சென்னை, ஜூலை 24- புவி கண்காணிப்புக்காக நாசாவுடன் இணைந்து உருவாக்கிய அதிநவீன நிசார் செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலமாக இஸ்ரோ ஜூலை 30ஆம் தேதி விண்ணில் செலுத்துகிறது.
செயற்கைக் கோள்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மய்யம் (நாசா) இணைந்து புவியின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிப்பதற்காக நிசார் (NASA-ISRO Synthetic Aperture Radar) என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த முடிவு செய்தன. இதற்கான ஒப்பந்தம் 2014 செப்டம்பர் 30இல் கையெழுத்தானது. அதன்பின்னர் இரு நாடுகளின் விஞ்ஞானிகள் கூட்டுழைப்பில் சுமார் 12,000 கோடி மதிப்பிலான நிசார் செயற்கைக் கோளின் தயாரிப்புப் பணிகள் கடந்தாண்டு நிறைவுபெற்றன.
இறுதிகட்டப் பணிகள்
அதைத்தொடர்ந்து பல்வேறுகட்ட சோதனைகள் முடிந்த நிலையில், நிசார் செயற்கைக் கோள் ஜிஎஸ்எல்வி எப்-16 ராக்கெட் மூலமாக சிறீஹரிகேட்டாவில் உள்ள 2ஆவது ஏவுதளத்தில் இருந்து ஜூலை 30ஆம் தேதி மாலை 5.40 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.
இதற்கான இறுதிகட்ட பணிகளில் விஞ்ஞானிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர். இந்த செயற்கைக்கோள் புவியில் இருந்து 743 கி.மீட்டர் தொலைவில் சூரிய ஒத்திசைவு சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தப் பட உள்ளது.
நிசார் புவி கண்காணிப்புக்காக தயாரிக்கப்பட்ட அதிநவீன ரேடார் செயற்கைக்கோளாகும். இதன் எடை 2,392 கிலோவாகும். இதன் ஆயுட்காலம் 3 முதல் 5 ஆண்டுகள். இது பூமியின் மாறிவரும் சூழல்கள் பற்றி விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளும். இதன்மூலம், புவியின் சுற்றுச்சூழல் அமைப்புகள், பருவநிலை மாற்றங்கள், பேரிடர் மேலாண்மை உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்த தகவல்களை பெறமுடியும். அதாவது, பூமியின் மேற் பரப்பில் ஏற்படும் மிகச்சிறிய மாற்றங்களைக் கூட கண்டறிய முடியும்.
ரேடார் தொழில்நுட்பம்
இந்த செயற்கைக்கோள் முழு பூமியையும் 12 நாட்களுக்கு ஒருமுறை சுற்றிவந்து துல்லியமான தரவுகள் மற்றும் உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களை இரவு, பகல் என அனைத்து வெப்ப நிலைகளிலும் வழங்கும்.
இதற்காக எல் பேண்ட், எஸ் பேண்ட் ஆகிய சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் தொழில்நுட்பங்கள் செயற்கைக் கோளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒரே செயற்கைக்கோளில் 2 அலை வரிசைகள் கொண்ட கருவிகள் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும். மேலும், நிசார் அனுப்பும் தகவல்களை உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்களும் பெறமுடியும்.