முதுநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழ்நாடு மருத்துவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மய்யம் ஒன்றிய அரசின் பழி வாங்கும் போக்கு! – கடும் எதிர்ப்பு

சென்னை, ஜூலை 23-  முதுநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மருத்துவர்களுக்கு, 500 முதல் 1,000 கி.மீ. தொலைவில் உள்ள அண்டை மாநிலங்களான கேரளம், கருநாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் தேர்வு மய்யங்கள் ஒதுக்கப்பட்டிருப்பது கடும் எதிர்ப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை உட்பட பல இடங்களில் தேர்வு மய்யங்கள் இருந்தும், வெளிமாநிலங்களில் தேர்வு மய்யங்கள் ஒதுக்கப்பட்டிருப்பது, தமிழ்நாட்டு மாணவர்களை ஒன்றிய அரசு பழிவாங்கும் போக்காகவே பார்க்கப்படுகிறது.

 தேர்வு மய்ய ஒதுக்கீட்டில் குளறுபடி:

நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள எம்.டி., எம்.எஸ்., முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான இடங்கள் நீட் தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இந்தத் தேர்வை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் (NBEMS) நடத்துகிறது.

இந்த ஆண்டு, முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ஜூன் 15 ஆம் தேதி நாடு முழுவதும் 179 நகரங்களில் இரு ஷிப்ட்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ் முடித்த 25,000 மருத்துவர்கள் உள்பட நாடு முழுவதும் 2.30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். பின்னர், ஒரே நேரத்தில் மட்டுமே தேர்வு நடத்த வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் தேர்வு மய்யங்கள் ஒதுக்க விருப்பம் தெரிவித்திருந்த தமிழ்நாடுமருத்துவர்களுக்கு, ஆந்திரம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் எங்கோ ஒரு இடத்தில் தேர்வு மய்யங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிமாநிலங்களில் ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மய்யங்களுக்குச் செல்ல, தேர்வர்கள் கடும் நிதிச் சுமையையும், மன உளைச்சலையும் சந்தித்து வருகின்றனர். இது தொடர்பாக தேர்வர்கள் சிலர் கூறியதாவது:

விமானங்களில் செல்லும் நிலை

“தொலைதூரங்களில் உள்ள தேர்வு மய்யங்களுக்குச் செல்ல ரயில்களில் பயணச்சீட்டு இல்லாததால், விமானங்களில் ரூ.10,000க்கும் அதிகமாக செலவு செய்ய வேண்டியுள்ளது. விமானக் கட்டணம், தங்குமிடம், உணவு எனத் தேர்வு எழுத செல்பவர்கள் ரூ.30,000க்கும் அதிகமாக செலவு செய்ய வேண்டியுள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநிலங்களைச் சேர்ந்த தேர்வர்களுக்கும் 500 முதல் 1,000 கி.மீ. தொலைவில் தேர்வு மய்யங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்வர்களுக்கு அவர்கள் வசிக்கும் மாவட்டம் அல்லது அருகில் உள்ள மாவட்டங்களில் தேர்வு மய்யங்களை ஒதுக்க வேண்டும்” என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கடும் கண்டனம்

இந்த தேர்வு மய்ய ஒதுக்கீடு குறித்து முதுநிலை நீட் தேர்வர்களும், தமிழ்நாடு உறைவிட மருத்துவர் சங்கத்தினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தேர்வர்களுக்கு அருகில் உள்ள தேர்வு மய்யங்களை ஒதுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கெனவே நீட் தேர்வுக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு உள்ள நிலையில், இந்த தேர்வு மய்ய ஒதுக்கீடு மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஒன்றிய அரசு வேண்டுமென்றே தமிழ்நாடுமாணவர்களை பழிவாங்கும் நோக்கில் இவ்வாறு தேர்வு மய்யங்களை ஒதுக்கியுள்ளதா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *