சென்னை, ஜூலை 23– தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 574 தற்காலிக கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நேற்று முன்தினம் (21.7.2025) தொடங்கியது. சென்னை ராணி மேரி கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின்போது உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் இதனைத் தொடங்கி வைத்தார்.
இந்த ஆண்டு புதிதாக 15 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரை, மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க இந்த 574 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
கவுரவ விரிவுரையாளர் பணியிடங்கள் வெளிப்படைத்தன்மையுடன் நிரப்பப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
இந்தப் பணிக்குத் தகுதியுடையவர்கள் www.tngasa.org என்ற இணையதளம் வாயிலாக ஆகஸ்ட் 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 34 பாடப்பிரிவுகளுக்கான 574 பணியிடங்களின் விவரங்கள் இணையதளத்தில் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசின் நெறிமுறைகளைப் பின்பற்றியும், கல்வித்தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தத் தற்காலிக நியமனங்கள், அரசு கல்லூரிகளில் மாணவர்களுக்குத் தடையற்ற கல்வியை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.