சென்னை, ஜூலை 23- தேசிய கல்விக் கொள்கையை (NEP) கடுமையாக எதிர்ப்பதாகவும், அதனை எந்தக் காரணம் கொண்டும் ஏற்க மாட்டோம் என்றும் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
‘மதயானை’
அமைச்சர் அன்பில் மகேஸ் தனது பதிவில், “9 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில்தான் ஒன்றிய அரசுக்கே பாடம் புகட்டும் விதமாக தேசிய கல்விக் கொள்கையின் அபாயத்தை எடுத்துரைத்தார் முத்தமிழ் அறிஞர் கலைஞர். அவர் கொடுத்த “மதயானை” எனும் தலைப்பையும், அவரின் வழிகாட்டுதலையும் எடுத்துக்கொண்டு, கழகத் தலைவர்-மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம். எதிர்ப்போம். ஏற்க மாட்டோம்!”
புதிய கல்விக் கொள்கை
கடந்த 2016 ஆம் ஆண்டு, “புதிய கல்விக் கொள்கை மாநிலங்களுக்குப் பொருந்துமா?” என்ற தலைப்பில் கலைஞர் எழுதியிருந்த கட்டுரையை அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது பதிவில் இணைத்துள்ளார். கலைஞர் அப்போதே தேசிய கல்விக் கொள்கையின் எதிர்காலத் தாக்கங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்ததை சுட்டிக்காட்டி, திமுக அரசு அந்தக் கொள்கையைத் தொடர்ந்து எதிர்க்கும் என்பதை அமைச்சர் அன்பில் மகேஸ் இதன் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். தேசிய கல்விக் கொள்கை மாநிலங்களின் தனித்தன்மைக்கும், கல்வி வளர்ச்சிக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்பதே தமிழ்நாடு அரசின் நிலைப்பாடாக உள்ளது.