரின் இஸ்லாமியச் சார்பும். இஸ்லாமியர்களை அரவணைத்த மாண்பும் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. விடுதலை’, ‘திராவிட நாடு’ ‘மாலைமணி’ ‘நம் நாடு’, ‘முரசொலி’ வரை அந்த மாண்பும், மனிதநேயமும் தொடர்ந்தன, தொடர்கிறது… ஏனெனில் திராவிட இயக்கத்திற்கு, இயக்கமும், ஏடும் வேறு வேறல்ல. இயக்கம்தான் ஏட்டை நடத்தியது. ஏடுதான் இயக்கத்தை வழிநடத்தியது.
நன்றி: ‘முரசொலி’ 24.7.2025