பூமிக்கு சுமார் 154 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருந்து மர்ம சிக்னல் வருவதாகவும், இது ‘சூப்பர் எர்த்’ எனப்படும் கோளிலிருந்து வருவதாகவும் நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
TOI-1846 b என அழைக்கப்படும் சூப்பர் எர்த் கோள், வித்தியாசமான சிக்னலை திரும்ப, திரும்ப அனுப்பியுள்ளது. இந்த கோள் பூமியை விட இரண்டு மடங்கு அகலமும் நான்கு மடங்கு அதிக எடையையும் கொண்டுள்ளது. இந்த கோளை கண்டறிய நாசாவின் டிரான்சிட்டிங் எக்ஸோபிளானெட் சர்வே செயற்கைக்கோள் முக்கிய பங்காற்றியது.
இந்த செயற்கைக்கோள், சூப்பர் எர்த் சுற்றி வரும் சூரியனின் வெளிச்சத்தில் ஏற்படும் சிறிய மாற்றங்களை கண்காணித்து, இந்த கோளின் இருப்பை உறுதிப்படுத்தியது. ஒவ்வொரு முறையும் சூப்பர் எர்த் அதன் சூரியன் முன் போகும்போது, சிறிய அளவிலான வெளிச்சம் குறைகிறது, இதை இந்த செயற்கைக்கோள் தெளிவாக அடையாளம் கண்டிருக்கிறது.
இந்தக் கோள் ‘ஆர வரம்பு இடைவெளி’ வகையை சேர்ந்தது. அதாவது, பூமி போன்ற பாறைகளையும் நெப்டியூன் போன்ற வாயுவையும் கொண்டிருக்கும். இந்தக் கோளில் அடர்த்தியான பனிக்கட்டி அடுக்கு அல்லது ஆழமற்ற கடல் போன்ற அமைப்புகள் இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதன் மேற்பரப்பு வெப்பநிலை சுமார் 300°C ஆக இருந்தாலும், இதில் தண்ணீர் இருக்க வாய்ப்பு உள்ளது. நம் பூமியில் கடல் அலைகள் எழுவதை போன்று அங்கும் தண்ணீரில் அலை எழலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்தக் கோள் தன் ஒரு பக்கத்தை எப்போதும் அதன் சூரியனை பார்த்த மாதிரியும், மற்றொரு பக்கம் இருளை பார்த்த மாதிரியும் இருக்கும். இதனால் குளிர்ந்த பகுதியில் தண்ணீர், பூமியில் இருப்பதை போன்று தண்ணீர் வடிவத்தில் இருக்கலாம்.
இவை அனைத்தும் ஒரே ஓர் அறிவியல் ஆய்வகத்திலிருந்து எடுக்கப்பட்ட தகவல்களை வைத்து உறுதி செய்யப்படவில்லை. பூமியின் நான்கு கண்டங்களில் இருந்து விஞ்ஞானிகள் இந்தக் கோளை ஆய்வு செய்து தகவல்களை உறுதி செய்திருக்கின்றனர். இந்தக் கோள் தனது சூரியனை நான்கு நாட்களில் சுற்றி வருகிறது என்பதும் கண்டறியப்பட்டிருக்கிறது. ஹவாயில் உள்ள ஜெமினி நார்த் தொலைநோக்கி மூலம் மேலும் சில தகவல்கள் இந்தக் கோள் பற்றி கிடைத்திருக்கின்றன.
பூமியிலிருந்து செய்யப்பட்ட ஆய்வில் அதிக தகவல்கள் கிடைத்திருக்கும் நிலையில், நாசா விஞ்ஞானிகள் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியை பயன்படுத்தி இந்தக் கோளை ஆய்வு செய்ய திட்டமிட்டிருக்கின்றனர். இந்த ஆய்வில்தான் ஏன் சூப்பர் எர்த் கோளிலிருந்து நமக்கு சமிக்ஞை வருகிறது? என்பதை தெரிந்துக்கொள்ள முடியும்.