சேலம் ஜில்லா இரண்டாவது சுயமரியாதை மாநாடு 1933 ஆகஸ்ட் 19, 20 தேதிகளில் நடைபெற்றது.
சென்ற வருஷம் சேலத்தில் நடந்த முதலாவது ஜில்லா சுயமரியாதை மகாநாட்டிலும், சுமார் 3 வருஷங்களுக்கு முன் ராசிபுரத்தில் நடந்த முதலாவது தாலுகா மகாநாட்டிலும் சிலரால் உண்டாக்கப்பட்ட இரண்டொரு அசவுகரியங்களும், இடையூறுகளும் மற்றும் எதிர்ப்பிரச்சாரங்கள் முதலியவைகளும், இந்த மகாநாட்டில் சிறிதுகூட தலை காட்டுவதற்கில்லாமல் மறைந்து போனதும் இச் ஜில்லாவாசிகளுடைய பூரண ஒத்துழைப்பையும், ஆதரவையும் தாராளமாய்க் கொண்டிருந்ததல்லாமல் சுமார் 2000 பேருக்கு மேற்பட்ட பிரதிநிதிகள் ஜில்லாவின் எல்லாப் பக்கங்களிலிருந்தும் விஜயம் செய்து மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றதும் இச் ஜில்லாவில் இந்த இரண்டு வருஷத்திற்குள் பகுத்தறிவு வளர்ச்சியும், சமதர்ம உணர்ச்சியும் மிகத்தாராளமாய் பரவியிருப்பதற்குத் தக்கதோர் சான்றாகும். நிற்க, மற்றொரு விசேஷம் என்னவென்று பார்ப்போமானால் ஜமீன்தாரல்லதார் மகாநாடு ஒன்று அங்கு கூட்டப்பட்டதேயாகும். இம்மகாநாடு கூட்டப்பட்டதும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய நோக்கமென்ன? அதன் கொள்கை என்ன? அதற்காக ஏற்படுத்திக் கொண்டிருக்கும் திட்டங்கள் என்ன? என்பனவைகளை விளக்குவதாகும்.
சுயமரியாதை இயக்கத்தின் லட்சியங்கள், கொள்கைகள் ஆகியவைகளைப் பற்றி, யார் பழித்தபோதிலும், யார் திரித்துக் கூறிய போதிலும், யார் அதைத் தூஷித்து விஷமப் பிரச்சாரம் செய்த போதிலும், யார் அதை வெளியில் பரவவொட்டாமல் தடுத்த போதிலும், யார் அதை வெகு சிறு அற்ப லட்சியம் என்று கூறிய போதிலும் யார் அதைக் காரியத்தில் செய்ய முடியாத ஒரு அசாத்தியமான லட்சியம் என்று சொன்ன போதிலும் அவைகளையெல்லாம் ஒரு சிறிதும் லட்சியம் செய்யாமல் தனது முடிவான லட்சியத்திற்கு ஏற்றபடி நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டே வந்திருப்பதுடன் அதற்கு ஏற்ற கொள்கைகளையும், திட்டங்களையும் அமைத்துப் பரப்புவதில் தீவிரமாய்ச் சென்று கொண்டுதான் இருக்கின்றது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகும்.
சாதாரணமாய் ஒரு லட்சியம் கைகூடிற்று, அல்லது செல்வாக்குப் பெற்று விட்டது என்று சொல்லப்பட வேண்டுமானால் அந்த லட்சியத்தின் எதிரிகளால் செய்யப்படும் சூழ்ச்சிகள் என்னும் பல தத்துக்களையும் தடைகளையும் சமாளித்துத் தாண்டியாக வேண்டும்.
அவையாவன: 1. ஒரு லட்சியத்தை அதன் எதிரிகள் ஒழிக்க வேண்டுமானால் அப்படி ஒன்று இருக்கின்றது என்பதை தாங்கள் உணராதவர்கள் போலவும், உணர நேர்ந்தாலும் அதை வெகு அலட்சியமாய் கருதுகின்றவர்கள் போலவும் காட்டிக் கொள்வதன் மூலம் அதை ஒழிக்கப் பார்ப்பது. 2. அந்த லட்சியம் மேற்கண்ட அலட்சிய நிலையை தாண்டிவிடுமானால் பிறகு அதை வெகுகடினமாய் வெறுப்பது போல் காட்டுவதன் மூலம் ஒழிக்கப்பார்ப்பது. 3. பிறகு அதை திரித்துக்கூறி விஷமப் பிரச்சாரம் செய்வதன் மூலம் ஒழிக்கப்பார்ப்பது. 4.பிறகு கலகங்களாலும், கலவரங்களாலும் பிரச்சாரத்தை தடுப்பதன் மூலம் ஒழிக்கப்பார்ப்பது. 5. இவ்வளவையும் தாண்டிவிட்டால் பிறகு அக்கொள்கைகளுக்கு எதிர்ப்பிரச்சாரம் செய்வதன் மூலம் அதை ஒழிக்கப்பார்ப்பது.
இப்படியாக பல தத்துக்களையும் (தொல்லை களையும், துன்பங்களையும், எதிர்ப்புகளையும்) தாண்டி விட்டால்தான் குறைந்த அளவு ஒரு இயக்கம் சொல்வாக்குப் பெற்று விட்டது என்றாகிலும் சொல்லலாம். ஆகவே நமது சுயமரியாதை இயக்கம் இந்த தத்துக்களில் எதின் தொல்லைகளுக்கும் ஆளாகாமல் இருந்து தப்பித்துக் கொள்ளாமல், ஒவ்வொன்றிற்கும் ஆளாகி எவ்வளவோ கஷ்டங்கள் நஷ்டங்கள் அடைந்திருப்பதை யாரும் மறுக்க முடியாது.
அவை ஒவ்வொன்றையும் பற்றி விளக்க முயற் சிப்பது பழைய குப்பைகளைக் கிளறுவதேயாகும். எது எப்படி இருந்தபோதிலும் சுயமரியாதை இயக்கம் தோன்றக் காரணமே ஏழை மக்களுடையவும், பாமர மக்களுடையவும் தாழ்த்தப்பட்டு, கொடு மைப்படுத்தப்பட்டு, கஷ்டப்படும் மக்களுடையவும் பெரிதும் அவர்களுடைய நன்மைக்கும், சமத்துவத் துக்கும் என்று இருந்தாலும் இப்போது அது எல்லா மக்களுடைய சமத்துவத்துக்கும், சாந்திக்கும், திருப்திக் கும் கவலையற்ற தன்மைக்குமே பாடுபடவேண்டும் என்கின்ற லட்சியத்தைக் கொண்டிருக்கிறது.
இந்த லட்சியம் உலகத்துக்கு – மனித சமுகத் துக்கு கேடானதானாலும், அற்பமானதானாலும், அசாத்தியமானதானாலும் அதை பற்றிய கவலையில்லாமல் சுயமரியாதை இயக்கமானது தனது கருத்திலேயே கவலை கொண்டிருக்கின்றது.
ஒரு மனிதன் தான் ஒரு காரியத்தைச் சாதித்து விட்டுப் போக வேண்டும் என்பதற்காக உயிர் வாழவேண்டும் என்கின்ற அவசியத்தைச் சுயமரியாதை இயக்கம் ஒப்புக் கொள்ளுவதில்லை: ஆனால் மற்றென்னவென்றால் ஒரு மனிதன் உயிர் வாழ்ந்திருப்பதினால் அவ்வுயிர் உள்ளவரையில் காரியம் செய்ய வேண்டியது கடமை என்பதற்காக ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும் என்பதுதான் சுயமரியாதை இயக்கக்காரர்களின் வாழ்வின் லட்சியமாகும். அதாவது:
சுயமரியாதைக்காரர்களின் லட்சியம் எல்லாம் அவர்களது வாழ்வு ஒரு நல்லகாரியத்தில் ஈடுபட்டிருக்கவேண்டும். அவர்களது உயிர் (சரீரம் இயங்கும் தன்மை) ஒரு அனாவசியமானதும், அறியாததுமான ஒரு நோய்க்கோ, (அபாய) எதிர்பாராத சம்பவத்துக்கோ ஆளாகி முடிவடைந்துவிடாமல் ஒரு நல்ல காரியத்தைச் செய்வதில் பயன்பட்டு முடிவடைந்துவிட வேண்டும் என்பதைத் தவிர வேறில்லை.
காரியம் நல்லதா? கெட்டதா? என்பதற்குச் சுயமரியாதைக்காரர்களின் அளவு கருவியெல்லாம் அவர்களது பகுத்தறிவேயல்லாமல் ஆண்டவன் கட்டளையோ, பெரியோர் வாக்கோ, ரிஷிகள் மகாத்மாக்கள் என்பவர்கள் எழுதி வைத்த வேத, சாஸ்திர, புராண, நீதிகளோ அல்ல என்பதும் அவர்கள் அபிப்பிராயம்.
ஆதலால் சுயமரியாதைக்காரர்கள் வாழ்வு அவர்களது அறிவுக்குச் சரியென்று பட்டகாரியத்தில் செலவிடப்பட வேண்டியது என்பதைத் தவிர வேறில்லை. சுயமரியாதைக்காரர்கள் மனிதன் செத்து விட்டானேயானால் (சரீர அசைவு, புலன் உணர்ச்சி அடங்கி விடுமேயானால்) பிறகு அவனுக்கு வேறு எவ்வித சம்பந்தமும், தொடர்பும் உலகிலோ வேறெங்கிலுமோ கிடையாதென்பதாக கருதி இருக்கின்றவர்கள்.
சுருங்கக்கூறின், ஆத்மா என்றோ, ஜீவன் என்றோ ஒன்று இருப்பதாகவும், மற்றும் சரீரத்துக்கும், சரீரத்துள்ள உறுப்புகள், உறுப்புகளின் அமைப்புகள், அமைப்புகளினால் ஏற்படும் செய்கைகள் ஆகிய வற்றிற்கு அன்னியதான ஒரு வஸ்து இருக்கிறது என்பதாகவும் அவர்கள் ஒப்புக்கொள்வதில்லை. ஆகையால் சரீரம் இயங்கும் தன்மையில் இருக்கும்போது அத்தன்மைக்கு ஏற்ற காரியங்களைச் சாத்தியப் படக்கூடிய அளவு, அவ்வளவையும் பிரயோகித்துச் செய்து விடுவது என்கின்ற முடிவில் இருக்கிறார்கள். ஆதலால் அவர்களுக்கு கடமையைத் தவிர வேறொன்றையும் பற்றிய லட்சியமும், கவலையும் இல்லை. இந்நிலையில்தான் மனித சமுக நன்மைக்கு மாறானக் காரியங்களை அழிக்க வேண்டும் என்கின்ற தத்துவத்தில் முதலில் ஜமீன்தார்கள் தன்மையும் முறையும் ஒழிய வேண்டும் என்பது (முக்கியமானவைகளில்) ஒன்றாகும்.
மனித சமுக வாழ்வுக்கு ஜமீன்தார் தன்மை ஓர் விஷ ஜந்துக்கு ஒப்பானதாகும். மனிதர்கள் தரித்திரம், பசி முதலிய கஷ்டங்களுக்கு ஆளாகி சுகவாழ்வு இல்லாமல் அடிமை நிலையில் இருப்பதற்கு இந்த ஜமீன்தார்கள் என்னும் விஷஜந்துக்களே காரணமாகும்.
இந்த ஜமீன் முறையானது உலக வாழ்க்கைக்கு அல்லது எந்த விதத்தில் அவசியமானது என்பது நமக்கு விளங்கவில்லை. இவர்களால் மனித சமுகத்திற்கு என்ன நன்மை என்பதும் விளங்கவில்லை. பெரும் பெரும்பரப்புள்ள பூமிகளை தங்களுடையது என்று செய்து கொள்ளவும் அவற்றை பெரும் எண்ணிக்கைக் கொண்ட மக்கள் பாடுபட்டு உழுது பயிர் செய்து பாதுகாத்துத் தானியமாக்கி, ஜமீன்தாரர்களுக்குக் கொடுக்கவும், அவர்கள் தயவுசெய்து கருணை வைத்து விளைவில் ஒரு பாகத்தை பயிரிட்ட குடியானவர்களுக்குக் கொடுப்பதும், அது எந்தவிதமான காரியத்துக்கும், பிரதிப்பிரயோஜனமாய் இல்லாமல் வெள்ளாமைக்கு அடுத்த பட்டம் வரும் வரை அந்தக் குடியானவன் செத்துப் போகாமல் உயிர் வைத்து இருந்து மறுபடியும் உழுது பயிர் செய்து தானியமாக்கித் தனது குதிரில் கொண்டு வந்துகொட்டுவதற்காக வேண்டியமாத்திரம் எவ்வளவு அவசியமோ அவர்களுக்குத் தருமம் செய்யவுமாயிருக்கிறார்கள்.
மற்றபடி இந்தப்படியாக இவர்களுக்குக் கிடைத்த செல்வத்தில் மற்றொரு சிறு பாகம் சர்க்காருக்கு தருமம் செய்கிறார்கள். அதாவது இந்த செல்வத்தில் பாடுபட்டு உழைத்த குடியானவர்கள் பங்கு கேட்காமல் இருக்கவும், இந்த குடியானவர்கள் இந்த ஜமீன்தாரர்களின் அக்கிரமங்களுக்கு எவ்வித பரிகாரமும் தேடாமலிருக்கவும் லஞ்சம் என்று சொல்லுவதற்கு பதிலாகப் ‘சர்க்கார் கிஸ்தி’ என்ற சொல்லின் பேரால் ஒரு அளவு கொடுக்கிறார்கள். மற்றபடி ஒவ்வொரு ஜமீன்தாரர்களுக்கும் மீதியாகும் 10 லட்சம் 20 லட்சக்கணக்கான ரூபாய்கள் என்ன கதி ஆகின்றன என்று பார்த்தால் அதன் உண்மை நன்கு விளங்கும். மற்றும் இதுபோலவே இன்னும் இரண்டொரு கூட்டம் உண்டு? அதாவது லேவாதேவிக்காரர்கள், மில் முதலாளிகள் முதலாகியவர்களாவார்கள்.
லேவாதேவியென்பது ஒரு கொடுமையான தொழிலேயாகும். அதற்கு வேறு பெயர் சொல்ல வேண்டுமானால் சட்டப்படி கொடுமைப்படுத்திக் கொள்ளையடிப்பதேயாகும். ஜமீன் தன்மையின் பயனாய் எப்படி உலக நிலங்கள் எல்லாம் நாளாவட்டத்தில் சிலருக்கே சொந்தமாகிவிடுகின்றதோ அதே போல் லேவாதேவியென்பதும் உலக செல்வங்களையெல்லாம் சிலருக்கே சொந்தமாக்கும் சூழ்ச்சியேயாகும். இவர்களாலும் உலகத்திற்கு யாதொரு பயனும் கிடையாது. கேடே அதிகமாகும். மற்றும் மில் (யந்திரசாலை) முதலாளிகள் என்பவர்களும் பாடுபட்டு உழைக்கும் மக்கள் பயனை அனுபவித்துக் கொண்டு பெரும்பான்மை மக்களை என்றும் ஏழைகளாக – தாழ்த்தப்பட்டவர்களாக வைத்திருப்பவர்கள். இந்தக் கூட்டத்தாரும் நாட்டுக்கு அவசியமில்லாதவர்களேயாவார்கள்.
இந்த மூன்று கூட்டமும் ஒரு நாட்டில் இருக்கு மானால் அந்த நாட்டுக்கு எப்படிப்பட்ட சுயராஜ்ஜியம், குடியரசு, குடிஆட்சி கிடைத்த போதிலும் அது ஒரு விநாடி கூட ஜனநாயகமாய் இருக்க முடியவே முடியாது. ஏனெனில் மேல்கண்ட கூட்டம் எப்பொழுதும் செல்வம் பெருக்கிக் கொண்ட கூட்டமாகவும், மற்ற கூட்டம் என்றும் ஏழைக் கூட்டமாகவும் தான் இருக்கும், ஆகவே செல்வவான்கள் ஏழைகளின் வாக்கை (ஓட்டுகளை) விலைக்கு வாங்கி தாங்களே ஆட்சிக்காரர்களாய் வந்து விடக்கூடும். இதற்கு உதாரணம் வேண்டுமானால் சென்னை அரசாங்க நிர்வாகத்தையும் சென்னை மாகாண ஸ்தலஸ்தாபன நிருவாகத்தையும் பார்த்தால் நன்றாய் விளங்கும். சென்னை மாகாண முதல் மந்திரி ஒரு ஜமீன்தார், சென்னை (நகர) ஸ்தல ஸ்தாபனசபைத் தலைவர் ஒரு லேவாதேவிக்காரர் என்பதும் பிரத்திட்ச உண்மையாகும். வெளி ஜில்லாக்களிலும் இதுபோலவேதான் ஒரு பெரிய முதலாளியோ, அல்லது லேவாதேவிக்காரரோ, அல்லது ஜமீன்தாரோ தான் தலைவர்களாய் இருக்கிறார்கள்.
இவர்கள் அந்தப் பதவிகளை அடைந்ததற்கு காரணம் எல்லாம் அவர்கள் பண(க்கொழுப்பு) விசேஷமேயொழிய புத்தி (கொழுப்பு) விசேஷமல்ல என்பது எந்த மனிதனுக்கும் தெள்ளென விளங்கும் சேதியாகும்.
ஆதலால் இந்தக் கூட்டங்கள் தான் மனித சமுகநீதிக்கும், சமத்துவத்துக்கும், சகோதரத்துவ உரிமைக்கும் கரையான் போன்றவர்கள் ஆவார்கள். இந்த உண்மைகளை எல்லாம் உணர்ந்த சேலம் ஜில்லாக்காரர்கள் சுயமரியாதை மகாநாடுடன் ஜமீன்தாரல்லாதார் மகாநாடு கூட்டினது பாராட்டத் தக்கதாகும். இனி அடுத்து கூடும் மகாநாடுகளில் லேவாதேவிக்காரர் அல்லாதார் மகாநாடு முதலியவைகளும் கூட்டி இக் கூட்டத்தார்களை பொது வாழ்வில் தலை காட்டாமல் செய்யவேண்டியது சுயமரியாதை இயக்கத்தார்களின் முக்கிய கடமைகளில் முதன்மையானதென்று தெரிவித்துக் கொள்ளுகிறோம். மற்றும் சேலம் ஜில்லா 2ஆவது சுயமரியாதை மகாநாட்டை நடத்திக் கொடுத்த பேளுக்குறிச்சி மிட்டாதார் தோழர் சோமசுந்தரம் அவர்களையும் தோழர் காவேரி அவர்களையும் தோழர் எஸ். வி. லிங்கம் அவர்களையும் மற்றும் சேலம், ராசிபுரம் வாலிப தோழர்களையும், பெரியோர்களையும் பாராட்டுகின்றோம்.
குடிஅரசு – தலையங்கம் – 27.08.1933