சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக கொடிக் கம்பங்களை நட்டு விட்டு, அதற்கு ஆதரவாக சட்டப் போராட்டம் நடத்துவது சரியா? என்று வினா தொடுக்கிறது ‘தினமலர்’ ஏடு (22.7.2025 பக்கம் 8).
நியாயமான கேள்வி போல் தோன்றும்; அதே நேரத்தில் நடைபாதைகளில் ஆயிரக்கணக்கான கோயில் களைக் கட்டியிருக்கிறார்களே – அதுபற்றி ‘தினமலர்’ வகை யறாக்கள் வாய் திறக்காதது ஏன்?
கொடிக் கம்பத்தின் அளவும் நடைபாதைகளில் கட்டப்படும் ேகாயில்களின் அளவும் எந்த அளவு என்று சிந்தித்துப் பார்க்கும் அளவுக்குக்கூட புத்தியில்லையா? ‘பக்தி வந்தால் புத்தி போகும்’ என்று தந்தை பெரியார் சும்மாவா சொன்னார்!
நடைபாதை என்பது பொது மக்கள் நடந்து செலவதற்கானது. அதில் கொண்டு போய் கோயில் கட்டினால், போக்குவரத்துப் பாதிக்கப்படாதா? நடை பாதையை விட்டு சாலையில் மக்கள் நடந்து செல்லும் நிர்பந்தம் ஏற்படும்போது விபத்துகள் ஏற்படத்தானேசெய்யும்!
நடைபாதைக்களில் எந்த மத சம்பந்தமான கோயில்களையும் தங்கள் விருப்பத்திற்கேற்பக் காட்டுவது சட்டப்படி குற்றம்.
உயர்நீதிமன்ற உச்சநீதிமன்ற தீர்ப்புகளும் இந்தக் குற்றத்தைச் சுட்டிக் காட்டியுள்ளன. இவற்றை அகற்ற வேண்டும் என்று ஆணைகளும் பிறப்பிக்கப்பட்டது உண்டு.
அரசு அலுவலகங்களுக் குள்ளேயோ, அரசு வளாகங் களுக்குள்ளேயோ எந்த மதச் சின்னங்களும் இடம் பெறக் கூடாது என்று – அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது தனி ஆணையே பிறப்பித்தது உண்டு (அரசாணை எண்: 7553/66–2, நாள் 29.4.1968).
அதேபோல நடைபாதைக் கோயில்களை அகற்ற தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டதுண்டு (ஆணை எம்.எஸ். 1052, நாள் 28.5.1973).
நடைபாதைக் கோயில்கள் பற்றி உச்சநீதிமன்றம் 2010 செப்டம்பரில் ஓர் அரிய தீர்ப்பை வழங்கியது. பொதுவாக Foot Paths மற்றும் பொது மக்கள் செல்வதற்கான வழிகள் – இந்த இடங்களில் மத சின்னங்கள் அல்லது மதவாதக் கட்டடங்கள் சட்டப்படி அனுமதிக்கப்படுவதில்லை என்று கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எம். லோதா மற்றும் எஸ்.எம். முகோபத்தியா ஆகியோர் கூறியுள்ளனர்.
மாநில தலைமைச் செ யலாளர்கள் உச்சநீதிமன்றத்தில் நேரிடையாக இது குறித்து விளக்கத் தயாராக வர வேண்டும், அல்லது 6 வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறுதியிட்டு ஆணையிட்டும் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
ெகாடி மரத்தை அகற்ற வேண்டும் என்று சொன்னது – உயர்நீதிமன்றம், நடைபாதைக் கோயில்களை அகற்ற வேண்டும் என்று சொன்னதோ உச்சநீதிமன்றம்!
‘தினமலருக்கு’ மட்டுமல்ல – அனைவருக்கும் இது முக்கியமான தகவலாகும்.
– மயிலாடன்