சென்னை, ஜூலை 24– தேவநேயப் பாவாணா், வீரமாமுனிவா் உள்பட செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் சாா்பில் வழங்கப்படும் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த இயக்ககம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழ் மொழியின் மேம்பாட்டுக்கு பாடுபடும் தமிழறிஞா்கள், படைப்பாளா்களைப் பாராட்டி தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் வழங்கி வருகிறது.
அந்த வகையில் 2025-ஆம் ஆண்டுக்கான தேவநேய பாவாணா் விருது (ரூ.2 லட்சம், ஒரு பவுன் தங்க பதக்கம்), வீரமாமுனிவா் விருது (ரூ.2 லட்சம், ஒரு பவுன் தங்கப்பதக்கம்), தூய தமிழ் ஊடக விருது (ரூ.50,000, ரூ.25,000 மதிப்புள்ள தங்கப்பதக்கம்), நற்றமிழ் பாவலா் விருது(ரூ.50,000, ரூ.25,000 மதிப்புள்ள தங்கப்பதக்கம்), தூயதமிழ் பற்றாளா் விருது (ரூ.20,000 பரிசு) ஆகிய விருதுகளுக்கும், தூய தமிழ் பற்றாளா் பரிசுக்கும் (ரூ.5,000 பரிசு) தமிழறிஞா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.